பதிவு செய்த நாள்
22
மார்
2016
12:03
மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு, நாளை திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இந்த முறை இட நெருக்கடியால், திருக்கல்யாணம் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனிப் பெருவிழாவின், ௧௦ம் நாளான நாளை இரவு, 7:45 மணியளவில், கபாலீஸ்வரர், கற்பகாம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது.ஒவ்வொரு ஆண்டும், சனீஸ்வரர் சன்னிதி அருகில், மேடை அமைத்து அதில் திருக்கல்யாணம் நடக்கும். வடக்கு மற்றும் கிழக்கு பிரகாரங்களில் பக்தர்கள் அமர்ந்து, திருக்கல்யாணத்தை தரிசித்தனர்.இந்த முறை, கோவிலின் வடக்கு பிரகாரத்தில், பிரம்மாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. அதனால், வழக்கமான இடத்தில் நிகழ்ச்சி நடந்தால், அதிகளவு பக்தர்கள் அதில் கலந்து கொள்ள முடியாது. இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது:ராஜகோபுர வாசலிலோ, வடக்கு - கிழக்கு மாடவீதிகள் சந்திக்கும் மாங்கொல்லையிலோ, திருக்கல்யாணத்தை நடத்தினால், பெருவாரியான பக்தர்கள் தரிசிக்க ஏதுவாகும். மேலும் ஆங்காங்கே, பெரிய அளவிலான தொலைக்காட்சி பெட்டிகளை வைத்து, நிகழ்ச்சியை நேரலை ஒளிபரப்பு செய்ய வேண்டும். இவ்வாறு, பக்தர்கள் தெரிவித்தனர்.
120 அன்னதான பந்தல்கள்: மயிலாப்பூரில் நேற்று, அறுபத்து மூவர் விழாவை முன்னிட்டு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை முதல் மந்தைவெளி வரை, மொத்தம் ௧௨௦க்கும் மேற்பட்ட தனியார் அன்னதான பந்தல்கள் மூலம், அன்னதானம், தண்ணீர், மோர், குளிர்பானங்கள் வினியோகம் நடந்தது.அன்னதானத்தில், சாம்பார் சாதம், தயிர் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், பிரிஞ்சி, தக்காளி சாதம், சர்க்கரை பொங்கல், சுண்டல், கேசரி ஆகியவை வழங்கப்பட்டன. கபாலீஸ்வரர் கோவில் அபிஷேக வழிபாட்டுக் குழு நிறுவனர், சுந்தரம் பிள்ளை கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளாக நாங்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். பக்தர்கள் பல இடங்களில் வழங்கும் உணவுகளை பெற்று, வீணாக தரையில் கொட்டுகின்றனர். வீணாகும் உணவுகளை வைத்து, ஓர் ஆண்டுக்கு அன்னதானம் வழங்கலாம். அடுத்த ஆண்டாவது, இந்த தவறை பக்தர்கள் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -