பதிவு செய்த நாள்
29
மார்
2016 
11:03
 
 பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் 16ம் நுாற்றாண்டை சேர்ந்த மண்டப கல்துாண்கள், சிற்பங்கள் பழமை மாறாமல் மூலிகை மருந்து மூலம் புதுப்பிக்கப்படுகிறது.பழநி தைப்பூச விழா நடைபெறும் பெரியநாயகியம்மன் கோயில் பலநுாற்றாண்டுகள் வரலாற்று சிறப்புமிக்கது. இது பழநி ஊர்க்கோயில் என அழைக்கப்படும். திருவாயிற்பெருங்கோபுரம், தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் ராஜகோபுரம் போல மேல்மாடங்கள் இன்றி உள்ளது. இக்கோபுரம் விஜயநகரத்து அரசர்களுள் ஒருவரால் தொடங்கி, என்ன காரணத்தாலோ பாதியில் விடப்பட்டது.
கோயில் உட்பிரகாரம், வெளிப்பிரகாத்தில் நுாற்றுக்கு மேற்பட்ட கல்துாண்கள் உள்ளன. அவற்றில் தமிழர்களின் பாரம்பரிய நடனக் கலைகள், முருகன், பத்ரகாளி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட சுவாமிசிலைகள், மன்னர்கள், யானை, குதிரை, மயில், அன்னம் உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 16ம் நுாற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டது. தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக பெரிய நாயகியம்மன் கோயில் விளங்குகிறது. இந்த கோயிலில் கடைசியாக 1998ல் குடமுழுக்கு விழா நடந்தது. அதன்பின் தற்போது ரூ.96 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது. இதில் புதிய தரைத்தளங்கள், கோபுரங்களில் வர்ணம் பூசுதல், சுதைகளை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதில் கல்துாண்களில் உள்ள சிற்பங்களை பழமை மாறாமல் மூலிகை மருந்து மூலம் புதுப்பிக்கும் பணி கும்பகோணத்தை சேர்ந்த தனியார் சிற்பக்கலை பாதுகாப்பு நிறுவன கலைஞர்கள் மூலம் நடக்கிறது. சிற்பக்கலை பாது காவலர் குணசேகரன் கூறுகையில், “பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் உள்ள மண்டப கல்துாண்கள், அதிலுள்ள சிற்பங்களை பழங்கால முறைப்படி வெல்லம், வாழைப்பழம், சோற்றுகற்றாழை, கடுக்காய், சுண்ணாம்பு உள்ளிட்டவை கலந்த மூலிகை கலவை மூலம் கல்மண்டப விரிசல்கள், சிதைந்த சிற்பங்களை புதுப்பிக்கிறோம். ஏற்கனவே ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட கோயில்களில் பழமை மாறாமல் சிற்பங்களை மூலிகை மருந்து மூலம் புதுப்பித்துள்ளோம்,” என்றார்.