பழநி: கல்வி போதிக்கும் ஆசிரியர்கள், அறிவுரை கூறும் ஆன்மிக பெரியோர்கள், பெற்றோர் மதிப்புக்குரியவர்கள் என்பதால், அவர்களின் பாதங்களை தொட்டு வணங்குவோம். வணங்கி ஆசி பெறுவோம். அதுவே கடவுளின் திருப்பாதம் தரிசன வழிபாடு என்றால்... எத்தகைய பலன் தரும். ஜென்ம பாவ விமோசனம், மறுபிறப்பில்லா முக்தியை அளிக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர் ஆன்மிக பக்தர்கள். தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த முருகப்பெருமானை “இறைவனுக்கே இறைவன், தந்தைக்கு பாடம் சொன்ன குருபரன், அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் என போற்றி புகழ்கின்றனர்.
கைலாய மலையில் சிவபெருமான் ஞானப்பழத்திற்காக நடத்திய (திருவிளையாடல்) நாடகத்தின்போது முருகப்பெருமான் கோபித்துகொண்டு மலைமீது ஏறிநின்ற இடம் தான் மூன்றாம் படை வீடான பழநி எனப்படுவதாக ஐதீகம். அப்படி கோபித்து வந்து நின்ற இடம், தற்போது பழநி மலையில் ரோப்கார் மேல்தளத்தின் அருகே உள்ளது. அங்கு பக்தர்கள் ஞானதண்டாயுதபாணியின் திருப்பாதத்தையும், மயிலையும் ஒருசேர தரிசனம் செய்யமுடியும். பழனியாண்டவரின் திருப்பாதத்தை தரிசித்தால் ஜென்ம பாவ விமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான பக்தர்கள் தினமும் பழநியில் குவிகின்றனர். நம் நாட்டவர்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்டவெளிநாட்டவரும் அதிகளவில் தரிசனம் செய்கின்றனர். நீங்கள் இன்னும் போகாதவரா இருந்தா ஒரு எட்டு போயிட்டு வரலாமே.