தெலுங்கு வருட பிறப்பு: கத்தி போட்டு ஊர்வலம் வந்த வீரக்குமாரர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2016 12:04
அம்மாபேட்டை: தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, சேலத்தில் உள்ள தெலுங்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் தங்கள் குல தெய்வமான சவுடேஸ்வரி அம்மனை கத்தி போட்டுக்கொண்டு ஊர்வலமாக அழைத்து வந்தனர். சேலம், பொன்னம்மாபேட்டை பகுதியில், தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு புத்தாடை அணிந்து கொண்டு வழிபட்டனர். வேப்பம்பூ மற்றும் வெல்லம் கலந்து தயார் செய்த பிரசாதத்தை உண்டனர். சவுடேஸ்வரி அம்மன் மற்றும் ராமலிங்க சுவாமிகளுக்கு சிறப்பு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சின்ன அம்மாபேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு, ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். சக்தி அழைப்பு ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரக்குமாரர்கள் என்று அழைக்கப்படும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தங்கள் இஷ்ட தெய்வமான சவுடேஸ்வரி அம்மனுக்காக விரதம் இருந்து, கையில் இரண்டு கூரிய கத்திகளால் தங்கள் உடலில் கீறிக்கொண்டு, கத்தி போட்டபடி சக்தி தேவியை ஊர்வலமாக அழைத்து வந்தனர். சேலம் டவுன் வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில், உற்சவர் அம்மனுக்கு முந்திரி, பாதாம், பிஸ்தா, அத்திப்பழம், பேரீட்சை பழம் மற்றும் உலர் திராட்சை உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பருப்பு தானியங்களால் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வாசவி அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.