பொதுவாக விநாயகரின் தும்பிக்கை இடதுபக்கமாகத்தான் வளைந்திருக்கும். ஒரு சில இடங்களில் மட்டுமே வலம்புரி விநாயகரைத் தரிசிக்கலாம். கும்பகோணம் அருகிலுள்ள ஒரு தலத்துக்கே திருவலஞ்சுழி என்ற பெயர் இருக்கிறது. இங்கு வலம்புரி விநாயகர் சந்நிதி உள்ளது. புகழ்பெற்ற ஸ்வேத விநாயகரும் (கடல் நுரையால் செய்யப்பட்டவர்) இங்கே இருக்கிறார். சங்குகளில் வலம்புரி சங்குக்கு அதிக விசேஷம். அதுபோல, வலம்புரி விநாயகர் வடிவத்தில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இந்த வளைவு ஓம் என்ற பிரணவ மந்திரத்தை ஒத்துள்ளது. இடதுபக்கமாக தும்பிக்கை சுழிந்திருந்தால் ஓம் என்ற பிரணவ வடிவம் கிடைக்காது. வலம்புரிக்கு இத்தகைய சிறப்பு உண்டு. அவரது வாயின் வலதுஓரம் ஆரம்பித்து, கன்னம், மத்தகம் (சிரசு) ஆகியவற்றை சுற்றிக்கொண்டு, இடதுபக்கம் தும்பிக்கை வழியாக இறங்கி, அதன் சுழிந்த முடிவுக்கு வருவது ஓம் என்பதை ஒத்திருக்கும்.