பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் கூடாரவல்லி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2026 11:01
பரமக்குடி; பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் கூடாரவல்லி விழா கோலாகலமாக நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவை கோஷ்டியினரால் ஒவ்வொரு ஆண்டும் கூடாரவல்லி விழா நடத்தப்படுகிறது. இதன்படி ஆண்டாள், பெருமாளின் திருவடியை அடைய அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாளிடம் 108 அண்டாவில் அக்கார அடிசில்(சக்கரை பொங்கல்) மற்றும் 108 அண்டாவில் வெண்ணெய் படைப்பதாக வேண்டி இருந்தார். பின்னாளில் இந்த வேண்டுதலை ராமானுஜர் அழகர் கோயிலில் நிகழ்த்தினார். இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி 27 அன்று ஆண்டாள், பெருமாளிடம் சேர்க்கையாகி மாலை மாற்றல் வைபவம் நடக்கிறது. அப்போது தலா 108 வட்டிலில் அக்கார அடிசில், வெண்ணை படைக்கப்பட்டது. காலை 5:45 மணிக்கு ராமானுஜர் ஆடி வீதி வலம் வந்தார். மகா தீப ஆராதனைக்கு பின் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. *எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி பெருமாள், ஆண்டாள் மாலை ஆற்றல் வைபவம் நடந்தது. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை ஊஞ்சல் சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.