பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
12:04
கேரளாவின் பரவூர் புற்றிங்கல் கோவில் திருவிழாவில் நடந்த, வாணவேடிக்கை போட்டி, பலருடைய உயிரைக் குடித்தது மட்டுமின்றி, தீக்காயங்களுடன், 300க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கேரளாவில் வாணவேடிக்கைகளுடன் கூடிய கோவில் திருவிழா வழக்கமாக உள்ளது. யானைகள் அணிவகுப்பும், வாணவெடிகளும், பக்தர்களையும், சுற்றுலா ஆர்வலர்களையும், கேரளாவில் அதிகம் ஈர்க்கும்.
ஆனால், நுாறாண்டுகள் பழமையான புற்றில் வழிபடும் தேவி அமைந்த இக்கோவிலில் இத்தடவை நடந்த விபரீதத்தை எப்படி, கோவில் நிர்வாகம் கட்டுப்பாடு இன்றி அனுமதித்தது என்பது கேள்வி.இப்பிரச்னையை கையாண்ட ஐகோர்ட், அதிக சப்தம் கொண்ட வாணவெடிகளை அனுமதிக்கக் கூடாது என்றும், இரவு நேர வாணவேடிக்கைகளை முறைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
எல்லாவற்றையும் விட, சீன அதிபர் உட்பட பல வெளிநாட்டுத் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கவலை தெரிவித்திருப்பது, மத சம்பந்தமான விழாவில் ஏற்பட்ட பலி என்றாலும், அதை இயற்கை பாதிப்பு போல கருதும் போக்கு இருப்பது சிறப்பு. தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் கோவில் விழாக்களில் வெவ்வேறு சம்பிரதாய நடைமுறைகள் உள்ளன. இவை காலம் காலமாக பின்பற்றப்படுகின்றன. கோவில்களுக்கு குறைவாக பக்தர்கள் வந்த காலம் மாறி, கூட்டம் கூட்டமாக இப்போது படையெடுப்பது வழக்கமாகி உள்ளது. ஆகவே மாநில அரசு, இப்பிரச்னைகளை இனி கையாளவும், கோவில் நிர்வாக அமைப்புகள் சீராக இயங்கவும் வழிகண்டாக வேண்டும். ஏனெனில், வாணவேடிக்கைக்கு தற்போது பயன்படுத்தும் மருந்துப் பொருட்களில் பொட்டாசியம் குளோரேட் முக்கியமாக உள்ளது. வர்ண ஜாலங்கள், ஓரளவு உயரம் சென்றதும் பயங்கர சப்தத்துடன் வெடிப்பது ஆகிய ஆபத்தான வேடிக்கைகள் விரும்பப்படும் காலமாகிவிட்டது. பைரோ டெக்னிக்ஸ் என்ற இந்த நவீன முறை பட்டாசுகள் பல விபத்துகளை அதிகரிக்க காரணமாக உள்ளன. இதில் சீன மூலப்பொருட்கள், தயாரிப்பு உத்தியும் சேருகிறது. இதை தடுப்பது முக்கியமான பணியாகும். ஒட்டுமொத்தமாக கோவில் திருவிழா நடைமுறைகளே வேண்டாம் என்று பேச ஆரம்பித்தாலோ அல்லது அரசமைப்பு சட்டம், ஜனநாயகத்தில் உள்ள சட்டங்களுக்கு இது பொருந்துமா என்ற வாதமோ முன்வைக்கப்பட்டால், அது அர்த்தமாகாது. வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறும் ஆயிரக்கணக்கான மதவிழாக்கள் இந்தியாவில் பல புதுமைகளை கொண்டவை. ஜாதி, மத எல்லைகளைத் தாண்டியவை. ஏதாவது பிரச்னைகள் வெடித்ததும், அதை விவாதமாக்குவது அதிகரித்திருக்கிறது.
இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்பதுடன், பெரிய அளவில் தீக்காயங்கள் பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு வர நீண்ட நாட்களாகும் என்பது உண்மை. அது மட்டும் அல்ல; தீக்காயங்கள் என்பது, தோலில் ஆக்சிஜன் ஊடுருவுவதைத் தடுத்து, பல்வேறு நோய்க்கூறுகளை ஏற்படுத்தி, சிறுநீரகங்களைக் கூட செயலிழக்க வைத்துவிடும்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டி, உடனடியாக சர்வகட்சி கூட்டத்தை கூட்டி முடிவு காண முன்வந்திருக்கிறார். இப்போது தேர்தல் நேரம் என்பதால், இந்த முடிவு ஒரு பரபரப்பைத் தருமே தவிர, தீர்வைத் தராது. மேலும் கேரள கோவில்களில், இம்மாதிரி விபத்துகளுக்கு இன்சூரன்ஸ் செய்யும் நடைமுறை இருப்பதாகவும், அது இன்னமும் அதிக அளவு பணம் தரும் முறையில் நடைமுறை ஆக்கப்படாததும் தகவலாக வெளிவந்திருக்கிறது.
அத்துடன், தீக்காயம் சிறிய அளவில் அடைந்த பக்தர்கள் பலரும், மருத்துவமனையில் இருந்து அளித்த பேட்டிகளில், வாணவேடிக்கையை தடுக்கும் வகையில் கருத்துக் கூறவில்லை என்பதையும் ஆலோசிக்க வேண்டும். பயங்கரவாதிகளால் பிரச்னை, வங்கிகளுக்கு வாங்கிய கடனைத் தர மறுக்கும் சாமர்த்தியசாலிகள் எண்ணிக்கை பெருக்கம், பல்வேறு புதிய உத்திகளில் படுகொலைகள் என்று புதிய புதிய பிரச்னைகள் வரும் காலத்தில், கோவில் வாணவேடிக்கை விபரீதமும் விவாதப் பொருளாகி உள்ளது.