தவறு செய்தவர்களை புண்படுத்தாதீர்கள்! பண்படுத்துங்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2016 12:05
காஞ்சிப் பெரியவருக்கு தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற குமரேசன் என்பவர் கூறிய சம்பவம் இது. சங்கர மடத்தில் சுவாமிக்கு நைவேத்யம் செய்வதற்காக தனி அறை இருந்தது. இதனை நைவேத்யக்கட்டு’ என்று சொல்வார்கள். அதற்குள் பக்தர்கள் யாரும் நுழைய முடியாது. பித்தளை, வெண்கலம், ஈயம் பூசிய பாத்திரங்கள், காய்கறிகள், பழங்கள் என அறை முழுவதும் சாமான்கள் வைக்கப்பட்டிருக்கும். கண்டிப்பு குணம் கொண்ட ஒருவரின் மேற்பார்வையில் அந்த அறை இருந்தது. ஒருநாள் அந்த அறையில் இருந்த புடலங்காய் ஒன்றைக் காணவில்லை. விஷயம் அறிந்த பொறுப்பாளர் மடத்தில் இருந்த தொண்டர்களை அழைத்து சத்தமிட்டார். அனைவருக்கும் குறிப்பிட்ட ஒரு நபர் மீது சந்தேகம் எழுந்தது. அந்த தொண்டர் நடந்து கொண்ட விதத்தில் இருந்து. புடலங்காயை எடுத்துச் சென்றவர் அவரோ என சந்தேகப்பட வைத்தது. அன்றிரவு காஞ்சிப் பெரியவரின் காதிற்கு இந்த விஷயம் போனது. மறுநாள் காலையில் அந்த தொண்டர் பணிக்கு வந்ததும் பெரியவரை வணங்கினார். அவரிடம் பெரியவர் நேரடியாக புடலங்காயை எடுத்தாயா?’ என்று கேட்காமல், “உன் அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?” என்று மட்டும் கேட்டார். அதாவது முந்திய நாள் அந்த தொண்டரின் தந்தைக்கு திதி. திதியன்று புடலங்காய் வைப்பது வழக்கம். இதை மனதில் கொண்டு பெரியவர் அப்படி கேட்டார். புடலங்காயை எடுத்த அந்த தொண்டரும், எப்படியோ பெரியாவாளுக்கு விஷயம் தெரிந்து விட்டதே என்று எண்ணி கண்ணீர் விட்டார். பெரியவர்,“சரி..சரி..இதற்காக வருத்தப்படாதே! போய் வேலையைக் கவனி” என்று மட்டும் சொல்லி அனுப்பி வைத்தார். தவறு செய்தவரின் மனம் வருந்தாமல் பேச வேண்டும். அதே நேரம் அவர் அந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்ற விதத்தில் பெரியவரின் செயல்பாடு அமைந்தது. (மகான் காஞ்சிப் பெரியவர்)