பதிவு செய்த நாள்
23
மே
2016
05:05
ஸ்ரீராமானுஜரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவரான முதலியாண்டான் எனும் ஆசார்யரின் வரலாறு இது. ஸ்ரீராமானுஜரின் சகோதரியான நாச்சியா ருக்கும், ஆனந்த தீக்ஷிதருக்கும் திருக்குமாரராய் ஸௌம்ய வருஷம் ( கி.பி. 1027) சித்திரை மாதம் புனர்வசு நக்ஷத்திரத்தன்று அவதரித்தார். பெற்÷ றார் இட்ட பெயர் தாசரதி. ஸ்ரீராமானுஜர் சன்யாசம் பெற்றுக் கொண்டவுடன் அவரை அடிபணிந்து அவருடைய சீடரானார். பின்னாளில் சீடர்கள் அனைவருக்கும் இவரே முதல்வராயிருந்தபடியால் முதலியாண்டான் எனப்பட்டார். திருக்கோட்டியூர் நம்பி, ஸ்ரீராமானுஜருக்கு திருமந்திரோப÷ தசம் செய்வதற்கு இசைந்த போது தண்டும் பவித்திரமுமாய் அவர் மட்டுமே வர வேண்டும் என்று நியமித்தார். ராமானுஜரோ, கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும் கூட அழைத்துச் சென்றார். தேவரீருடைய நியமனப்படியே தண்டும் பவித்திரமுமாக வந்துள்ளேன். இந்த முதலியாண்டானே திரிதண்டம்; ஆழ்வானே பவித்திரம் என்று அருளிச் செய்தார். இவ்வாறாக எம்பெருமானுடைய திரிதண்டமாகிற ஸ்தானத்தை அடைந்தவர் முதலியாண்டானே.
திருக்கோட்டியூர் நம்பிகள் உபதேசித்த சரமச்லோகார்த்தத்தை இராமானுஜர் ஆழ்வானுக்கு மட்டும் உபதேசித்தார். முதலியாண்டானும் உடைய வரைப் ப்ரார்தித்தபோது, திருக்கோட்டியூர் நம்பியிடமே கேளும் என்று அனுப்பிவிட்டார். திருக்கோட்டியூர் நம்பிகளோ முதலியாண்டானைப் பார்த்து நீர், கல்வி, செல்வம், குலம் இவை மூன்றால் ஏற்படும் கர்வத்தை விலக்கினீரானால் எம்பெருமானாரே உமக்கு உபதேசிப்பார் என்று கூறிவிட்டார். அப்படியே முதலியாண்டானும் எம்பெருமானாரை அணுக மகிழ்ச்சியுடன் உபதேசித்தார். இவருடைய செருக்கற்ற தன்மையை உலகுக்கு நிரூபிக்க ராமானுசர் தம் ஆசார்யரான பெரிய நம்பிகளின் குமாரத்தி அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியாய் அனுப்பினார். முதலிய õண்டானும் தம் பெருமைகளையெல்லாம் மறைத்துக் கொண்டு அத்துழாயின் பக்கம் சென்று ஒரு பணிப்பெண் செய்யும் பணிகளையெல்லாம் மன நிறைவுடன் செய்தார். ஆசார்ய நியமனத்தின் பேரில் இவருக்கிருக்கும் அளவற்ற பக்தியை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது.
பிறகு ஸ்ரீராமானுஜர் ஸ்ரீபாஷ்யமியற்றுவதற்காக திக்விஜயம் புறபட்டபோது ஸ்ரீரங்கம் கோயிலின் ஸகல அதிகாரங்களையும் நிர்வகிக்கும் பொறு ப்பை முதலியாண்டானிடம் ஒப்படைத்தார். மேலும் தாம் துறவறம் ஏற்றபோது முதலியாண்டானைத் தவிர்த்து அனைத்தையும் துறந்தேன் என்றே கூறினார். பின்னாளில் எம்பெருமானார் கூரத்தாழ்வானைப் பிரிந்து மேல்நாடு எழுந்தருளநேர்ந்தபோது ஆண்டானை உசாத்துணையாக அழைத்துச் சென்றார். அவரைக் கொண்டு மேல் நாட்டில் பற்பல காரியங்களை சாதித்தார் குறிப்பாக மேல்கோட்டையில் பஞ்ச நாரயணர்கள் பிரதிஷ்டை எம்பெருமானார் நியமனத்தின்பேரில் முதலியாண்டான் செய்ததாகும். எம்பெருமானாருடைய திருவடி நிலைகளுக்கு முதலியாண்டான் என்றே தி ருநாமம். யதிராஜ பாதுகா என்ற சிறப்புப்பெயர் இவர் ஒருவருக்கேயுண்டு. முதலியாண்டான் எனும் ஆசார்யரின் அவதார ஸ்தலமான பேட்டை என தற்போது வழங்கப்படும் இவ்வூர் பூந்தமல்லியிலிருந்து 4 கி.மீ. தூரத்திலுள்ளது. சென்னையிலிருந்து மேப்பூர் செல்லும் பேருந்துகள் (நம்பர் 63) இவ்வூர் வழியாக செல்கின்றன. பூந்தமல்லியிலிருந்து இந்த பேருந்து மூலமாகவோ, இதர வசதிகளிலோ இவ்வூருக்குச் செல்லலாம். பச்சை பெரு மாள் கோயில் என்றும் பெயருண்டு.