மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பம் சீரமைக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2016 12:05
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பத்தை சீரமைத்து தண்ணீர் தேக்கவும், அதை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கி.பி.13ம் நுாற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னருக்கும், ஆண்டிபட்டிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், பலரும் போற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட முடியாதவர்களின் குறையைப்போக்கவே, அதே அமைப்பில் ஆண்டிபட்டியில் கோயில் கட்டி அவர் வழிபட ஏற்பாடு செய்ததாகவும் இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இக்கோயிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள், கடைகள் இருந்தும் பல ஆண்டாக முறைப்படுத்தப்படாமல் உள்ளது. கோயிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை, வாடகைகள் முறையாக வசூலிக்கப்படுகிறதா என்ற குழப்ப நிலையும் உள்ளது. கடந்த 30 ஆண்டுக்கு முன் பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் கிடந்த இக்கோயிலை ஆண்டிபட்டி, சக்கம்பட்டி பகுதி பழநி பாதயாத்திரை பக்தர்கள் குழுவினர் அறநிலையத்துறையின் அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்தினர்.
12 ஆண்டுக்குப்பின் மீண்டும் இதே குழுவினர் அறநிலையத்துறையுடன் இணைந்து கும்பாபிஷேகம் நடத்தினர். தற்போது கோயிலில் தினமும் மூன்று வேளை பூஜைகள் தொடர்கிறது. பல்வேறு கிராமங்களைச்சேர்ந்தவர்கள் இங்கு திருமணம் முடித்து செல்கின்றனர். தமிழக அரசின் ஒருநேர அன்னதானத்திட்டமும் தொடர்கிறது. நகர் பகுதியில் சிறப்பு பெற்ற கோயில் முன்புறம் உள்ள தெப்பம் பல ஆண்டாக பராமரிப்பின்றி கிடக்கிறது. தெப்பத்தை சுற்றி உள்ள குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீர், குப்பை தெப்பத்தில் குவிகிறது. ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.,தங்கதமிழ்செல்வன் இரு ஆண்டுக்கு முன் கோயில் தெப்பத்தை சீரமைக்க ரூ. 20 லட்சம் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ஒதுக்கித்தருவதாக அறிவித்தார். இருப்பினும் தெப்பத்தை சீரமைப்பதற்கான எந்த வேலையும் மேற்கொள்ளப்படவில்லை. புதிதாக பொறுப்பேற்கும் அரசு மூலம் ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாடு நிதி மூலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். அதைச்சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.