பதிவு செய்த நாள்
08
செப்
2011
11:09
திருச்சி: திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில், உலக நன்மைக்காக நடக்கும், சதசண்டி யாகம் இன்று (8ம் தேதி) நிறைவடைகிறது.திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில், உலக நன்மைக்காக, சதசண்டி யாகம் பெருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.முதல்நாள் காலை ஆறு மணி முதல் 12 மணி வரை அம்மனிடம் அனுமதி பெறுதல் வைபவம் மற்றும் கணபதி ஹோமம் நடந்தது.மாலை ஐந்து மணி முதல் இரவு 9 மணி வரை நவக்கிரக வழிபாடு, புனித நீர் நிரம்பிய கும்பம் வைக்கப்பட்டு, தீபராதனை, தேவியர் போற்றி வழிபாடுகள் நடந்தது.நேற்று காலை ஏழு மணி முதல் 12 மணி வரை, முதல்கால சதசண்டி யாகமும், சுமங்கலி, கன்னியர் வழிபாடு மற்றும் தீப வழிபாடு நடந்தது. மாலை 5.30 மணி முதல் இரவு ஒன்பது மணி வரை, இரண்டாம் கால சதசண்டி யாகம் நடந்தது. யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று (8ம் தேதி) காலை ஏழு மணிக்கு கணபதி ஹோமத்துடன் வழிபாடு துவங்குகிறது. மதியம் 12.15 மணிக்கு பெருவேள்வி நிறைவு தீப வழிபாடு நடக்கிறது.மதியம் ஒரு மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், இரவு ஏழு மணிக்கு பெருந்தீப ஒளி வழிபாடுடன் நிறைவடைகிறது.