பெற்றவர்களுக்கு சேவை: இந்த உலகில் பல சோதனைகளை சந்திப்பவனின் பின்னணியை ஆராய்ந்தால், அவன் தாய் தந்தையை கவனிக்காதவனாகத் தான் இருப்பான். “தாய் தந்தையர்க்கு துன்பம் செய்வதைத் தவிர மற்ற எல்லா பாவங்களுக்கும் அல்லாஹ் மன்னிப்பளிக்கின்றான். பெற்றோர்களுக்கு துன்பம் செய்தவனுக்கு மரணத்திற்கு முன் தண்டனை வழங்கி விடுகின்றான்,” என்கிறார் நபிகள் நாயகம்.
குர்ஆனில் அல்லாஹ், “தாய் தந்தையரிடம் கருணையோடும், கனிவோடும் பழகுங்கள். அவர்கள் தான் உங்களை அறியாப்பருவத்தில் வளர்த்துப் போஷித்தவர்கள்,” என்று அழகாகச் சொல்கிறான். ஒருமுறை நாயகத்திடம் ஒருவர் வந்து, “அண்ணலாரே! பாவம் ஒன்றைச் செய்து விட்டேன். அதில் இருந்து மீள வழியிருக்கிறதா?” என்றார்.
அண்ணலார் அவரிடம், “உமக்கு தாய் இருக்கிறாரா?” என்றதும், “இல்லை” என பதிலளித்தார் வந்தவர். “சிற்றன்னை இருக்கிறாரா?” என்றதும், ஆம் என்றார். “அப்படியானால் உமது சிற்றன்னைக்கு சேவை செய்யும்,” என நாயகம் கூறினார்.தாயின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது என்பதை உணர்ந்து, பெற்றவர்களுக்கு சேவை செய்வதை கடமையாகக் கொள்ள வேண்டும்.