பதிவு செய்த நாள்
27
ஜூன்
2016
12:06
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஏழு திருச்சுற்று சுவர்களையும், பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.தமிழகத்திலேயே, ஏழு திருச்சுற்றுகளை கொண்ட மிகப் பெரிய கோவிலாக திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் திகழ்கிறது. கோவிலின் உட்புறத்தில் திருவுண்ணாழி, ராஜமகேந்திரன், குலசேகரன், ஆழிநாடன், அகளங்கன் திருச்சுற்றுகள் அமைந்துள்ளன. கோவிலுக்கு வெளிப்புறத்தில் திருவிக்கிரமன், கலியுகராமன் ஆகிய இரண்டு சுற்றுகள் அமைந்துள்ளன. இவற்றை உத்தர வீதி என்றும், சித்திரை வீதி என்றும் அழைக்கின்றனர்.இந்த ஏழு சுற்று பிரகாரங்களின் மதில் சுவர்களும், கோவில் கும்பாபிஷேகத்தின் போது புதுப்பிக்கப்படவில்லை. தற்போது, 30 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தற்போது, சித்திரை வீதியில் உள்ள மதில் சுவரில், பழைய காரை பூச்சுகள் நீக்கப்பட்டு, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மற்ற திருச்சுற்று சுவர்களும் புதுப்பிக்கப்பட உள்ளன.