ராமகிருஷ்ண பரமஹம்சர் எப்போதும் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். தியானம் கலைந்து எழுந்தவுடன், ஜிலேபி உண்பது அவரது வழக்கம். இதைக் கண்ட சிலர், ஆன்மஞானம் பெற்ற இவருக்கு ஏன் இப்படி ஒரு விநோத ஆசை ஏற்பட்டது? என்று ஆச்சரியப்பட்டனர். அவர்களின் சந்தேகம் தீர, ராமகிருஷ்ணர் பதிலளித்தார். எனக்கும் இந்த உலகிற்கும் உள்ள ஒரே தொடர்பு உணவு மட்டும் தான். உணவு என்ற இந்த ஒரே ஒரு ஆசையை மட்டும் விட்டு விலகி விட்டால் இறைவனோடு ஐக்கியமாகி விடுவேன். அப்படி நான் மறைந்து போனால், ஆழ்நிலை தியானத்தில் எனக்கு கிடைக்கும் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விடும். அதனால், தியானத்தில் அமரும் முன் ஜிலேபி சாப்பிடவேண்டும் என்று எண்ணிக் கொண்டு அமர்ந்து விடுவேன். தியானம் செய்யும் போதும், ஜிலேபி ஆசை என்னை விடாது தொடரும். அதனால், முக்திக்குச் செல்லமுடியாமல் மீண்டும் இங்கேயே வந்து விடுவேன், என்றார்.