பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
01:07
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், வரும், 2ம் தேதி குருப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். இக்கோவில் வளாகத்தில் உள்ளது குருபகவான் எனப்படும் தாம்பத்ய தட்சிணாமூர்த்தி. இங்கு, சுவாமி தன் மனைவியை அணைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் குருப்பெயர்ச்சி விழா முக்கியமானது. வரும், 2ம் தேதி, செவ்வாய்க்கிழமை, காலை 9:30 மணிக்கு, சிம்ம ராசியில் இருந்து, கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி, இங்குள்ள குருபகவானுக்கு விசேஷ ஹோமங்கள், அபிஷேகம், பரிகார சங்கல்பம், அர்ச்சனை ஆகியவை நடைபெற உள்ளன. இதையொட்டி, வரும், 1ம் தேதி, மாலை, 5:00 மணியில் இருந்து, மறுநாள் காலை, 10:00 மணி வரை, பரிகார சங்கல்பம், அர்ச்சனையும், மாலை, 4:00 மணிக்கு 8 அடி உயரத்தில் சந்தன அலங்காரத்தில் தட்சிணாமூர்த்தி ஆவாஹனம் நடைபெறும். தொடர்ந்து நவக்கிரக ஹோமம், 27 நட்சத்திர ஹோமம், 12 ராசி ஹோமம், ஆயுஸ்ய ஹோமம், குருசாந்தி ஹோமம் ஆகியவை நடைபெறும். வரும், 2ம் தேதி, காலை, 6:30 மணிக்கு, கணபதி பூஜை, நவக்கிரக அபிஷேகம், சக்தியோக தம்பதி தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், மகா பூர்ணாஹூதி கலச அபிஷேகம் நடைபெறும். காலை, 9:30 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெற உள்ளது.