சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மனுக்கு ஆடி அமாவாசையையொட்டி அர்த்த ஜாம சிறப்பு பூஜை நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதனையொட்டி விநாயகர் மற்றும் பிரம்ம சாமுண்டி அம்மனுக்கு நெய் தீப வழிபாடு நடந்தது. தொடர்ந்து தில்லைக்காளி அம்மனுக்கு குடம் நல்லெண்ணெய் அபிஷேகம், தைலக்காப்பு நடந்தது. பின்னர், பால், தயிர், மற்றும் வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் முடிந்து, வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர், விளாமுச்சி வேர், செவ்வரளி பூ ஆகியவைகளால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனையடுத்து, அம்மனுக்கு ஆடி அமாவாசை தின சிறப்பு அர்த்த ஜாம பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.