பதிவு செய்த நாள்
06
ஆக
2016
12:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரம்மோற்சவ விழாவில், தீர்த்தவாரி நிகழ்ச்சியை தொடர்ந்து, பராசக்தி அம்மனுக்கு நடந்த வளைகாப்பு விழாவில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரம்மோற்சவம் கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு விநாயகர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமுலையம்மன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. (5.8.16) வெள்ளிக்கிழமை ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நடந்தது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் உற்சவ மூர்த்தி மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
விழாவின் நிறைவாக, (5.8.16) வெள்ளிக்கிழமை காலை கோவில் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் பராசக்தி அம்மன் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து பராசக்தி அம்மன், வளைகாப்பு மண்டபத்தில் எழுந்திருளி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலை அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் அம்மனுக்கு, வளையல், மஞ்சள், குங்குமம் சாற்றி வழிபாடு நடத்தினர். இரவு காமதேனு வாகனத்தில், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமுலையம்மன் வீதியுலா நடந்தது. நள்ளிரவு, 12 மணி அளவில் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் தீ மிதி விழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.