பூஜைக்கான இடத்தை மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைக்க வேண்டும். அதை மலர்ச்சரங்கள், கலர் பேப்பர்களால் அலங்கரிக்கலாம். மண்டபத்தின் முன் வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டு நிறைய பச்சரிசி வைக்க வேண்டும். அதன் மேல் கும்பம் இருக்க வேண்டும். கும்பத்தில் அரிசி, தங்கம், ரத்தினம், காதோலை, கருகமணி, எலுமிச்சம்பழம் ஆகியவற்றால் நிரப்பலாம். முடியாதவர்கள் தீர்த்தம் வைத்தால் போதும். கும்பத்தின் மேல் நுõல் சுற்றி மாவிலைக் கொத்து, தேங்காய் வைக்க வேண்டும், கும்பத்திற்கு புதிய வஸ்திரம் சாத்த வேண்டும். தங்கம் அல்லது வெள்ளியால் செய்த நான்கு கைகள் கொண்ட மகாலட்சுமி பிரதிமை (சிறிய சிலை) வைக்கலாம். அல்லது மஞ்சளில் செய்த முக பிம்பத்தை வைக்கலாம். முடியாவிட்டால் படம் வைத்து பூஜை நடத்தலாம்.