பதிவு செய்த நாள்
12
ஆக
2016
12:08
மீஞ்சூர்: மேலுார், திருவுடையம்மன் கோவிலில், 33 ஆண்டுகளுக்கு பின், குடமுழக்கு விழா நடத்த, திருப்பணிகள் நடந்து வருகின்றன. மீஞ்சூர் அடுத்த, மேலுார் கிராமத்தில், திருமணங்கீஸ்வரர் உடனுறை திருவுடையம்மன் கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த திருத்தலம், கடந்த, 33 ஆண்டுகளாக குடமுழக்கு விழா காணாமல் இருக்கிறது. திருவுடையம்மன் வழிபடுவோர் சேவா சங்கத்தினர், குடமுழக்கு விழா நடத்த திட்டமிட்டு தற்போது, கோவிலில் திருப்பணிகளை துவங்கி உள்ளனர்.
புதுபித்தல்: நந்திமண்டபம், சிவன் சன்னிதி, நவகிரஹ சன்னிதி, சண்டிகேஸ்வரர் சன்னிதி, சிம்ம மண்டபம், அம்பாள் சன்னிதி ஆகிய சன்னிதிகளை பழமை மாறாமல் புதுப்பித்தல், வண்ணம் தீட்டுதல், துாண்களில் உள்ள சிற்பங்களை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போதைக்கு, 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருப்பணிகளை துவங்கி உள்ளனர். இதுகுறித்து, சங்கச் செயலர் சத்தியதாஸ் கூறியதாவது: சன்னிதி மண்டபங்களில் உள்ள சிற்பங்கள், வர்ண பூச்சுக்களால் மறைந்து உள்ளன. சிற்பங்கள் சேதம் அடையாமல் சுத்தப்படுத்தி வருகிறோம். அம்பாள் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் உடைந்து உள்ளன; அதையும் பழமை மாறாமல் புதுப்பிக்க உள்ளோம். தொல்லியல் துறையினரிடம் ஆலோசனையின் படி புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு உள்ளோம். கொடையாளர்களிடம் இருந்து நிதி ஆதாராத்தை எதிர்பார்க்கிறோம். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். ஆறு மாதங்களுக்கு திருப்பணிகளை முடித்து, கும்பாபிஷேகம் நடத்தி திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.