பதிவு செய்த நாள்
16
ஆக
2016
12:08
சென்னை: சென்னையில் நடந்த உலக சித்தர் மருபுத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.சித்த மருத்துவம், பல நுாறு ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பக்க விளைவுகளற்ற மருத்துவ முறை. இதை நவீன ஆய்வுகளின் அடிப்படையில், உலக மக்களுக்கு வழங்க, உலக சித்த மருத்துவ அறக்கட்டளை செயல்படுகிறது. அந்த அறக்கட்டளை, உலக சித்தர் மரபுத் திருவிழா - 2016 என்ற கருத்தரங்கை ஆக., 13, 14ம் தேதிகளில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கல்லுாரியில் நடத்தியது. அதில், பல்வேறு துறைசார்ந்த வல்லுனர்கள், களப்பணியாளர்கள் பங்கேற்று, இயற்கையுடன் இணைந்த வாழ்வியலின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கருத்தரங்கில், நுாற்றுக்கணக்கான மூலிகைகள், 300க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல், மரபு விதைகள் கண்காட்சி நடந்தது. வீட்டுத் தோட்ட பயிற்சி; தமிழ் இசைக் கருவிகள்; பாரம்பரிய சமையல் பயிற்சிப் பட்டறை; வர்மக் கலை; இயற்கை விவசாயம் ஆகியவை இடம் பெற்றன. சித்த மருத்துவ முகாமும் நடந்தது.பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கிடையே மரபு குறித்து போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டு நாள் கருத்தரங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இயற்கை உணவிற்கு மவுசு: கருத்தரங்கை முன்னிட்டு, மூலிகை உணவகம் சார்பில், இயற்கை உணவு தயாரித்து வழங்கப்பட்டது. இதில், உளுந்தங்களி, வெந்தயக்களி, அவல் கேசரி, குதிரைவாலி பொங்கல், முடக்கற்றான், பச்சை பயறு தோசை, சோள பணியாரம், கருப்பு எள்ளு கொழுக்கட்டை, தினை அல்வா, ஆவாரம்பூ சாம்பார், பிரண்டை துவையல், வரகு தயிர்சாதம், சீரகசம்பா பிரியாணி, சாமை கீரை சாதம், மூலிகை சூப் வகைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.