பதிவு செய்த நாள்
23
ஆக
2016
12:08
கும்மிடிப்பூண்டி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலத்தவரின் கைவண்ணத்தில், கண்கவர் பல வண்ண விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. வட இந்தியாவை போல நம் தமிழகத்திலும், ஆடல் – பாடல், மேள தாளத்துடன், பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, விநாயகர் சதுர்த்தியை வெகு விமரிசையாக கொண்டாடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, வட மாநிலத்தை போன்று, பலவிதமான வண்ண விநாயகர் சிலைகள், நம் பகுதிகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கும்மிடிப்பூண்டி, ஜி.என்.டி., சாலையில், மூன்று ஆண்டு காலமாக, ராஜஸ்தானைச் சேர்ந்த சிலர், தங்கள் குடும்பத்துடன் முகாமிட்டு, விநாயகர் சிலைகளை
தயாரித்து வருகின்றனர்.
அடுத்த மாதம், 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், மேற்கண்ட ராஜஸ்தான் மாநிலத்தவரின் கலை நயத்தில், கண்களை கவரும் பல வண்ண விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. தேங்காய் நார், சாக் பவுடர் கலவை மூலம், அச்சு எடுத்த விநாயகருக்கு, தண்ணீரில் கரையும் சாயத்தை பயன்படுத்தி வண்ணம் தீட்டியுள்ளனர். விழா குழுவினரின் விருப்பத்திற்கு ஏற்ப, 3 அடி முதல், 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அவை, 4,000 ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், சாலையோரம் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதால், அவ்வழியாக செல்லும் சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை, ஆர்வமுடன் அந்த சிலைகளை கண்டு செல்கின்றனர். இதுகுறித்து, விநாயகர் சிலை தயாரிக்கும் கைலாஷ் என்பவர் கூறுகையில், ‘‘கும்மிடிப்பூண்டி பகுதியில், ஆண்டுதோறும் விநாயகர் சிலைகளுக்கு வரவேற்பு கூடி வருகிறது. கடந்த ஆண்டு, 60 விநாயகர் சிலைகள் தயாரித்தும், பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் இந்த ஆண்டு, 100 சிலைகள் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளோம்,’’ என்றார்.