வடமொழியில் சுமனஸ் என்றால் பூ என்று பொருள். கசக்கின்ற காய், பழம் கொண்ட மரங்கள் பூக்கும்போது கூட, தித்திக்கும் தேனைச் சுரக்கும். ஐம்புலன்களான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய அனைத்திற்கும் இன்பம் தருவது பூ மட்டுமே. கண்ணுக்கு அழகையும், நறுமணத்தைம், பூவிதழ் தருகிறது. அதில் தேன் குடிக்க வரும் வண்டுகளின் ரீங்காரம் காதுக்கு இனிமை சேர்க்கிறது. நல்ல எண்ணம் நிறைந்த மனதையும் மலருக்கு ஒப்பிட்டுச் சொல்வதுண்டு. நல்ல மனம் என்பதற்கும் சமஸ்கிருதத்தில் சுமனஸ் என்றே பெயர். விநாயகப்பெருமானைப் போற்றும் அவ்வைப்பாட்டி, பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு உண்டாகும் நன்மைகளைப் பட்டியல் இடுகிறார். வெறும் பூக்களால் மட்டும் அல்லாமல், மனதில் உதிக்கும் நல்ல எண்ணங்களாகிய பூக்களைக் கொண்டு விநாயகரைப் பூஜித்தால் நாம் சொன்னது பலிக்கும். லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.