அடங்கி ஒடுங்கி தொண்டு செய்பவர்களைத் தொண்டர் என்பர். சிவபெருமானுக்கு அறுபத்து மூன்று தொண்டர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் வன்தொண்டர். பொதுவாக தொண்டர்கள் எஜமானனுக்கு கட்டுப்பட்டு நடப்பர். இந்த வன்தொண்டரோ, எஜமானரையே மிரட்டி காரியம் சாதித்துக் கொண்டவர். இப்படிப் பட்ட பெருமைக்கு சொந்தக்காரரே சுந்தரர். ஆம்...இவர் சிவ பெருமானையே மிரட்டி பொருள் பெற்றவர். ஆனால், அது நற்செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டது. அவர், தன் காதலி பரவை நாச்சியாரிடம் சிவபெருமானையே தூது போகச் செய்தவர். ஒருமுறை கண்பார்வை இழந்த சுந்தரர் கோபமாக, வாழ்ந்து போதீரே? (இப்படி செய்துவிட்டாயே! நீ வாழ்வாயா?) என்று திட்டினார். அதாவது,நான் உன் மீது இவ்வளவு பக்தி வைத்திருந்தும், இப்படி செய்து விட்டாயே! இப்போது மகிழ்ச்சி தானே! நன்றாக இருந்து விட்டு போ, என்று திட்டித்தீர்த்தார். அந்த திட்டையும் அர்ச்சனைப் பூவாக ஏற்ற சிவபெருமான், மீண்டும் பார்வை அருளினார். ஒருமுறை, திருடர்கள் சுந்தரரிடம் பொருள்களைத் திருடிச் சென்றபோது, நீ இருந்து என்ன பயன் என்னும் பொருளில் நீ ஏதுக்கு இருந்தீர்? என்று கோபித்துக் கொண்டார். இந்த திட்டை வாங்கியபிறகு, திருடர்களிடம் பொருளை மீட்டுத் தந்தார் சிவன். சுந்தரர் பட்டு பீதாம்பரம் அணிந்து ஆடம்பரமாக வாழ்ந்த வித்தியாசமான சிவத்தொண்டராக திகழ்ந்தார்.