பதிவு செய்த நாள்
01
அக்
2011
12:10
எனது ஆறு அல்லது ஏழாவது வயதிலிருந்து பதினாறாம் பிராயம் வரையில் நான் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தேன். மதத்தைத் தவிர மற்ற எல்லாவிதமான விஷயங்களைப்பற்றியும் எனக்குப் போதித்தார்கள். உபாத்தியாயர்கள், தங்கள் அளவில் எவ்விதமான சிரமமுமின்றி எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடியவை எனக்குக் கிடைக்கவில்லை. என்றே கூறுவேன் என்றாலும், அக்கம் பக்கங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக சமய ஞானம் பற்றி நான் அறிந்து வந்தேன். சமயம் என்பதை அதன் விரிவான கருத்தில் - தன்னைத் தானே அறிதல் அல்லது ஆன்ம ஞானம் என்ற பொருளிலேயே-நான் உபயோகிக்கிறேன்.
வைஷ்னவக் குடும்பத்தில் பிறந்தவனாகையால் நான் அடிக்கடி விஷ்ணு கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது. ஆனால் அது என் மனதை ஒரு போதும் கவரவில்லை. அதன் பகட்டும் ஆடம்பரமும் எனக்கு பிடிக்கவில்லை. அதோடு ஒழுக்கவீனமான காரியங்கள் பல அங்கே நடக்கின்றன என்று வதந்திகளையும் கேள்விப்பட்டேன். ஆகவே, கோயிலுக்குப் போவதில் எனக்கு சிரத்தையில்லை. இதனால், விஷ்ணு கோயிலிலிருந்து நான் எதையும் பெறவில்லை.
ஆனால், கோயிலில் நான் பெற முடியாது போனதை, எங்கள் குடும்ப வேலைக்காரக் கிழவியான என் செவிலித் தாயிடமிருந்து பெற்றேன். ரம்பா என்பது அவள் பெயர். அவளுக்கு என் மீதிருந்த பிரியம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. எனக்குப் பேய், பிசாசுகளின் பயம் இருந்தது என்று முன்பே கூறியிருக்கிறேன் ராம நாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதே அந்தப் பயத்தைப் போக்குவதற்கான மருந்து என்று எனக்கு ரம்பா யோசனை கூறினாள். அவள் கூறிய பரிகாரத்தில் எனக்கு இருந்த நம்பிக்கையைவிட அவளிடம் எனக்கு அதிக நம்பிக்கையுண்டு ஆகையால், பேய் பிசாசுகளிடம் எனக்கு இருந்த பயத்தைப் போக்கிக் கொள்ளுவதற்கு இளம் பிராயத்திலிருந்தேன ராம நாம ஜபம் செய்வேன். இது தொடர்ந்து நடக்கவில்லை. ஆனால் குழந்தைப் பருவத்தில் விதைக்கப்பட்ட அந்த நல்ல விதை வீணாகப் போய்விடவில்லை. அந்த நல்ல பெண்மணியான ரம்பா விதைத்த விதையினாலேயே ராம நாமம் இன்று எனக்குப் பொய்க்காத அருமருந்தாக இருந்து வருகிறது என்று நினைக்கிறேன்
இந்தச் சமயத்தில் ராமாயண பக்தரான என் பெரியப்பா பிள்ளை ஒருவர், நானும் என் சின்ன அண்ணனும் ராமரட்சை கற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தார். அதை மனப்பாடம் செய்தோம். ஒவ்வொரு நாளும் காலையில் குளித்த பிறகு வழக்கமாக அதைப் பாராயணம் செய்த வந்தோம். நாங்கள் ராஜ்கோட்டை அடைந்ததும் அதை மறந்துவிட்டோம். ஏனெனில் அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. நான் அதைப் பாராயணம் செய்து வந்ததற்கு ஒரு காரணம், சுத்தமான உச்சரிப்புடன் ராமரட்சையை என்னால் பாராயணம் செய்ய முடிகிறது என்பதில் நான் கொண்டிருந்த பெருமையேயாகும்.
என்றாலும், என்னுடன் ஆழ்ந்த கவர்ச்சியை உண்டாக்கியது, என் தந்தையார் எதிரில் ராமாயணம் படிக்கப்பட்டு வந்ததாகும். என் தந்தை நோயுற்றிருந்த சமயம் கொஞ்ச காலம் போர்பந்தரில் இருந்தார். அங்கே மாலை நேரத்தில் ராமயணத்தைப் படிக்கச் சொல்லி கேட்பார். அவ்விதம் ராமாயணம் வாசித்து வந்தவர் சிறந்த ராம பக்தர். அவர் பிலேஸ்வரைச் சேர்ந்த லதா மகராஜ் என்பவர். அவருக்கு குஷ்ட நோய் இருந்து குணமாகிவிட்டது. எந்த மருந்தினாலும் அவருக்குக் குணமாகிவிடவில்லை என்றும், பிலேஸ்வரர் கோயிலில் மகாதேவர் சிலைக்கு அர்ச்சனை செய்து, பிறகு தூரப் போடப்படும் வில்வ இலைகளைத் தமது உடலில், குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்துக் கட்டியதாலும், விடாமல் ராமநாம ஜபம் செய்தாலுமே அந்நோய் அவருக்குக் குணமாயிற்று என்றும் சொல்லுவார்கள்.
அவருடைய நம்பிக்கை அவர் நோயைப் போக்கியது என்பார்கள். நாங்கள் என்னவோ இக்கதையை நம்பினோம். லதா மகராஜ் எங்கள் வீட்டில் ராமாயணம் வாசிக்க ஆரம்பித்தபோது அவர் உடலில் குஷ்டநோய் என்பதே இல்லை என்பது உண்மை. அவருக்கு இனிமையான சாரீரம் இருந்தது. கண்ணிகளையும் விருத்தங்களையும் பாடுவார். அவற்றை விளக்கிப் பொருள் சொல்லுவார். சொல்லும்போதே மெய்ம்மறந்து அவர் பரவசமாகிவிடுவதோடு கேட்போரையும் மெய்ம் மறந்திருக்கச் செய்துவிடுவார். அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது இருக்கும். என்றாலும், அவர் வாசிப்பதைக் கேட்டு நான் பரவசமாகிவிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ராமாயணத்தினிடம் எனக்கு ஆழ்ந்த பக்தி ஏற்படுவதற்கு அடிகோலியதே அதுதான். பக்தி நுல்களிலெல்லாம் தலையாய நூல் துளசிதாஸரின் ராமாயணமே என்று நான் இன்று கருதுகிறேன்.
இதற்கு சில மாதங்கள் கழிந்து நாங்கள் ராஜ்கோட்டிற்கு வந்தோம். ராமாயண பாராயணம் எதுவும் இங்கே நடைபெறவில்லை. ஒவ்வொர் ஏகாதசி தினத்தன்றும் பாகவதம் படிப்பது வழக்கம். சில சமயங்களில் நான் கேட்கப் போவேன். ஆனால், அதைப் படித்தவரோ, கேட்போருக்கு உருக்கம் உண்டாக்கக் கூடியவர் அன்று. பாகவதம் சமய உணர்ச்சியை உண்டாக்க வல்ல நு}ல் என்பதை இன்று நான் காணுகிறேன். அதைத் தீவிரமான சிரத்தையுடன் குஜராத்தி மொழியில் படித்திருக்கிறேன். ஆனால், என்னுடைய இருபத்தொரு நாள் உண்ணாவிரத காலத்தில் பாகவதத்தின் மூலத்திலிருந்து சில பகுதிகளைப் பண்டித மதன் மோகன மாளவியா படிக்க நான் கேட்டேன். பண்டித மாளவியாவைப் போன்ற ஒரு பக்தர் அதைப் படிக்கச் சிறு வயதிலேயே நான் கேட்டிருந்தால் அப்போதிருந்தே அதன் மீது எனக்கு விருப்பு ஏற்பட்டிருக்கும் என்பது தெரிந்தது. அந்த வயதில் உருவாகும். அபிப்ராயங்கள் ஒருவருடைய சுபாவத்தில் ஆழ வேரூன்றி விடுகின்றன. அந்தக் காலத்தில் இதுபோன்ற மற்றும் பல நல்ல நு}ல்களைப் படிக்கக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லாது போயிற்றே என்ற வருத்தம் என்னைவிட்டு என்றும் நீங்காது.
என்றாலும் ஹிந்து சமயத்தின் எல்லா உட்பிரிவுகள் சம்பந்தமாகவும், மற்றச் சகோதர சமயங்கள் விஷயத்திலும் சகிப்புத் தன்மையுடன் இருக்கும் ஆரம்பப் பயிற்சியும் எனக்கு ராஜ்கோட்டிலேயே கிடைத்தது. ஏனெனில், என் தந்தையும் தாயாரும் விஷ்ணு கோயிலுக்குப் போவதோடு சிவன் கோயிலுக்கும், ராமர் கோயிலுக்கும் போவார்கள். அங்கெல்லாம் சிறுவர்களாகிய எங்களையும் அழைத்துப் போவார்கள், அனுப்புவார்கள். ஜைன பிஷுசுக்கள் அடிக்கடி என் தந்தையைப் பார்க்க வருவார்கள். ஜைனர்கள் அல்லாத எங்கள் வீட்டில் சாப்பிடும் அளவுக்கும் அவர்கள் தாராளமாக நடந்து கொள்ளுவார்கள். சமய விஷயங்களைக் குறித்தும், உலக விவகாரங்களைக் குறித்தும் என் தந்தையுடன் அவர்கள் பேசுவார்கள்.
இதெல்லாம் அவருக்கு முஸ்லீம், பார்ஸி நண்பர்களும் உண்டு தங்கள் சமயங்களைப் பற்றி அவர்கள் இவரிடம் பேசுவார்கள் எப்பொழுதுமே அவர்கள் கூறுவனவற்றிக்கு மதிப்புக் கொடுத்தும், பெரும்பாலும் சிரத்தையுடனும் இவர் கேட்பார். என் தந்தையாருக்கு நான் பணிவிடை செய்து வந்தால் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிட்டியது மற்றச் சமயங்களிடம் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பண்பை இவைகளெல்லாம் சேர்ந்தே என்னுள் வளர்ந்தன.
அச்சமயம் கிறிஸ்தவ மதம் மாத்திரம் இதற்கு ஒரு விலக்காக இருந்தது அதனிடம் எனக்கு ஒருவகை வெறுப்பு இருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு. அக்காலங்களில் கிறிஸ்தவப் பாதிரிமார்கள், உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் தெருத் திருப்பத்தில் நின்றுகொண்டு ஹிந்துக்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் தூஷித்துக் கொண்டிருப்பார்கள். இதை என்னால் சகிக்க முடிவதில்லை. அவர்கள் சொல்லுவதைக் கேட்க ஒரே ஒரு தடவை மாத்திரமே நான் அங்கே நின்றிருப்பேன். இந்தப் பரீட்சை இனி வேண்டாம் என்று நான் தீர்மானித்துவிட்டதற்கு அது ஒன்றே போதுமானதாயிற்று. ஏறக்குறைய அதே சமயத்தில் பிரபலமான ஹிந்து ஒருவர், கிறிஸ்தவத்திற்கு அது ஒன்றே போதுமானதாயிற்று. ஏறக்குறைய அதே சமயத்தில் பிரபலமான ஹிந்து ஒருவர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பெற்றார் என அறிந்தேன். அவர் ஞானஸ்நானம் செய்விக்கப் பெற்ற போது, மாட்டிறைச்சி தின்று, மதுபானமும் கடிக்க வேண்டியிருந்தது என்றும், தமது உடைiயும் அவர் மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று என்றும் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருந்தது.
அது முதல் ஐரோப்பிய உடையுடன் தொப்பியும் போட்டுக் கொண்டு அங்குமிங்கும் போக ஆரம்பித்தாராம். இவையெல்லாம் எனக்கு வெறுப்பை உண்டாக்கின. மாட்டிறைச்சி தின்ன வேண்டும் என்றும், குடிக்கவேண்டும் என்றும், தமது சொந்த உடையை மாற்றிக் கொண்டுவிட வேண்டும் என்றும், ஒருவரைக் கட்டாயப் படுத்தும் ஒரு மதம், மதம் என்ற பெயருக்கே நிச்சயமாக அருகதையில்லாதது என்று நான் எண்ணினேன். புதிதாக மதம் மாறியவர், தமது மூதாதையாரின் மதத்தையும், பழக்க வழக்கங்களையும், நாட்டையும் தூஷித்துப் பேசவும் தலைப்பட்டு விட்டார் என்றும் கேள்விப்பட்டேன். இவைகளெல்லாம் கிறிஸ்தவத்தின் மீது எனக்கு வெறுப்பை உண்டாக்கின.
மற்றச் சமயங்களிடம் சகிப்புத் தன்மை கொள்ள நான் கற்றிருந்தேன் என்றால், உண்மையில் எனக்கு கடவுளிடம் திடமான நம்பிக்கை இருந்து என்பது பொருளல்ல. அந்த சமயத்தில் மனுஸ்மிருதியையும் நான் படிக்க நேர்ந்தது. படைப்பைப் பற்றியும், அது போன்ற விஷயங்களைக் குறித்தும் அதில் கூறப்பட்டிருந்த கதை எனக்கு அவ்வளவாக நம்பிக்கை ஊட்டுவதாயில்லை. இதற்குமாறாக நாஸ்திகத்தை நோக்கி ஓரளவுக்கு என்னைச் சாயும்படியும் அது செய்தது.
என் பெரியப்பா பிள்ளை ஒருவர் உண்டு. அவர் இன்றும் இருக்கிறார். அவருடைய அறிவாற்றலில் எனக்கு அபார மதிப்பு உண்டு. எனக்கு இருந்த சந்தேகங்களையெல்லாம் குறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் அவற்றைத் தீர்த்துவிட அவரால் இயலவில்லை. உனக்கு வயதானதும் இந்தச் சந்தேகங்களை எல்லாம் நீயே தீர்த்துக் கொண்டு விடுவாய். இந்த வயதில் இப்படிப்பட்ட சந்தேகங்கள் உனக்குத் தோன்றலாகாது என்று பதில் சொல்லி, அவர் என்னை அனுப்பிவிட்டார். என் வாய் அடைப்பட்டுப் போயிற்று. ஆயினும், மனம் திருப்பதியடையவில்லை மனுஹ்மிருதியில் உணவு பற்றியும் அது போன்றவை குறித்தும் கூறப் பட்டிருந்தவை, தினசரி வழக்கத்திற்கு மாறுப்பட்டவை என எனக்குத் தோன்றிய. இதில் எனக்கு உண்டான சந்தேகத்திற்கும் அதே பதில்தான் கிடைத்தது. அறிவு வளர வளர, அதிகமாகப் படிக்க படிக்க, அதை நான் நன்றாகப் புரிந்து கொள்ளுவேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
மனுஸ்மிருதி, அக்காலத்தில் அகிம்சாதருமத்தை எனக்கு போதிக்கவிலலை என்பது மாத்திரம் உண்மை. நான் புலால் உண்ட கதையைக் கூறியிருக்கிறேன். அதை அனுஸ் மிருதி ஆதரிப்பதாகத் தோன்றியது. பாம்புகள், மூட்டைப் பூச்சி முதலியவைகளைக் கொல்லுவது முற்றும் நியாயமானதே என்று கருதினேன். மூட்டைப் பூச்சிகள் போன்ற ஜந்துகளைக் கொல்லுவது ஒரு கடமை எனக் கருதி அந்த வயதில் அவற்றை நான் கொன்றது எனக்கு நினைவிருக்கிறது.
ஆனால், ஒன்று மாத்திரம் என்னுள் ஆழ வேரூன்றியது. ஒழுக்கமே எல்லாவற்றிக்கும் அடிப்படை, சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றிற்கும் சாரமும் என்று நான் கொண்ட உறுதியே அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு நாளும் அதன் மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக் கொண்டே வந்தது.
அதேபோல நன்னெறியைப் போதிக்கும் ஒரு குஜராத்திப் பாடலும் என் அறிவையும் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது தீமை செய்தோருக்கும் நன்மையே செய் என்ற அப்பாடலின் போதனை, என் வாழ்க்கையில் வழிகாட்டும் தருமமாயிற்று. அதில் எனக்கு அதிக பிரேமை உண்டாக்கி விட்டதால் அதை மேற்கோளாகக் கொண்டு பற்பல சோதனைகளையும் செய்யத் தொடங்கினேன். மிக அற்புதமானவை என நான் எண்ணும் அப்பாடலின் வரிகள் இவை.
உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குக் கைம்மாறாய்
விண்ணமுதைப்போல் அன்னம் விரும்பிய படைத்திடுவாய்.
அன்போடு கும்பிட்டால் அடிபணிந்து நீ தொழுவாய்.
செம்பான காசுக்குச் செம்பொன்னைத் தந்திடுவாய்.
உயிர்காத்தோன் துன்பத்தை உயிர்கொடுத்து நீ துடைப்பாய்.
செயலாலும் சொல்லாலும் சிந்தையினாலும் பெரியோர்
சின்னஞ்சிறு உதவி செய்தவர்க்கு எந்நாளும்
ஒன்றுக்குப் பத்தாய் உவந்து செய்வர் பேருதவி,
வையத்தார் எல்லோருலும் ஒன்றெனவே மாண்புடையோர்
ஐயப்பா டின்றி அறிந்திருக்கும் காரணத்தால்
இன்னாசெய்தாரை ஒறுக்க, அவர் நாண
நன்னயம் செய்து விடுவர் இந்நானிலத்தே.