பதிவு செய்த நாள்
01
அக்
2011
12:10
நான் இப்பொழுது கூறப்போகின்றவை என்னுடைய பதினாறாவது வயதில் நடந்தவை. பவுந்திர நோயினால் என் தந்தை படுத்த படுக்கையாக இருந்தார் என்பதை முன்பே கண்டோம். அவருக்கு வேண்டிய பணிவிடைகளை என் தாயாரும். வீட்டு வேலைகாரரான ஒரு கிழவரும், நானும் செய்து வந்தோம். என்னுடைய ஒரு தாதிகுரிய வேலைகள். முக்கியமாகப் புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டுவது, என் தந்தைக்கு மருந்து கொடுப்பது, வீட்டிலேயே தயாரிக்க வேண்டியிருந்த மருந்துகளைச் சேர்த்துத் தயாரிப்பது ஆகியவை அவை. ஒவ்வொரு நாள் இரவும் அவருக்குக் கால் பிடித்துவிடுவேன். போகுமாறு அவர் சொன்னாலோ, அல்லது அவர் தூங்கிய பிறகேதான் போய் படுத்துக் கொள்ளுவேன் இப்பணி செய்வதற்கு நான் பிரியப்பட்டேன். இதில் நான் எப்பொழுதேனும் அசட்டையாக இருந்து விட்டதாக எனக்கு நினைவில்லை. எனது அன்றாடக் கடமைகளை நிறைவேற்றியது போக பாக்கியிருக்கும் நேரத்தைப் பள்ளிக்கூடத்துக்குப் போவதிலும் என் தந்தையாருக்குப் பணிவிடை செய்வதிலும் கழிப்பேன். அவர் என்னை அனுமதிக்கும் போதோ, அவருக்கு உடம்பு கொஞ்சம் நன்றாக இருக்கும் போதோ மாத்திரம் மாலையில் உலாவிவிட்டு வரப்போவேன்.
அது, என் மனைவி பிள்ளைப்பேற்றை எதிர்பார்திருந்த சமயமும் ஆகும். அந்த ஒரு சந்தர்ப்பத்தை இன்று நான் எண்ணிப் பார்க்கும்போது, அது எனக்கு இரட்டை அவமானம் என்பதை உணருகிறேன். அச்சமயத்தில் நான் பள்ளி மாணவனாகையால் நான் புலனடக்கத்தைக் கைக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாது போனது ஓர் அவமானம். படிப்பு விஷயத்தில் என் கடமையென நான் கருதியதையும், என் பெற்றோரிடம் பக்தியுடனிருப்பது அதையும்விட இன்னும் பெரிய கடமை என நான் கொண்டிருந்ததையும் மறக்கும்படி காமவெறி செய்துவிட்டது. இரண்டாவது அவமானமாகும். சிரவணன் போல இருக்க வேண்டும் என்பது குழந்தைப் பருவம் முதலே என் லட்சியமாக இருந்தது. ஒவ்வோர் இரவும், என் தந்தையாரின் பாதங்களை என் கைகள் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும் போது என் மனம் மாத்திரம் என் படுக்கையறையை வட்டமிட்டுக் கொண்டிருக்கும். அதுவும், மதம் வைத்திய சாஸ்திரம், பகுத்தறிவு ஆகியவைகளெல்லாம் ஒருமித்து மனைவியுடன் உடல் சேர்க்கை கூடாது என்று தடுக்கும் ஒரு சமயத்தில் எனக்கு அந்த மனநிலை. ஏன் வேலையிலிருந்து விடுபடும் போதெல்லாம் மிக்க மகிழ்ச்சியுறுவேன். தந்தைக்கு வணக்கம் செலுத்திவிட்டு நேரே படுக்கை அறைக்குப் போவேன்.
அதே சமயத்தில் என் தந்தையின் நிலையும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வந்தது. ஆயுர்வேத வைத்தியர்கள் தங்கள் களிம்புகளையெல்லாம் போட்டுப் பார்த்துவிட்டனர். ஹக்கீம்கள் தங்கள் பிளாஸ்திரிகளையெல்லாம் போட்டுப் பார்த்துவிட்டார்கள். உள்ளூர் அரைகுறை வைத்தியர்களும் தங்கள் தனி உபாயங்களை எல்லாம் கையாண்டுவிட்டனர். ஓர் ஆங்கில சர்ஜனும் தமது திறமையைப் பிரயோகித்துப் பார்த்துவிட்டார். சத்திர சகிச்சை ஒன்றே கடைசியாகக் செய்யக்கூடிய ஒரே காரியம் என்று அவர் சிபாரிசு செய்தார். ஆனால், குடும்ப வைத்தியர் இதை ஆட்சேபித்தார். அவ்வளவு முதிர்ந்த வயதில் சத்திர சிகிச்சை செய்வதை அவர் ஓப்புக்கொள்ளவில்லை. அந்த வைத்தியர் திறமை வாய்ந்தவர், பிரபலமானவர். ஆகையால், அவர் யோசனையே ஏற்றுக் கொள்ளக்கூடாது. சத்திர சிகிச்சை கைவிடப்பட்டது. அதற்காக வாங்கிய மருந்துகளுக்கு அளவே இல்லை. சத்திர சிகிச்சைக்கு வைத்தியர் அனுமதித்திருந்தால் புண் எளிதில் ஆறியிருக்கும் என்பது என் எண்ணம். இந்த சிகிச்சையும் பம்பாயில் அப்பொழுது பிரபலமாக இருந்த ஒரு சர்ஜன் செய்ய வேண்டும்.
ஆனால், கடவுள் சித்தம் வேறுவிதமாக இருந்து விட்டது. சாவு நிச்சயம் என்று இருக்கும்போது சரியான பரிகாரம் யாருக்குத் தோன்றும் ? சத்திர சிகிச்சைக்குச் சேகரிக்கப்பட்டு, இப்பொழுது வீணாகப் போன பொருளுடன் என் தந்தை பம்பாயிலிருந்து திரும்பினார். இனி அதிக காலம் உயிரோடிருப்போம் என்ற நம்பிக்கை அவருக்கும் இல்லாமல் போயிற்று. மேலும் மேலும் பலவீனமாகிக் கொண்டு வந்தார். இதனால் மலஜலங்களைப் படுக்கையில் இருந்தவாறே கழிக்கும் படி அவருக்குச் சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால், கடைசி நேரம் வரையில் அவர் அப்படிச் செய்ய மறுத்து விட்டார். அதிக சிரமத்துடன் பிடிவாதமாகப் படுக்கையிலிருந்து எழுந்து போயே மலஜலம் கழித்து வந்தார். வைஷ்ணவ தருமத்தின் புறத் தூய்மையைப் பற்றி விதிகள் அவ்வளவு கண்டிப்பானவை.
இத்தகைய சுத்தம் முற்றும் அவசியமே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், சுத்தத்தைக் கண்டிப்பாக அனுசரிப்பதும், நோயாளிக்குக் கொஞ்சமேனும் அசௌகரியம் இல்லாமல் படுக்கையையும் கொஞ்சமும் அப்பழுக்கு இல்லாமல் வைத்துக் கொண்டு, குளிப்பது உட்பட எல்லாக் காரியங்களையும் படுக்கையிலேயே செய்யலாம் என்பதை மேனாட்டு வைத்திய சாத்திரம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அத்தகைய சுத்தம் வைஷ்ணவ தருமத்திற்கு முற்றும் பொருத்தமானது என்றே நாம் கருத வேண்டும். ஆனால், படுக்கையைவிட்டு எழுந்து போயே ஆகவேண்டும் என்று என் தந்தையார் வற்புறுத்தியது அப்பொழுது எனக்கு ஆச்சரியத்தையே உண்டாக்கியது. அதை நான் வியந்தேனேயன்றி வேறுவிதமாகக் கருதவில்லை.
பயங்கரமான அந்த இரவும் வந்தது. என் சிறிய தகப்பனார் அப்பொழுது ராஜ்கோட்டில் இருந்தார். என் தந்தையின் தேக நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறதென்ற செய்தியறிந்து அவர் ராஜ்கோட்டுக்கு வந்ததாக எனக்குக் கொஞ்சம் ஞாபகம். இந்தச் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பலமான அன்பு கொண்டவர்கள். என் சிற்றப்பா, நாளெல்லாம் என் தந்தையாரின் படுக்கைக்கு அருகிலேயே உட்கார்ந்திருப்பார். எங்களையெல்லாம் தூங்கப்போகச் சொல்லிவிட்டு, அவர் மட்டும் என் தந்தையாரின் படுக்கைக்குப் பக்கத்திலேயே பிடிவாதமாகப் படுத்துக் கொள்ளுவார். தந்தையாரின் நிலை என்னவோ ஆபத்தாகவே இருந்தது. ஆனால், அது எமனின் இரவாக இருக்கும் என்று யாரும் கனவுக்கூடக் காணவில்லை.
அப்பொழுது இரவு 10-30 அல்லது 11 மணி. நான் தந்தையாருக்குக் கால் பிடித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பதிலாக அவ்வேலையைத் தாம் பார்த்துக் கொள்ளுவதாக என் சிறிய தகப்பனார் கூறினார். மகிழ்ச்சியுற்றேன். நேரே படுக்கையறைக்குப் போனேன். பாவம், என் மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஆனால், நான் அங்கே போன பிறகு அவள் எவ்வாறு தூங்க முடியும் ? அவளை எழுப்பினேன். ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கெல்லாம் வேலைக்காரன் கதவைத் தட்டினான். திகிலுடன் துடித்து எழுந்தேன். கிளம்புங்கள், அப்பாவுக்குக் கடுமையாக இருக்கிறது என்றான் அவருடைய தேக நிலை மிகவும் மோசமாகவே இருந்தது என்பதை நான் அறிவேன். ஆகவே, அச்சமயத்தில் கடுமையாக இருக்கிறது என்றால் அதன் பொருள் இன்னதென்பதை ஊகித்துக் கொண்டேன். படுக்கையிலிருந்து குதித்தெழுந்தேன். என்ன விஷயம், சொல் என்றேன். தந்தை காலமாகி விட்டார் என்றான்.
ஆகவே, எல்;லாம் முடிந்து போயிற்று * என் கைகளைப் பிசைந்து கொண்டேன். அளவு கடந்த வெட்கத்தையும் வேதனையையும் அடைந்தேன் என் தந்தையார் இருந்த அறைக்கு ஓடினேன். காமவெறி மாத்திரம் என்னைக் குருடனாக்காமல் இருந்திருக்குமாயின் கடைசி நேரத்தில் தந்தையாரிடமிருந்து பிரிந்ததால் விளைந்த சித்திரவதை எனக்கு நேர்ந்திராது என்பதைக் கண்டேன். அவருடைய பாதங்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருப்பேன், என் கரங்களிலேயே அவர் ஆவி பிரிந்திருக்கும். இப்பொழுதோ, அந்தப் பாக்கியம் என் சிறிய தகப்பனாருக்குக் கிடைத்தது. அண்ணனிடம் அவருக்கு அளவற்ற பக்தி இருந்ததனால், அவருக்குக் கடைசி சேவைகளைச் செய்யும் கௌரவத்தை அவர் தேடிக்கொண்டார் * மரணம் நெருங்கிவிட்டது என்பதை என் தந்தையார் அறிந்து கொண்டு, பேனாவும் காகிதமும் கொண்டு வருமாறு சமிக்ஞை செய்திருக்கிறார். இறுதிக் கிரியைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று எழுதியிருக்கிறார். பிறகு தம் கையில் அணிந்திருந்த காப்பையும், தங்கத் துளசி மணிமாலையையும் கழற்றித் தூரத்தில் வீசிவிட்டு, ஒரு கண நேரத்தில் உயிரை நீத்திருக்கிறார்.
முந்திய ஓர் அத்தியாயத்தில் எனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பற்றிக் கூறினேன். என் தந்தை சாகும் தறுவாயிலிருந்த நெருக்கடியான நேரத்தில் நான் விழித்திருந்து பணிவிடை செய்ய வேண்டியிருக்க, எனக்குக் காமவெறி ஏற்பட்டதைப் பற்றி அவமானமே அது. இது என் வாழ்க்கையில் ஏற்பட்ட கறை. இதை என்றுமே என்னால் அழிக்கவோ, மறக்கவோ முடிந்ததில்லை. என் பெற்றோரிடம் எனக்கு எல்லையற்ற பக்தி உண்டெனினும், அதற்காக எதையும் தியாகம் செய்திருப்பேனாயினும், சோதித்துப்பார்த்ததில், அந்தப் பக்தி மன்னிக்க முடியாத வகையில் குறைபாட்டுடனேயே இருந்தது. ஏனெனில், அதே சமயத்தில் என் மனம் காமத்தின் பலமான பிடிப்பில் இருந்து வந்தது. இதை எப்பொழுதும் நினைத்துப் பார்ப்பேன். ஆகையால் நான் விசுவாசமுள்ள கணவனாக இருந்தாலும் காமவெறியன் என்றே என்னை என்று கருதலானேன். காமத்தின் விலங்கிலிருந்து விடுபட எனக்கு அதிக காலமாயிற்று. அதை வெல்வதற்குள் நான் எத்தனையோ கடுஞ்சோதனைகளைக் கடக்க வேண்டியிருந்தது.
எனது இரு அவமானங்களைப் பற்றிய இந்த அத்தியாயத்தை முடிக்கும் முன்பு, என் மனைவியின் வயிற்றில் பிறந்த அந்தப் பரிதாபகரமான சிசு, மூன்று, நான்கு நாட்கள் கூட உயிரோடு இருக்கவில்லை என்பதையும் நான் கூற வேண்டும். இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை. மணமாகி இருப்பவர்களெல்லாம் என்னுடைய உதாரணத்தைக் கண்டு எச்சரிக்கை அடைவார்களாக.