பதிவு செய்த நாள்
01
அக்
2011
12:10
நாட்டியத்திலும், அது போன்றவைகளிலும் நான் செய்த சோதனை என் வாழ்க்கையில் நெறி தவறிப் போய்விட்ட ஒரு கட்டம் என்று யாரும் ஊகித்துக் கொண்டுவிட வேண்டாம் அச்சமயத்திலும்கூட நான் மதிமயங்கிப் போய்விடவில்லை. என்பதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள். ஆங்கிலக் கனவானாவதில் எனக்கு மோகம் இருந்த அந்தக் காலத்திலும் கூட, என் வரையில் ஓரளவுக்கு என்னுள் ஆன்ம சோதனையும் இல்லாது போகவில்லை. நான் செலவு செய்த ஒவ்வொரு பார்த்திங்(காலணா )குக்கும் கணக்கு வைத்திருந்தேன். செலவு செய்வதைத் தீர யோசித்தே செய்து வந்தேன். வண்டிச் சத்தம், தபால் செலவு, பத்திரிக்கை வாங்கச் செலவிட்ட சில காசுகள போன்ற சிறு செலவினங்களையும் கூடக் கணக்கில் எழுதுவேன்.
தினந்தோறும் படுக்கப் போவதற்கு முன்னால் கணக்கை கூட்டி இருப்புக் கட்டுவேன். அப்பொழுதிலிருந்தே இப்பழக்கம் என்னிடம் நிலைத்து விட்டது. இதன் பலனாக, பொதுப் பணத்தை லட்சக்கணக்கில் நான் கையாள நேர்ந்தபோது அதைச் செலவிடுவதில் கண்டிப்பான சிக்கனத்தை அனுசரிக்க என்னால் முடிந்ததோடு, நான் நடத்திய எல்லா இயக்கங்கள் சம்பந்தமாகவும் வெளிக்கடன் எதுவும் இல்லாமல் எப்பொழுதுமே கையில் மிச்சத் தொகையே இருந்திருக்கிறது என்பதை அறிவேன். என் வாழ்க்கையின் இந்த அனுபவத்தை ஒவ்வோர் இளைஞரும் பாடமாகக் கொண்டு, தம்மிடம் வரும் தொகை ஒவ்வொன்றுக்கும், தாம் செலவிடுவதற்கும் கணக்கு வைக்க வேண்டியதை ஒரு கடமையாகக் கொள்ளட்டும், அப்படிச் செய்தால் என்னைப் போல் முடிவில் நன்மையையே அடைவார்கள்.
என் வாழ்வு முறையை நானே கண்டிப்பாகக் கவனித்து வந்தால், செலவில் சிக்கனம் செய்ய வேண்டியதன் அவசியத்தை நான் அறிய முடிந்தது. ஆகையால், எனக்கு ஆகும் செலவைப் பாதியாகக் குறைத்துவிடுவது என்று தீர்மானித்தேன். போக்குவரத்துக்கு வண்டிச் சத்தம் கொடுப்பதிலேயே அதிகத் தொகை செலவாகிறது என்பது கணக்கிலிருந்து தெரிந்தது. அதோடு, ஒரு குடும்பத்தில் நான் வசித்து வந்ததால் வாரந்தோறும் தவறாமல் குறிப்பிட்ட தொகை அவர்களுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. அத்துடன், அக்குடும்பத்தினரை மரியாதைக்காக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வது, அவர்களுடன் விருந்துகளுக்குப் போவது போன்ற வகையிலும் செலவாகி வந்தது. முக்கியமாகக் கூடவரும் நண்பர்கள், பெண்மணியாக இருந்தால், எல்லாச் செலவுகளையும் ஆணே செய்ய வேண்டும் என்பது அவர்கள் வழக்கம். இதனாலெல்லாம் போக்குவரத்துச் செலவு மிக அதிகமாக இருந்தது. வெளியில் சாப்பிடுவதனால் - வீட்டில் சாப்பிடாமல் இருந்ததற்காக வாராந்திரக் கணக்கில் எதுவும் குறைத்துக் கொடுக்க முடியாதாகையால், அதிகப்படி செலவுகளையும் குறைத்துவிடலாம் என்று எனக்குள் தோன்றிற்று.
ஆகவே, இனி ஒரு குடும்பத்துடன் வசிப்பதற்குப் பதிலாகத் தனியாக அறைகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளுவது என்று முடிவு செய்தேன். எனக்கு இருக்கும் வேலையை அனுசரித்து, என் குடியிருப்பையும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றிக்கொள்ளவும் அதே சமயத்தில் அதனால் அனுபவம் பெறவும் தீர்மானித்தேன். எனக்கு வேலையிருக்கும் இடத்திற்கு அரைமணி நேரத்தில் நடந்து போய்விடக் கூடியதாகவும், அதனாலும் செலவு குறைவதாகவும் இருக்கும் வகையிலும், அறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு முன்னால் நான் எங்காவது வெளியில் போவதாயிருந்தால் ஏதாவது ஒரு வண்டியை அமர்த்திக் கொள்ளுவேன். இனி நடந்தே போவதென்றால் நடப்பதற்கு வேண்டிய அவகாசத்தையும் தேடிக்கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டில் நடையும் சிக்கனமும் சேர்ந்திருந்தன. அதன்படி வண்டி வாடகை கொடுத்து மிச்சமானதோடு தினம் எட்டு அல்லது பத்து மைல் நடையும் எனக்கு கிடைத்தது. முக்கியமாக நீண்ட தூரம் நடந்த இந்தப் பழக்கத்திநாலும், இங்கிலாந்தில் இருந்த வரையில் நான் நோயே இல்லாமல் இருந்தேன், என் உடலும் உரம் பெற்றது.
இவ்வாறு நான் இரண்டு அறைகளுள்ள ஓர் இடத்தை வாடகைக்கு அமர்த்திக்கொண்டேன். அதில் ஒர் அறை, உட்கார்ந்து வேலை செய்வதற்கு, மற்றொன்று படுக்கையறை எனது லண்டன் வாழ்க்கையில் இது இரண்டாவது கட்டம் இனிமேல்தான் வரவேண்டும்.
இந்த மாறுதல்களினால் என் செலவுகள் பாதியாகத் குறைந்தன. ஆனால், எனக்கிருந்த அவகாசத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளுவது ? பாரிஸ்டர் பரீட்சைக்கு அதிகமாகப் படிக்க வேண்டியதில்லை. என்பது எனக்குத் தெரியும். ஆகையால் நேரத்திற்குப் பஞ்சம் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆங்கில மொழியில் எனக்குத் திறன் போதாமல் இருந்ததே எனக்கு தீராக் கவலையாக இருந்து வந்தது. முதலில் பி.ஏ. பட்டம் பெற்று, பிறகு என்னிடம் வா என்று ஸ்ரீ வேலி ( பிற்காலத்தில் ஸர் பிரடரிக்) சொன்ன சொற்கள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. பாரிஸ்டர் பரீட்சையில் தேறுவதோடு மாத்திரமின்றி இலக்கியக் கல்வியிலும் நான் ஏதாவது ஒரு பட்டத்தைப் பெறவேண்டும் என்று எண்ணினேன். ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் சர்வகலா சாலைகளின் படிப்பு முறைகளைப் பற்றி விசாரித்தேன் சில நண்பர்களையும் கலந்து ஆலோசித்தேன். இந்த இரு சர்வகலாசாலைகளில் ஒன்றில் சேருவது என்று நான் முடிவு செய்தால், அதனால் செலவு அதிகமாவதோடு, இங்கிலாந்தில் தங்குவதற்கு நான் தயாராயிருக்கும் காலத்தைவிட அதிக காலம் தங்கவும் நேரும் என்று கண்டேன்.
கஷ்டமான தொரு பரீட்சையில் தேறிவிட்டேன் என்று திருப்பதிப்பட நான் விரும்பினால், லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் நான் தேறிவிடலாம் என்று ஒரு நண்பர் யோசனை கூறினார். அப்படியானால் அதிகக் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருக்கும். பொது அறிவும் விருத்தியாகும். இதற்குச் செலவு அதிகப்படியாக ஒன்றும் ஆகிவிடாது என்பது தெரிந்தது., இந்த யோசனை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அப்பரீட்சைக்குப் படிக்க வேண்டியிருந்த பாடங்களோ என்னைப் பயமுறுத்தி விட்டன. லத்தீனையும், தற்கால ஐரோப்பிய மொழி ஒன்றையும் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் * லத்தீனைப் படிப்பது எப்படி ? ஆனால் அந்த நண்பரோ, அம்மொழியைப் படித்தாக வேண்டும் என்று பரிந்து பேசினார். வக்கீல்களுக்கு லத்தீன் மிகவும் பயனுள்ள மொழி சட்டப் புத்தகங்களைப் புரிந்துகொள்ள லத்தீன் தெரிந்திருப்பது உபயோகமாக இருக்கும். ரோமன் சட்டம் பற்றிய ஒரு பரீட்சை முழுவதையும் லத்தீன் மொழியில்தான் எழுதவேண்டியிருக்கும். லத்தீன் படித்துவிட்டால் ஆங்கில மொழியில்தான் எழுதவேண்டியிருக்கும். லத்தீன் படித்துவிட்டால் ஆங்கில மொழியிலும் நல்ல ஆற்றல் இருக்கும் என்றார். நண்பர் கூறியது நல்லது என்றே தோன்றியது. என்னதான் கஷ்டமாக இருந்தாலும் சரி, லத்தீன் படித்து விடுவது என்று தீர்மானித்தேன். இதற்கு முன்னாலேயே பிரெஞ்சு மொழி படிக்க ஆரம்பித்து விட்டேன்.
ஆகவே, நான் படித்தாக வேண்டிய இக்கால மொழியாக அதையே வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். மெட்ரிகுலேஷனுக்குத் தயார் செய்வதற்கென்று தனிப்பட்டவர் வைத்திருந்த, வகுப்பில் சேர்ந்தேன். பரீட்சைக்குப் போவதற்கு எனக்கு ஐந்து மாதங்களே இருந்தன. இது அசாத்தியமான வேலை என்று எனக்குத் தோன்றிற்று. ஆங்கிலக் கனவானைப் போல் ஆகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த நான், இப்பொழுது கருத்துள்ள மாணாக்கனாக என்னை மாற்றிக்கொண்டு விட்டேன். என் கால அட்டவணையை நிமிஷக் கணக்கு வரையில் துல்லியமாக வகுத்துக்கொண்டேன். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் மற்றப் பாடங்களுடன் லத்தீனையும், பிரெஞ்சு மொழியையும் நான் படித்துவிட முடியும் என்பதற்கு என் அறிவோ, திறமையோ துணை செய்வதாயில்லை. இதன் பலனாக லத்தீன் பரிட்சையில் தவறிவிட்டேன். இதற்காக வருத்தப் பட்டேனாயினும் மனம் தளர்ந்து விடவில்லை.
இதற்குள் லத்தீன் மொழியில் இன்னும் ஒரு பரீட்சைக்குப் போனால் நன்றாயிருக்கும் என்று எண்ணினேன். விஞ்ஞானத்தில் நான் படித்தது ரசாயனம். மிக மிகக் கவர்ச்சிகரமான படிப்பாக இருந்திருக்க வேண்டிய அது, எனக்கு ருசிக்காமல் போனதற்குக் காரணம், சோதனைகள் நடத்துவதற்கு இடமில்லாது போனதே. இந்தியாவில் அது கட்டாயப் பாடங்களில் ஒன்றாக இருந்தது. ஆகவே, லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்கு அதைப் பாடமாக எடுத்துக்கொண்டேன். என்றாலும், இத்தடவை ரசாயனத்திற்குப் பதிலாக வெப்பம், வெளிச்சத்தைப் பற்றிப் படிப்பதென முடிவு செய்தேன். இதைப் படிப்பது சுலபம் என்றார்கள், எனக்கும் சுலபமாகவே இருந்தது.
மற்றொரு சோதனைக்கு நான் என்னைத் தயார் செய்துகொண்டதோடு மேற்கொண்டும் என் வாழ்க்கையை எளிமையானதாக்கிக் கொள்ளவும் முயன்றேன். அடக்கமான என் குடும்ப நிலைமைக்கு ஏற்றதாக என் வாழ்க்கை முறை இல்லை என்பதை உணர்ந்தேன். பண உதவி வேண்டும் என்று அடிக்கடி நான் தெரிவிக்கும் போதெல்லாம் என் சகோதரர் பெருந்தன்மையோடு பணம் அனுப்பிக்கொண்டே இருந்தார். இப்படிப் பணம் அனுப்புவதற்ககாக அவர் அனுபவிக்கும் அநேக கஷ்டங்களை எண்ணிப் பார்த்தேன். அது மனத்திற்குப் பெரும் வேதனையாக இருந்தது. மாதத்திற்கு எட்டு முதல் பதினைந்து பவுன் வரையில் செலவு செய்து கொண்டிருந்தவர்களில் அநேக மாணவர்களுக்கு உபகாரச் சம்பள வசதி இருந்தது என்பதை அறிந்தேன். மிக எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த மாணவர்களின் உதாரணமும் என் முன்னால் இருந்தது. என்னைவிட எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த பல ஏழை மாணவர்களையும் நான் பார்க்க நேர்ந்தது.
அவர்களில் ஒரு மாணவர், சேரிப் பகுதியில் வாரத்திற்கு இரண்டு ஷில்லிங்குக்கு ஓர் அறையை அமர்த்திக் கொண்டு. அதில் இருந்து வந்தார். லோகார்ட்டிலிருக்கும் மலிவான கோக்கோக் கடைகளில் வேளைக்கு இரண்டு பென்ஸ் செலவில் கோக்கோ குடித்து, ரொட்டி தின்று, தம் சாப்பாட்டை முடித்து விடுவார். அவரைப் பின்பற்றுவதென நினைப்பதே என்னால் முடியாது. ஆனால், இரண்டு இரண்டு அறைகளை வைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக ஓர் அறையை அமர்த்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படிச் செய்தால் மாதத்திற்கு நான்கிலிருந்து ஐந்து புவன் மிச்சப்படும். எளிய வாழ்க்கை நடத்துவதைப் பற்றிய புத்தகங்கள் சிலவற்றைப் படித்தேன். இரண்டு அறை ஜாகையை விட்டுவிட்டு, ஓர் அறையை அமர்த்திக்கொண்டேன்.
ஒரு ஸ்டவ் அடுப்பும் வாங்கினேன். காலை ஆகாரத்தை வீட்டிலேயே சமைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தேன். நான் சமைக்க வேண்டியிருந்ததெல்லாம் ஓட்ஸ் கஞ்சி வைப்பதும், கோக்கோவுக்கு நீர் கொதிக்க வைப்பதுமேயாகையால் அதற்கு இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகாது. மத்தியான ஆகாரத்தை வெளியில் சாப்பிட்டுக் கொள்ளுவேன். இரவில் வீட்டில் ரொட்டி தின்று. கோக்கோ குடிப்பேன். இவ்விதம் தினத்திற்கு ஒரு ஷில்லிங் மூன்று பென்ஸ் செலவில் என்னால் வாழ முடிந்தது. அது கடுமையாகப் படிக்க வேண்டியிருந்த சமயமும் கூட எளிய வாழ்க்கையை நான் மேற்கொண்டதால், படிப்பதற்கு எனக்கு நேரம் அதிகமாக இருந்ததோடு நான் பரீட்சையிலும் தேறினேன்.
இவ்விதம் வாழ்ந்து வந்ததால் என் வாழ்க்கை எந்த வகையிலும் இன்பமற்றதாயிற்று என்று வாசகர்கள் எண்ணிவிட வேண்டாம். இதற்கு மாறாக, இத்தகைய மாறுதல் என் அக வாழ்வையும், புற வாழ்வையும் ஒருமைப்படுத்தியது. அதோடு இந்த வாழ்க்கை, என் குடும்ப நிலைமைக்கும் ஒத்தாக இருந்தது, முன்பு இருந்ததைவிட அதிகமான உண்மையோடும் கூடியதாயிற்று, என் ஆன்மா அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.