ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதர் கோவிலில் இன்று ஸ்ரீதாயார் திருவர சேவை நடக்கிறது. இந்தியாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்பட்டுவதுமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கடந்த 27ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதாயார் தங்கமயமாக்கப்பட்ட கொலு மண்டபத்தில் தினமும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீதாயார் திருவடி சேவை இன்று (3ம்தேதி) நடக்கிறது. இன்றைய தினம் மட்டும் தான் ஸ்ரீதாயாரின் பாதங்களை காணும் பாக்கியம் சேவார்த்திகளுக்கு உண்டு. மாலை நான்கு மணிக்கு மண்டபத்தில் எழுந்தருளும் ஸ்ரீதாயார் நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இன்றைய தினம் ஸ்ரீதாயாரின் திருவடியை சேவித்தால் குடும்பத்தில் ஒற்றுமையும், சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம். இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து ஸ்ரீதாயாரின் திருவடி சேவையை தரிசிப்பர். முக்கிய நிகழ்ச்சியாக வரும் 6ம் தேதி விஜயதசமியன்று ஸ்ரீரெங்கநாதர், ஸ்ரீகாட்டழகியசிங்கர் கோவிலில் எழுந்தருள்கிறார். இதைத்தொடர்ந்து குதிரை வாகனத்தில் ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு, வன்னிமரத்தடியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.