பதிவு செய்த நாள்
07
அக்
2011
11:10
கன்னியாகுமரி : பக்கவாத்தியம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி வந்த அம்பாள் பாணாசுரனை வதம் செய்த நவராத்திரி பரிவேட்டை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்தியாவின் முக்கிய கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று. இந்த ஆண்டின் நவராத்திரி விழா கடந்த மாதம் 27ம் தேதி அம்பாள் கொலுமண்டபத்தில் வீற்றிருக்கும் நிகழ்ச்சியோடு கோலாகலமாக துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை 5 மணிக்கும் 10 மணிக்கும் சிறப்பு அபிஷேகம், மதியம் அன்னதானம், மாலை ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சி, இரவு அம்மன் வெள்ளி கலைமான மற்றும் காமதேனு வாகனத்தில் கோயில் பவனி வருதல் ஆகியன நடந்தது. கோயிலில் நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் தேவியை அலங்கார மண்டபத்தில் வெள்ளிகுதிரை வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10.30 மணிக்கு அன்னதானம், பகல் 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் வெள்ளி குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் அம்பாள் வேட்டைக்கு புறப்படல் ஆகியன நடந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகனத்தின் இருபுறமும் நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுக்க ஸ்ரீதேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் குதிரைகள், அணிவகுக்க முத்துக்குடை ஏந்திய பெண்கள் செல்ல நாதஸ்வரம், பஞ்சவாத்தியம், சிங்காரிமேளம், செண்டை மேளம்ல பொம்மலாட்டம், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பஜனை, கேரள புகழ் தையல் ஆட்டம் என கண்கவர் நிகழ்ச்சிளுடன் அம்பாள் வெள்ளி குதிரை வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு சன்னிதி தெரு, ரதவீதிகளை கடந்து மெயின்ரோடு, விவேகானந்தபுரம் ஜங்ஷன், பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம் வழியாக மாலை 5 மணியளவில் மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை வந்தடைந்தது, வாகனம் வரும் வழியில் ஏராளமான பக்தர்கள் அம்பாளுக்கு சுருள் வைத்து வழிபட்டனர். மாலை 6 மணியளவில் மகாதானபுரம பரிவேட்டை மண்டபத்தில் அம்பாள், பாணாசுரன் என்ற அரக்கன் இளநீரில் இருப்பதாக ஆவாகனம் செய்து அம்பு எய்து பரிவேட்டை நடத்தினார். தொடர்ந்து அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி மகாதானபுரம் பஞ்சலிங்கபுரம் கிராமங்களுக்கு பவனியாக சென்று கன்னியாகுமரி வந்தார். இரவு 10 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடந்தது. பின்னர் கிழக்குவாசல் நடை திறக்கப்பட்டு கோயிலுக்கு எழுந்தருளினார். தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது. போலீஸ் பாதுகாப்பு: பரிவேட்டை ஊர்வலத்தை ஒட்டி கன்னியாகுமரி டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் 150க்கு மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.