நிலக்கோட்டை பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா நடைபெறுமா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2016 11:11
நிலக்கோட்டை: பல ஆண்டுகளாக கொண்டாடப்படாத நிலக்கோட்டை பெருமாள் கோயில் தெப்பத்திருவிழாவை நடத்துவதற்கு, இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர். நிலக்கோட்டை அகோபில நரசிம்ம பெருமாள் கோயில் கூலப்பநாயக்கர் ஜமீன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கென நிலங்கள், தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடந்ததாக குறிப்புகள் உள்ளன. காலப்போக்கில் இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வந்தது. அதன்பின் கோயிலுக்கென ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து தகவல்கள் இல்லை. இப்பகுதி வார்டு கவுன்சிலர் மூலம் குளத்தைச் சுற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் சிறிது சுத்தமாகி உள்ளது.வாய்க்கால்கள் எங்கே: குளத்திற்கு நீர் வரும் வாய்க்கால்கள் காணாமல் போய்விட்டன. இதனால் குளத்தில் தண்ணீர் தேங்குவது இல்லை. குளம் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கோயில் நிலங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்தே கோயிலை நன்கு பராமரிக்க முடியும். நிலங்கள் எங்கிருக்கிறது என்றே அறநிலையத்துறைக்குத் தெரியவில்லை. தெப்பக்குளத்தில் நீரைத் தேக்கி தெப்பத்திருவிழா நடத்த இந்து சமய அறநிலையத்துறை முயற்சி எடுக்க வேண்டும். அதேபோல் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.