பதிவு செய்த நாள்
07
அக்
2011
11:10
புதுடில்லி : நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று, விஜயதசமியை முன்னிட்டு, பள்ளிகளில் வித்யாரம்பம் (சிறுவர்கள் கல்வி கற்கத் துவங்குவது) நிகழ்ச்சி, டில்லி, கேரளா உட்பட, பல மாநிலங்களில் விமரிசையாக நடைபெற்றது. டில்லியில், மலையாள மனோரமா பத்திரிகை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிரியாக் ஜோசப் பங்கேற்று, சிறுவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதைத் துவக்கி வைத்தார். குறைந்தபட்சம், 150 குழந்தைகளுக்கு அவர் எழுதக் கற்றுக் கொடுத்தார். இரண்டு முதல் மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பல, நேற்று முறைப்படி பள்ளிகளில் சேர்க்கப்பட்டன. டில்லியில், மலையாள மனோரமா பத்திரிகை சார்பில், ஏழாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி இது. வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு, சான்றிதழ்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. இதேபோல், மலையாள மனோரமா பத்திரிகை சார்பில், கேரளாவில் பல இடங்களிலும், மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற இடங்களிலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கேரளாவில், பல இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள், தாம்பூலத்தில் நிரப்பப்பட்ட அரிசியில், "ஹரி...ஸ்ரீ... என, எழுதி, தங்களின் கல்வியை ஆரம்பிப்பது முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது, இந்துக்கள் மட்டுமின்றி, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தவர்களும், தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து, எழுதப்படிக்க கற்றுக் கொடுக்கும் பணியைச் செய்தனர். வித்யாரம்பம் நிகழ்ச்சி, கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிகள், கலாசார மையங்கள், நூலகங்கள் போன்றவற்றில் நடந்தது.