பதிவு செய்த நாள்
18
நவ
2016
12:11
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகேயுள்ள குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி கோவில், புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விசேஷ நாட்களில் கூடுதல் பஸ் இயக்கினால், அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. மடத்துக்குளம் பகுதியில் சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன. இதில், சோழமாதேவி அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி கோவில் குறிப்பிடத்தக்கதாகும். மண்ணுக்குள் புதைந்த நிலையில் இருந்த இந்த கோவிலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் குழு அமைத்து புதுப்பித்து, கடந்த 2013 ஜனவரி மாதம் கும்பாபிேஷகம் நடத்தினர். இதற்குபின், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த கோவில் சோழன் மன்னனின் பட்டத்து அரசி நினைவாக கட்டப்பட்டதால்,கோவில் அமைந்துள்ள கிராமம் சோழன்மாதேவி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் மருவி சோழ(ன்)மாதேவி என அமைந்ததாக வரலாற்று தகவல் உள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலின் சுற்றுமதில் மற்றும் உட்புற சுவர்களில் வட்டெழுத்து முறையில் பல்வேறு கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன. சிவராத்திரி, பிரதோஷம், சனிக்கிழமை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் இந்த கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். பொதுமக்கள் கூறுகையில், நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், கலை நுணுக்கங்களையும் உள்ளடக்கியுள்ள இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டியவைகளாகும். பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு கி.மீ., க்கு அதிக தொலைவில் உள்ளதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்று திரும்புவது மிகவும் சிரமமாக உள்ளது. கடத்துார் அர்ச்சுனேசுவரர் கோவிலுக்கு இயக்கியது போல், இந்த கோவிலுக்கும் விசேஷ நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும், என்றனர்.