பதிவு செய்த நாள்
19
நவ
2016
12:11
ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபி அருகே, கணக்கம்பாளையம் பெருந்தேவி தாயார் சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ராமானுஜர் 1,000வது ஆண்டு விழா மற்றும் கொங்கு நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, டிச.,13 முதல், 15 வரை நடக்க உள்ளது.
ராமானுஜர் வாழ்ந்த காலத்தில், சோழ நாட்டுப்பகுதியில் இருந்து காவிரி வழியாக, பவானி ஆற்றின் கரை ஓரமாக தொண்டு ஆற்றி வந்தார். எட்டு நாட்களுக்கு மேலாக அவர் உணவு உண்ணாமல், பெருமானை வேண்டியபடி கணக்கம்பாளையம் வந்து சேர்ந்தார். அப்பகுதி மக்களுக்கு, ராமானுஜருக்கு சேவை செய்யும் பாக்கியம் கிட்டியது. இதை கவுரவிக்கும் வகையிலும், கிராம மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், ராமானுஜரின், 1,000வது ஆண்டு விழாவையும் சேர்த்து விழாவாக கொண்டாடப்படவுள்ளது.டிச., 13ல் காலை, 9:30 மணிக்கு ராமானுஜரை ரட்சித்த கொங்கு நாடு மக்கள் என்ற தலைப்பில், வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி உபன்யாசமும், தொடர்ந்து பல்வேறு நிகழ்வும் நடக்கிறது. அடுத்து, 14, 15 ஆகிய இரு நாட்களும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சி, சொற்பொழிவு, ஹோமம் நடத்தப்படுகிறது. மூன்று நாட்களும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை கரிவரதன் கைங்கர்ய சபா தலைவரும், கான்பூர் ஐ.ஐ.டி., பதிவாளருமான நரசிம்மன், ஈரோடு இந்து கல்வி நிலைய தாளாளர் பாலுசாமி ஆகியோர் தெரிவித்தனர்.