பதிவு செய்த நாள்
12
டிச
2016
12:12
குன்னுார் : வெலிங்டன் ஐயப்பன் கோவிலில், 30வது ஆண்டு மகோற்சவ விழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நடந்தது. குன்னுார் - ஊட்டி சாலையில், வெலிங்டன் பஜார் பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில், 30வது ஆண்டு மகோற்சவ விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, அருவங் காடு அருகேயுள்ள ஒசட்டி சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் இருந்து பாய்ஸ்கம்பெனி, பிளாக்பிரிட்ஜ் வழியாக, வெலிங்டன் கோவில் வரை பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வாகனத்தில் அணிவகுத்து வர, ஐயப்ப பக்தர்கள் சரண கோஷத்துடன் பங்கேற்றனர். தொடர்ந்து, ஐயப்பனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், பஞ்சா மிருதம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு அர்ச்சனை, ஆராதனைகள் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான, ஏற்பாடுகளை வெலிங்டன் பஜார் ஐயப்ப பக்த சங்க தலைவர் முரளிதரன், செயலாளர் தாஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
* அருவங்காடு ஐயப்பன் கோவிலிலும் நேற்று சிறப்பு அபிஷேக, அர்ச்சனை அலங்காரம் இடம் பெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப் பட்டது. அருவங்காடு, ஜெகதளா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.