பதிவு செய்த நாள்
13
டிச
2016
01:12
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, கிருத்திகை மற்றும் தீபத்திருவிழா நடந்தது. பலத்த காற்று மற்றும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், திரளான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று, கார்த்திகை கிருத்திகை விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில், பஞ்சாமிர்த சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, மலைக்கோவில் எதிரில் உள்ள பச்சரிசி மலையில், 120 கிலோ நெய், 3 அடி அகலம் (கனம்), 9 அடி நீளம் உள்ள திரியால் நெய் தீபம் ஏற்பட்டது. அதே நேரத்தில், மலைக்கோவில் வளாகத்தில், சொக்கப்பனை மரத்தில் தீபம் ஏற்றி, சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, கார்த்திகை கிருத்திகை மற்றும் தீபத்தை முன்னிட்டு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் மலைக்கோவிலில் வந்து மூலவரை தரிசித்தனர்.
வாசலில் தீபம் ஏற்ற வழியில்லை: கார்த்திகை தீபத்திருநாளில், வீட்டு வாசல் மற்றும் முற்றத்தில் விளக்கேற்றி, வீடுகளை அலங்கரிப்பது வழக்கம். ஆனால், நேற்று காலை முதல் புயல் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால், ஆர்.கே.பேட்டை பகுதிவாசிகள், வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், பூஜை அறைகளில் மட்டும் தீபம் ஏற்றி, கிருத்திகை மற்றும் கார்த்திகை திருவிழாவை கொண்டாடினர். வழிபாட்டில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள விரும்பாத பகுதிவாசிகள், கோவில்களில் கடும் பிரயத்தனத்துடன் நேற்று மாலை தீபம் ஏற்றினர். காற்று மற்றும் மழைக்கும் தாக்குப்பிடிக்கும் விதமாக, தீபத்திற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.