பதிவு செய்த நாள்
13
டிச
2016
01:12
நாமக்கல்: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, நாமக்கல் பாலதண்டாயுதபாணி கோவிலில், 1,008 தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. ரங்கநாதர் கோவிலில் தீபத்திருவிழா ரத்து செய்யப்பட்டது. ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபத்திருவிழா, நேற்று, நாமக்கல் மற்றும் மாவட்டம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் - மோகனூர் சாலை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், 1,008 தீபம் ஏற்றும் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
தொடர்ந்து, அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுவாமி, ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7:00 மணிக்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள், கோவிலில் வைக்கப்பட்டிருந்த விளக்கில், 1,008 தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர். நாமக்கல் ரங்கநாதர் கோவில் படிக்கட்டில், இந்த ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள கோவில்களில் கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்டது. சீராப்பள்ளி மாரியம்மன் கோவில், முத்து குமாரசாமி கோவில், சிவன் கோவில்களில் கூம்பு வடிவில் சோளத்தட்டுகள் வைத்து தீபம் பற்ற வைத்தனர். மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின் பூசாரி, சோளத்தட்டால் ஆன கூம்பை பற்ற வைத்தார்.
* மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டி முருகன் கோவில், குமாரபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன.