பதிவு செய்த நாள்
10
அக்
2011
03:10
மாதேரானுக்குப் போய் அங்கே தங்கினால், சீக்கிரத்தில் என் உடம்பு தேறும் என்று டாக்டர்களும் நண்பர்களும் கூறினார்கள். ஆகவே, நான் அங்கே போனேன். ஆனால், மாதேரானில் தண்ணீர் உப்பாக இருந்ததால் அங்கே நான் தங்குவது கஷ்டமாகிவிட்டது. வயிற்றுக் கடுப்பு நோய் ஏற்பட்டு நான் கஷ்டப்பட்டு விட்டதால் என் ஆசனவாய் மென்மையாகிவிட்டது. இதனால் மலம் கழிக்கும்போது ஆசனவாயில் எனக்குத் தாங்கமுடியாத வலி இருந்தது. ஆகையால், சாப்பிடுவது என்று நினைத்தாலே எனக்கு ஒரே பயமாக இருந்தது. ஒரு வாரம் முடிவதற்கு முன்னாலேயே மாதேரானிலிருந்து நான் போய்விட வேண்டியதாயிற்று. அப்பொழுது சங்கர்லால் பாங்கர் என் உடல் நிலையின் காவலராக இருந்து வந்ததால், டாக்டர் தலாலைக் கலந்து ஆலோசிக்குமாறு என்னை வற்புறுத்தினார். அதன் பேரில் டாக்டர் தலாலை அழைத்து வந்தனர்.
உடனுக்குடனேயே முடிவுக்கு வந்துவிடுவதில் அவருக்கு இருந்த ஆற்றல் என்னைக் கவர்ந்தது. அவர் கூறியதாவது: நீங்கள் பால் சாப்பிட்டாலன்றி உங்கள் உடம்பு தேறும்படி செய்வது என்னால் முடியாது. அதோடு அயம், ஆர்ஸனிக் ஆகிய மருந்துகளை ஊசிமூலம் குத்திக் கொள்ளுவீர்களானால் உங்கள் உடம்பைத் தேற்றி விடுவதாக நான் முற்றும் உத்தரவாதம் அளிக்க முடியும். அதற்கு நான், ஊசி குத்தி மருந்தை நீங்கள் ஏற்றலாம். ஆனால், பால் சாப்பிடுவது என்பது வேறு விஷயம். பால் சாப்பிடுவதில்லை என்று விரதம் பூண்டிருக்கிறேன் என்றேன். அதன் பேரில் டாக்டர், உங்கள் விரதத்தில் தன்மைதான் என்ன? என்று கேட்டார். பசுவையும் எருமையையும் பால் கறப்பதற்கு பூக்கா முறையை அனுசரிக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்ததிலிருந்து நான் இந்த விரதத்தை மேற்கொண்டதைப்பற்றிய வரலாற்றையும், அவ்விரதத்தின் காரணத்தையும், அவருக்கு எடுத்துக் கூறினேன். பால் என்றாலே எனக்குப் பலமான வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. மேலும், பால், மனிதனுக்கு இயற்கையான ஆகாரம் அல்ல என்றே எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன். ஆகையால், அதை உபயோகிப்பதை அடியோடு நிறுத்திவிட்டேன் என்றேன். அப்பொழுது கஸ்தூரிபாய் என் படுக்கைக்கு அருகில் நின்றுகொண்டு நாங்கள் பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தாள். அப்படியானால், ஆட்டுப்பால் சாப்பிடுவதற்கு உங்களுக்கு எவ்விதமான ஆட்சேபமும் இருப்பதற்கில்லை என்று குறுக்கிட்டுச் சொன்னாள். டாக்டரும் அவள் கூறியதைத் தொடர்ந்து பிடித்துக் கொண்டார்.
நீங்கள் ஆட்டுப்பால் சாப்பிட்டால் அதுவே எனக்குப் போதும் என்றார், அவர். நானும் உடன்பட்டு விட்டேன். சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று எனக்கு இருந்துவந்த தீவிர ஆர்வம், நான் உயிரோடிருக்க வேண்டும் என்ற பலமான ஆசையை என்னுள் உண்டாக்கிவிட்டது. எனவே, விரதத்தைச் சொல்லளவில் மாத்திரம் அனுசரித்துவிட்டு, அதன் உட்கருத்தை தத்தம் செய்துவிட என்னையே திருப்தி செய்து கொண்டேன். நான் விரதம் எடுத்துக்கொண்டபோது பசுவின் பாலும் எருமைப் பாலுமே. என் எண்ணத்தில் இருந்தனவென்றாலும், அதன் இயற்கையான பொருளின்படி, எல்லா மிருகங்களின் பாலும் அதில் அடங்கியதே. மேலும், பால், மனிதனின் இயற்கையான ஆகாரம் அல்ல என்ற கருத்து எனக்கு இருக்கும் வரை, எந்தப் பாலையும் நான் சாப்பிடுவது சரியே அல்ல. இவைகளையெல்லாம் அறிந்திருந்தும் ஆட்டுப் பால் சாப்பிடச் சம்மதித்தேன். உயிரோடு இருக்க வேண்டும் என்பதில் கொண்ட உறுதி, சத்தியத்தினிடம் கொண்ட பற்றைவிடப் பலமானதாக நிரூபிக்கப்பட்டு விட்டது. சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தினால், சத்தியத்தை வற்புறுத்தி வந்த நான், தெய்வீகமான கொள்கையை விட்டுக் கொடுத்து விட்டேன். இச்செய்கையின் நினைவு இன்னும் என் உள்ளத்தில் உறுத்திக்கொண்டிருப்பதோடு எனக்கு மனச் சஞ்சலத்தையும் உண்டாக்கி வருகிறது. ஆட்டுப் பால் சாப்பிடுவதை எப்படி விட்டு விடுவது என்பதைக் குறித்துச் சதா சிந்தித்தும் வருகிறேன். ஆனால், சேவை செய்ய வேண்டும் என்ற மிகுந்த, அடக்கமான ஆசை எனக்கு இன்னும் இருந்து கொண்டுதான் வருகிறது.
அதிலிருந்து விடுபட இன்னும் என்னால் முடியவில்லை. அகிம்சை ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகவுள்ள என்னுடைய ஆகார சோதனைகள் எனக்கு மிகவும் முக்கியமானவை. அவை என் மனத்திற்கு ஆறுதலையும் ஆனந்தத்தையும் அளிக்கின்றன. ஆனால், நான் ஆட்டுப்பால் சாப்பிட்டு வருவது வாக்குறுதியை மீறியதேயாதலால், அகிம்சையை ஒட்டிய ஆகார வகையில் அல்ல, சத்திய வகையில், இன்று எனக்கு அதிகச் சங்கடமாக இருந்து வருகிறது. அகிம்சையின் லட்சியத்தைவிட சத்தியத்தின் லட்சியத்தையே நான் நன்றாகப் புரிந்துகொள்ளுகிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது. சத்தியத்தில் எனக்கு இருக்கும் பிடிப்பை நான் விட்டுவிடுவேனாயின், அகிம்சையின் புதிரை அறிந்துகொள்ள என்னால் என்றுமே முடியாது என்பதை அனுபவம் எனக்குக் கூறுகிறது. மேற்கொள்ளும் விரதங்களை, அதன் சொல்லுக்கும் பொருளுக்கும் ஏற்ப நிறைவேற்றி வைக்க வேண்டியது, சத்தியத்தின் லட்சியத்திற்கு அவசியமாகிறது. இந்த விஷயத்திலோ, என் விரதத்தின் பொருளை அதன் ஆன்மாவைக் கொன்றுவிட்டு அதன் வெளித்தோற்றத்தை மாத்திரமே அனுசரிக்கிறேன். எனக்கு இதுதான் வேதனையளிக்கிறது. ஆனால், இதை நான் தெளிவாக அறிந்திருந்தும், நேரான வழி என் முன்னால் எனக்குத் தென்படவில்லை. இன்னும் சொன்னால், நேரான வழியைப் பின்பற்றுவதற்கு வேண்டிய தைரியம் எனக்கு இல்லை. அடிப்படையில் இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான். ஏனெனில், எப்பொழுதுமே, நம்பிக்கை இல்லாததனாலும் பலவீனத்தினாலுமே சந்தேகம் உண்டாகிறது. ஆகவே, ஆண்டவனே! எனக்கு நம்பிக்கையைக் கொடு என்று நான் இரவு பகலாகப் பிரார்த்தித்துக் கொண்டு வருகிறேன்.
நான் ஆட்டுப்பால் சாப்பிட ஆரம்பித்ததுமே டாக்டர் தலால் எனக்கு ஆசனவாய்க் கோளாறுக்கு வெற்றிகரமான ரணசிகிச்சை செய்து முடித்தார். என் உடல் பலம் பெற்று வரவே, முக்கியமாகக் கடவுள் நான் செய்வதற்கென்று வேலையைத் தயாராக வைத்திருந்ததால், உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்குத்திரும்பவும் பிறந்தது. குணமடைந்து வருகிறேன் என்று நான் உணர ஆரம்பித்ததுமே, ரௌலட் கமிட்டியின் அறிக்கையை தற்செயலாகப் பத்திரிகையில் படித்தேன். அந்த அறிக்கை அப்பொழுதுதான் வெளியாகியிருந்தது. அக்கமிட்டியின் சிபாரிசுகள் என்னைத் திடுக்குறச் செய்தன. சங்கரலால் பாங்கரும், உமார் சோபானியும் என்னிடம் வந்து, இவ்விஷயத்தில் நான் உடனே ஏதாவது நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினார்கள். ஒரு மாதத்தில் நான் அகமதாபாத்திற்குப் போனேன். அநேகமாகத் தினமும் என்னைப் பார்ப்பதற்கு வல்லபாய் வருவார். அவரிடம் எனக்கு இருந்த சந்தேகங்களைக் கூறினேன். ஏதாவது செய்தாக வேண்டும் என்றேன். அதற்கு அவர், இந்த நிலைமையில் நாம் என்ன செய்ய முடியும்? என்று என்னைக் கேட்டார். நான் சொன்னதாவது: அம்மசோதாக்களை எதிர்ப்பது என்ற பிரதிக்ஞையில் கையெழுத்திட ஒரு சிலர் கிடைத்தாலும் போதும். அதையும் பொருட்படுத்தாமல் சட்டம் செய்யப்பட்டு விடுமானால், நாம் உடனே சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்துவிட வேண்டியதே.
நான் இதுபோல் நோயுற்றுக் கிடக்காமல் இருந்தால், மற்றவர்கள் என்னைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்து நானே தன்னந்தனியாக அதை எதிர்த்துப் போராடுவேன். ஆனால், நான் இப்பொழுது இருக்கும் இத்திக்கற்ற நிலைமையில் அந்த வேலை என்னால் ஆகாது என்றே எண்ணுகிறேன். இவ்விதம் நாங்கள் பேசியதன் பேரில், என்னுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் அழைத்து ஒரு கூட்டம் கூட்டுவது என்று முடிவாயிற்று. ரௌலட் கமிட்டி அறிக்கையில் பிரசுரமாகியிருக்கும் சாட்சியங்களைக் கொண்டு பார்த்தால், அக்கமிட்டியின் சிபாரிசுகள் அவசியமில்லாதவை என்று எனக்குத் தோன்றியது. மானமுள்ள யாரும் அந்தச் சிபாரிசுகளுக்கு உடன் பட்டு இருந்து விடமுடியாது என்றும் உணர்ந்தேன். முடிவாக அக்கூட்டமும் ஆசிரமத்தில் நடந்தது. இருபதுபேர் கூட அக்கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. வல்லபாயைத் தவிர ஸ்ரீ மதி சரோஜினி நாயுடு, ஸ்ரீ ஹார்னிமன், காலஞ்சென்ற ஸ்ரீ உமார் சோபானி, ஸ்ரீ சங்கரலால் பாங்கர், ஸ்ரீ மதி அனுசூயா பென் ஆகியவர்களே அக்கூட்டத்திற்கு வந்திருந்தார்கள் என்று எனக்கு ஞாபகம். சத்தியாக்கிரக பிரதிக்ஞை நகலை இக்கூட்டத்தில் தயாரித்தோம்.
வந்திருந்தவர்கள் எல்லோரும் அதில் கையெழுத்திட்டார்கள் என்றும் எனக்கு ஞாபகம். அச்சமயம் நான் எந்தப் பத்திரிகையையும் நடத்தவில்லை. ஆனால், என் கருத்துக்களை எப்பொழுதாவது தினப்பத்திரிகைகளின் மூலம் வெளியிட்டு வருவேன். இச்சமயமும் அவ்வாறே செய்தேன். சங்கரலால் பாங்கர் இக்கிளர்ச்சியில் தீவிரமாக இறங்கிவிட்டார். வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து, உறுதியுடன் விடாமல் வேலை செய்வதில் அவருக்கு இருந்த அற்புதமான ஆற்றலைப்பற்றி முதல் தடவையாக அப்பொழுதுதான் நான் தெரிந்து கொண்டேன். சத்தியாக்கிரகத்தைப் போன்ற புதியதானதோர் ஆயுதத்தை, அப்பொழுது இருந்த ஸ்தாபனங்களில் எதுவும் அனுசரிக்கும் என்ற நம்பிக்கையெல்லாம் வீண் என்று எனக்குத் தோன்றியது. ஆகவே, என்னுடைய யோசனையின் பேரில் சத்தியாக்கிரக சபை என்ற ஒரு தனி ஸ்தாபனம் ஆரம்பமாயிற்று. அதன் முக்கியமான
அங்கத்தினர்களெல்லாம் பம்பாயைச் சேர்ந்தவர்கள். ஆகையால், அதன் தலைமைக் காரியாலயம் அங்கே அமைக்கப்பட்டது. அச்சங்கத்தில் சேர ஏராளமானவர்கள் விரும்பிப் பிரதிக்ஞையில் கையெழுத்திட்டார்கள்.
துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டோம். பொதுக்கூட்டங்கள் எல்லா இடங்களிலும் நடந்தன. கேடாச்சத்தியாக்கிரகப் போராட்டத்தின் முக்கியமான அம்சங்களை இவையெல்லாம் நினைவூட்டின. சத்தியாக்கிரக சபைக்கு நான் தலைவனானேன். இச் சபையில், படித்த அறிவாளிகள் என்று இருந்தவர்களுக்கும் எனக்கும் அபிப்பிராய ஒற்றுமை இருப்பதற்கில்லை என்பதைச் சீக்கிரத்திலேயே கண்டுகொண்டேன். சபையில் குஜராத்தி மொழியையே உபயோகிக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன். அதோடு, என்னுடைய மற்றும் சில வேலை முறைகளும் அவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றியதோடு அவர்களுக்குக் கவலையையும் சங்கடத்தையும் உண்டாக்கின. ஆனால், அவர்களில் அநேகர் பெரிய மனதோடு என்னுடைய விசித்திரப் போக்குகளை எல்லாம் சகித்துக்கொண்டார்கள் என்பதையும் நான் சொல்லவே வேண்டும். ஆனால், சபை நீண்ட காலம் உயிரோடு இருக்காது என்பது ஆரம்பத்திலிருந்தே எனக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. சத்தியத்தையும் அகிம்சையையும் நான் வற்புறுத்தி வந்தது அச்சபையின் அங்கத்தினர்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதையும் நான் கண்டுகொள்ள முடிந்தது. என்றாலும், ஆரம்பக் கட்டங்களில் எங்களுடைய புதிய நடவடிக்கை அதிக வேகமாக நடந்து கொண்டு வந்தது; இயக்கமும் தீவிரமாகப் பரவலாயிற்று.