பதிவு செய்த நாள்
10
அக்
2011
12:10
ராஜ்கோட்டிலிருந்து சாந்திநிகேதனத்திற்குச் சென்றேன். அங்கே ஆசிரியர்களும் மாணவர்களும் என்னை அன்பில் மூழ்கடித்து விட்டனர். எளிமையும் அன்பும் அழகாகக் கலந்ததாக இருந்தது, வரவேற்பு. இங்கே தான் காக்கா சாகிபை நான் முதன்முதலாகச் சந்தித்தேன். கலேல்காரை காக்கா சாகிப் என்று ஏன் அழைக்கிறார்கள் என்பது அப்பொழுது எனக்குத் தெரியாது. பிறகே அதன் விவரம் எனக்குத் தெரிந்தது. நான் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் அங்கே இருந்தவரும், அங்கே என் நெருங்கிய நண்பருமான ஸ்ரீகேசவராவ் தேஷ்பாண்டே, பரோடா சமஸ்தானத்தில் கங்காநாதர் வித்யாலயம் என்ற பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வந்தார். அப்பள்ளிக்கூடத்தில் ஒரு குடும்பத்தின் சூழ்நிலை இருந்து வரவேண்டும் என்பதற்காக, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உறவுப் பெயர்களை அவர் ஆசிரியர்களுக்கு வைத்திருந்தார். ஸ்ரீகலேல்காரும் அங்கே ஓர் ஆசிரியர். அவரை அங்கே காக்கா (சிற்றப்பா) என்றே அழைத்து வந்தனர். பட்கேயை மாமா என்று அழைத்தார்கள். ஹரிஹர சர்மாவை அண்ணா என்று அழைத்தனர். மற்றவர்களுக்கும் இவை போன்ற பெயர்கள் உண்டு. காக்காவின் நண்பரான ஆனந்தானந்தரும் (சுவாமி) மாமாவின் நண்பரானப் பட்டவர்த்தனரும் (அப்பா) பிறகு அக்குடும்பத்தில் சேர்ந்தார்கள்.
இவர்களெல்லோரும் நாளாவட்டத்தில் ஒருவர் பின் ஒருவராக எனது சக ஊழியர்களானார்கள். ஸ்ரீதேஷ் பாண்டேயைச் சாகிப் என்று அழைத்து வந்தனர். வித்தியாலயத்தைக் கலைத்து விட வேண்டி வந்த போது அக்குடும்பமும் கலைந்துவிட்டது. ஆனால், அவர்கள் தங்களுடைய ஆன்மிக உறவையோ, அங்கே வழங்கிய உறவுப் பெயர்களையோ விட்டுவிடவே இல்லை. பல ஸ்தாபனங்களையும் பார்த்து அனுபவம் பெறுவதற்காகக் காக்கா சாகிப் அப்பொழுது பிரயாணம் செய்து வந்தார். நான் சாந்திநிகேதனத்திற்குச் சென்றபோது அவர் அங்கே இருந்தார். அதே கூட்டத்தைச் சேர்ந்தவரான சிந்தாமணி சாஸ்திரியும் அப்பொழுது அங்கே இருந்தார். இருவரும் சமஸ்கிருதம் கற்பிப்பதில் உதவி செய்து வந்தார்கள். போனிக்ஸ் குடும்பத்தினருக்குச் சாந்திநிகேதனத்தில் தனி இடம் கொடுத்திருந்தார்கள். அக்குடும்பத்திற்குத் தலைவராக இருந்தார், மகன்லால் காந்தி. போனிக்ஸ் ஆசிரமத்தின் விதிகள் யாவும் அங்கேயும் கண்டிப்பாக அனுசரிக்கப்பட்டு வருகின்றனவா என்று கவனிப்பதை அவர் தமது வேலையாகக் கொண்டார். அவர் தமது அன்பினாலும், அறிவினாலும், விடா முயற்சியினாலும் தம்முடைய புகழ்மணம் சாந்தி நிகேதனம் முழுவதிலும் கமழும்படி செய்திருந்ததைக் கண்டேன். ஆண்டுரூஸ் அங்கே இருந்தார். பியர்ஸனும் இருந்தார். வங்காளி ஆசிரியர்களில் ஜகதானந்த பாபு, நேபால் பாபு, சந்தோஷ்பாபு, க்ஷிதிமோகன் பாபு, நாகேன் பாபு, சரத் பாபு, காளி பாபு ஆகியவர்களுடன் ஓரளவுக்கு நெருங்கிய பழக்கம் எங்களுக்கு ஏற்பட்டது.
என்னுடைய வழக்கப்படி அங்கே இருந்த ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் நான் சீக்கிரத்தில் ஒன்றிப் போய்விட்டேன். அவரவர்களின் காரியங்களை அவர்களே செய்துகொள்ளுவதைக் குறித்து அவர்களுடன் விவாதித்தேன். ஆசிரியர்களுக்கு ஒரு யோசனை கூறினேன். சம்பளத்திற்கு வைத்திருக்கும் சமையற்காரர்களை அனுப்பிவிட்டு ஆசிரியர்களும் மாணவர்களுமே தங்கள் உணவைச் சமைத்துக் கொள்ளுவதானால், சிறுவர்களின் உடலுக்கும் ஒழுக்கத்துக்கும் ஏற்ற வகையில் சமையலறையை நிர்வகிக்க ஆசிரியர்களால் முடியும் என்றேன். இது, தங்கள் காரியங்களைத் தாங்களே செய்துகொள்ளவேண்டும் என்பதில் மாணவருக்கு ஓர் அனுபவப் பாடமாகவும் இருக்கும் என்றேன். ஆசிரியர்களில் இரண்டொருவர், அது ஆகாத காரியம் என்று தலையை அசைத்தார்கள். சிலர், என் யோசனையைப் பலமாக ஆதரித்தார்கள். சிறுவர்களும் அதை வரவேற்றனர். புதுமையான காரியங்களில் சுபாவமாகச் சிறுவர்களுக்கு இருக்கும் ருசியே இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆகவே, நாங்கள் இப்பரீட்சையில் இறங்கினோம். இதுபற்றித் தமது கருத்தைத் தெரிவிக்குமாறு கவியை நான் கேட்டதற்கு, அதை ஆசிரியர்கள் ஆதரிப்பதாயிருந்தால் தமக்கு ஆட்சேபமில்லை என்று கூறினார். இந்தச் சோதனையில் சுய ராஜ்யத்தின் திறவுகோல் அடங்கியிருக்கிறது என்று அவர் சிறுவர்களிடம் கூறினார்.
இந்தப் பரீட்சை வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ஸ்ரீ பியர்ஸன் தமது உடலை வருத்திப் பாடுபட்டார்; அதிக உற்சாகத்தோடு இவ்வேலைகளில் ஈடுபட்டார். காய்கறிகளை நறுக்குவதற்கு ஒரு கோஷ்டி, தானியத்தைச் சுத்தம் செய்வதற்கு ஒரு கோஷ்டி என்று இவ்விதம் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு கோஷ்டி அமைக்கப்பட்டது. சமையலறையையும் அதன் சுற்றுப் புறங்களையும் சுத்தமாக வைத்திருக்கும் வேலையை நாகேன்பாபுவும் மற்றவர்களும் மேற்கொண்டனர். கையில் மண்வெட்டியுடன் அவர்கள் வேலை செய்வதைப் பார்க்க எனக்கு ஆனந்தமாக இருந்தது. அங்கே நூற்றிருபத்தைந்து பையன்களும் அவர்களின் ஆசிரியர்களும் இருந்தனர். அவர்கள் எல்லோரும், உடலுழைப்பான இந்த வேலையைச் சுலபமாக ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்று எதிர்பார்த்துவிட முடியாது. தினமும் விவாதங்கள் நடந்துவந்தன. சிலர் சீக்கரத்திலேயே சோர்வடைந்து விட்டனர் என்பது தெரிந்தது.ஆனால், அப்படிச் சோர்ந்துவிடக் கூடியவர் அன்று பியர்ஸன். எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்துடன் சமையலறையிலோ, அதன் பக்கத்திலோ அவர் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பதைக் காணலாம். பெரிய பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்யும் வேலையை அவர் மேற்கொண்டார். பாத்திரங்களைத் துலக்குகிறவர்களுக்கு அந்த வேலையில் சலிப்புத் தோன்றாமல் இருப்பதற்காகச் சில மாணவர்கள் அவர்களுக்கு முன்னால் சித்தார் வாத்தியம் வாசிப்பார்கள். எல்லோருமே இந்த வேலையில் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். தேனீக்கள் சுறுசுறுப்பாக இருக்கும் தேன் கூடுபோல் இருந்தது, சாந்திநிகேதனம்.
இத்தகைய மாறுதல்கள் ஒரு முறை ஆரம்பமாகிவிட்டால் எப்பொழுதும் வளர்ந்துகொண்டே இருக்கும். போனிக்ஸ் கோஷ்டியினர் தாங்களே சமைத்துக் கொண்டனர்.அவர்கள் சாப்பாடு மிகவும் எளிமையாகவும் இருந்தது. மசாலைச் சாமான்களே அந்தச் சாப்பாட்டில் இல்லை. அரிசி, பருப்பு, கறிகாய் மாத்திரமேயன்றிக் கோதுமைமாவுகூட, ஒரே சமயத்தில் ஒரே பாத்திரத்தில் நீராவியில் சமைக்கப்பட்டன. வங்காளிச் சமையலில் சீர்திருத்தம் செய்வதற்காகச் சாந்தி நிகேதனத்தின் பையன்கள் அதே போன்ற சமையலைத் தொடங்கினார்கள். இரண்டொரு உபாத்தியாயர்களும் சில மாணவர்களும் இச்சமையலைச் செய்து வந்தார்கள். கொஞ்ச காலத்திற்குப் பிறகு இப்பரீட்சை நிறுத்தப்பட்டு விட்டது. பிரபலமான இந்த ஸ்தாபனம், மத்தியில் கொஞ்ச காலத்திற்கு இந்தப் பரீட்சையை நடத்தியதால் அதற்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்பதே என் அபிப்பிராயம். இதனால் ஏற்பட்ட சில அனுபவங்கள் உபாத்தியாயர்களுக்குப் பயனுள்ளதாகவே இருந்திருக்க முடியும்.
சாந்திநிகேதனத்தில் கொஞ்ச காலம் தங்கவேண்டும் என்று விரும்பினேன். ஆனால், விதியோ வேறுவிதமாக இருந்துவிட்டது. நான் அங்கே வந்து ஒரு வாரம்கூட ஆகவில்லை. இதற்குள் கோகலே காலமாகிவிட்டார் என்று புனாவிலிருந்து எனக்குத் தந்தி வந்தது. சாந்திநிகேதனம் துக்கத்தில் ஆழ்ந்தது. அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து துக்கம் விசாரித்தார்கள். தேசத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் குறித்துத் துக்கப்படுவதற்காக ஆசிரமத்தின் கோயிலில் ஒரு விஷேசக் கூட்டம் நடந்தது. மிகுந்த பக்தியுடன் அது நடந்தது. அன்றே நான் என் மனைவியோடும் மகன்லாலுடனும் புனாவுக்குப் புறப்பட்டேன். மற்றவர்கள் எல்லோரும் சாந்திநிகேதனத்திலேயே தங்கினார்கள். ஆண்டுரூஸ், பர்த்வான் வரையில் என்னுடன் வந்தார். இந்தியாவில் சத்தியாக்கிரகத்தை நடத்துவதற்கு ஒரு சமயம் வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி வருமென்றால் அது எப்பொழுது வரும் என்பது குறித்து உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா? என்று அவர் என்னைக் கேட்டார்.
நான் கூறியதாவது: இதற்குப் பதில் சொல்லுவது கஷ்டம். ஏனெனில், ஓர் ஆண்டுக்கு நான் எதுவும் செய்வதற்கில்லை. கோகலே என்னிடம் ஒரு வாக்குறுதி வாங்கியிருக்கிறார். அனுபவம் பெறுவதற்காக நான் இந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்ய வேண்டும்; அது முடியும் வரையில் பொது விஷயங்களைக் குறித்து நான் எந்தவிதமான அபிப்பிராயமும் கூறக்கூடாது என்பது அவர் என்னிடம் வாங்கிய வாக்குறுதி. அந்த ஓராண்டு முடிந்துவிட்ட பிறகும்கூட, என் கருத்துக்களை வெளியிடுவதற்கு நான் அவசரப்படப் போவதில்லை. ஆகையால், ஐந்தாண்டுகளுக்கோ அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கோ, சத்தியாக்கிரகத்திற்கான சமயம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ஹிந்த் சுயராஜ் (இந்திய சுயராஜ்யம்) என்ற நூலில் நான் வெளியிட்டிருந்த சில கருத்துக்களைக் குறித்துக் கோகலே சிரிப்பது வழக்கம். நீங்கள் இந்தியாவில் ஓராண்டு தங்கியிருந்த பிறகு உங்கள் கருத்துக்கள் தாமாகத் திருந்தி விடும் என்று அவர் கூறுவார்.