பதிவு செய்த நாள்
10
அக்
2011
12:10
நான் தாய்நாட்டிற்கு வந்து சேருவதற்கு முன்னாலேயே போனிக்ஸிலிருந்து புறப்பட்டவர்கள் இந்தியா சேர்ந்து விட்டனர். நாங்கள் முதலில் போட்டிருந்த திட்டத்தின்படி நான் முன்னால் வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், யுத்தம் காரணமாக இங்கிலாந்தில் எனக்கு ஏற்பட்ட வேலைகளினால் எங்கள் திட்டங்களெல்லாம் மாறிவிட்டன. இந்தியாவுக்கு எப்பொழுது போவேன் என்ற நிச்சயம் இல்லாமல் நான் இங்கிலாந்தில் இருக்கவேண்டி வந்தபோது, போனிக்ஸிலிருந்து வந்தவர்களுக்கு இந்தியாவில் இடம் தேடவேண்டிய பிரச்னை எனக்கு ஏற்பட்டது. சாத்தியமானால், அவர்கள் எல்லோரும் இந்தியாவில் ஒரே இடத்தில் தங்கி, போனிக்ஸில் நடத்தியதைப் போன்ற வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று விரும்பினேன். நான் அவர்களைப் போய்த் தங்கும்படி சொல்லுவதற்கு ஏற்ற ஆசிரமம் எதுவும் இருந்ததாகவும் எனக்குத் தெரியாது. ஆகையால், ஸ்ரீஆண்டு ரூஸைச் சந்தித்து அவர் கூறுகிற யோசனையின்படி நடந்து கொள்ளுமாறு அவர்களுக்குத் தந்தி கொடுத்தேன். ஆகவே, ஸ்ரீஆண்ட்ரூஸ், அவர்களை முதலில் கங்கிரி குரு குலத்திற்கு அழைத்துச் சென்றார்.
காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தர், அவர்களை அங்கே தமது சொந்தக் குழந்தைகளாகவே கருதி நடத்தினார். அதன் பிறகு அவர்கள் சாந்தி நிகேதன ஆசிரமத்தில் தங்கினார்கள். அங்கும், கவியும் அவருடைய ஆட்களும், அதேபோல் அவர்கள்மீது அன்பைப் பொழிந்தனர். இந்த இரண்டு இடங்களிலும் அவர்கள் பெற்ற அனுபவங்கள், அவர்களுக்கும் எனக்கும் அதிக உதவியாக இருந்தன. கவி ரவீந்திரர், சிரத்தானந்தஜி, தலைமைப் பேராசிரியர் சுசீல்ருத்ரா ஆகிய மூவரும் ஆண்டுரூஸின் திரிமூர்த்திகள் என்று நான் அடிக்கடி அவரிடம் கூறுவது உண்டு. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது அவர்களைப்பற்றிப் பேசுவதென்றால் ஸ்ரீஆண்டுரூஸ் சலிப்படைவதே இல்லை. தென்னாப்பிரிக்காவைப் பற்றிய எனது இனிய நினைவுகளில் இந்தத் திரிமூர்த்திகளைக் குறித்து ஸ்ரீ ஆண்டுரூஸ் இரவு பகலாக என்னிடம் பேசியவை அதிக இனிமை உடையனவாகும். அவை என் உள்ளத்தில் அப்படியே பதிந்தும் இருந்தன. இயற்கையாகவே ஸ்ரீஆண்டுரூஸ், போனிக்ஸிலிருந்து வந்தவர்களைத் தலைமைப் பேராசிரியர் ருத்ராவுக்குப் பழக்கப்படுத்தி வைத்தார். அவருக்குத் தனி ஆசிரமம் இல்லை. ஆனால், தமது வீட்டையே போனிக்ஸிலிருந்து வந்த குடும்பத்தினர் தங்கு வதற்கு முற்றும் விட்டுவிட்டார்.
வந்து சேர்ந்த ஒரு நாளைக்குள்ளேயே தங்கள் சொந்த வீட்டில் வாழ்வதாகவே உணரும்படி ஸ்ரீருத்ராவைச் சேர்ந்தவர்கள் செய்துவிட்டனர். ஆகையால், தாங்கள் போனிக்ஸில் இருப்பதாகவே அவர்கள் எண்ணினர். போனிக்ஸ் கோஷ்டியினர் சாந்திநிகேதனத்தில் இருக்கின்றனர் என்பது நான் பம்பாயில் வந்து இறங்கிய பிறகு தான் எனக்குத் தெரியும். ஆனவே, கோகலேயைப் பார்த்து விட்டு, எவ்வளவு சீக்கிரத்தில் சாத்தியமோ அவ்வளவு சீக்கிரமாக அவர்களைப் போய்ப் பார்க்கவேண்டும் என்று நான் அவசரப்பட்டேன். பம்பாயில் எனக்கு நடந்த வரவேற்புகள், ஒரு சின்னச் சத்தியாக்கிரகம் என்று சொல்லக்கூடிய ஒன்றை நடத்தும் சந்தர்ப்பத்தை எனக்கு அளித்தன. என்னைக் கௌரவிப்பதற்காக ஸ்ரீஜஹாங்கீர் பெடிட்டின் இல்லத்தில் நடந்த விருந்தின் போது குஜராத்தியில் பேச நான் துணியவில்லை. வாழ்நாளின் சிறந்த காலத்தையெல்லாம் ஒப்பந்தத் தொழிலாளருடன் வாழ்வதில் கழித்த நான், அரண்மனை போன்று இருந்த அந்த ஆடம்பரச் சூழ்நிலையில், ஒரு முழு நாட்டுப்புறத்தான் போல் இருப்பதாகவே எண்ணிக் கொண்டேன். அப்பொழுது நான் கத்தியவாரிகளைப் போல் வேட்டி கட்டிக்கொண்டு சட்டையும் போட்டிருந்தேன்.
எனவே, நான் இப்பொழுது இருப்பதைவிட அப்பொழுது அதிக நாகரிக முள்ளவனாகவே தோன்றினாலும், பெடிட் மாளிகையின் ஆடம்பரமும் பிரகாசமும் என்னைத் திக்குமுக்காடச் செய்து விட்டன. என்றாலும், ஸர் பிரோஸ்ஷாவின் பாதுகாப்பின் கீழ் தைரியம் அடைந்து ஒருவாறு ஒழுங்காகவே சமாளித்துக் கொண்டேன். அதன் பிறகு குஜராத்தியரின் வரவேற்பு நடந்தது. எனக்கு ஒரு வரவேற்பு உபசாரம் நடத்தியே தீருவதென்று அவர்கள் தீர்மானித்து விட்டார்கள். காலஞ்சென்ற உத்தமலால் திரிவேதி, இந்த வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்தார். அக் கூட்டத்தின் நிகழ்ச்சி முறை இன்னது என்பதை முன்னாடியே அறிந்து கொண்டேன். ஸ்ரீஜின்னாவும் குஜராத்தியாகையால் அவரும் வந்திருந்தார். அங்கே அவர் தலைமை வகித்தாரா, முக்கியப் பேச்சாளராக இருந்தாரா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. அவர் ஆங்கிலத்தில் சுருக்கமாகவும் இனிமையாகவும் பேசினார். பேசிய மற்றவர்களும் அநேகமாக ஆங்கிலத்திலேயே பேசினார்கள் என்றுதான் எனக்கு ஞாபகம். நான் பேச வேண்டிய சமயம் வந்தபோது என் வந்தனத்தைக் குஜராத்தியில் தெரிவித்துக் கொண்டேன்.
குஜராத்தியினிடமும் ஹிந்துஸ்தானியினிடமும் எனக்கு பற்று அதிகம் என்றும் எனக்கு விளக்கினேன். குஜராத்திகளைக் கொண்ட ஒரு கூட்டத்தில் ஆங்கிலம் பேசப்படுவதைக் குறித்து என்னுடைய பணிவான ஆட்சேபத்தையும் தெரிவித்துக் கொண்டேன். ஏனெனில், நீண்டநாள் வெளிநாடுகளில் இருந்துவிட்டுத் திரும்பியிருக்கும் ஒருவன், நீண்ட காலமாகவே வழக்கமாகப் போய்விட்ட காரியங்களைக் கண்டிப்பது மரியாதைக் குறைவான செய்கை என்று கருதப்பட்டு விடுமோ என்று அஞ்சினேன். குஜராத்தியிலேயே பதிலளிப்பது என்பதில் நான் பிடிவாதமாக இருந்ததைக் குறித்து யாரும் தவறாக எண்ணிக் கொண்டதாகத் தோன்றவில்லை. ஒவ்வொருவரும் என் கண்டனத்தைக் குறித்துத் தாங்களே சமாதானமடைந்தார்கள் என்பதைக் கண்டு உண்மையில் நான் மகிழ்ச்சியடைந்தேன். புது மாதிரியான என்னுடைய எண்ணங்களை என் நாட்டு மக்களின் முன்பு கொண்டுவருவதில் எனக்குக் கஷ்டம் இராது என்று எண்ண அக்கூட்டம் எனக்குத் தைரியமளித்தது. பம்பாயில் சிறிது காலம் தங்கி, இவ்விதமான ஆரம்ப அனுபவங்களை நிறையப் பெற்றுப் புனாவுக்குச் சென்றேன். அங்கே வருமாறு கோகலே என்னை அழைத்திருந்தார்.