பதிவு செய்த நாள்
28
டிச
2016
12:12
கோபி: மொடச்சூர், தான்தோன்றியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நாளை நடக்கிறது. கோபி, மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், குண்டம் தேர்திருவிழா டிச.,14ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழா நாளை (29ம் தேதி) நடக்கிறது. அம்மன் சன்னதி எதிரே, 40 அடி நீளத்தில் உள்ள குண்டத்தில் பக்தர்கள் தீ மிதிப்பர். இன்று இரவு, 11:00 மணிக்கு குண்டத்துக்கு நெருப்பு மூட்டப்படும். இதற்காக, எரிகரும்பு எனப்படும், ஐந்து டன் ஊஞ்ச மரக்கட்டைகள் குவிக்கப்பட்டுள்ளன. டிச.,29ல் அதிகாலை, 3:00 மணிக்கு அம்மை அழைத்தல், குதிரை வாக்கு கேட்டல் முடிந்து, காலை, 7:40 மணிக்கு தீ மிதி விழா தொடங்கும். டிச., 30ல் தேர் வடம் பிடித்தல், டிச.,31ல் மலர் பல்லாக்கு, ஜன.,1ல் தெப்பத்தேர் உற்சவம், மஞ்சள் நீர் உற்சவம், ஜன.,2ல் மறுபூஜை, ஜன.,6ல் திருக்கல்யாணம் நடக்கிறது. பக்தர்கள் மற்றும் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்துக்காக, கோவில் அருகே காலியிடத்தில், விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.