பதிவு செய்த நாள்
17
அக்
2011
04:10
தேக சம்பந்தமே ஆத்மாவின் சுக துக்கங்களுக்கும் கோபதாபம் முதலிய குணங்களுக்கும் காரணமென்று முற்கூறிய விஷயம் இதில் விவரிக்கப்படுகிறது. உலகத்தை படைக்க எண்ணங்கொண்ட கடவுள் முதலில் பிரகிருதியையும், ஜீவனையும் சேர்க்கிறார். பிறகு பிரகிருதி ஆத்மாவின் மும்மைக் காமத்துக்கேற்ப தேவ மனுஷ்ய பசு பக்ஷி ரூபங்களைப் பெற்று சத்வ, ரஜஸ், தமோ குணங்களால் ஆத்மாவைப் பிணிக்கிறது. அவற்றுள் சத்வம் மனிதனுக்கு ஞானவொளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது.
ரஜஸ் அவா, பற்றுதல் முதலிய குணங்களையளித்து கர்மங்களில் தூண்டுகிறது; தமஸ் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றையளிக்கிறது. இம்மூன்று குணங்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயங்களில் தலையெடுத்து நிற்கும். அப்போது மனிதனுக்கு அதற்கேற்ற குணங்கள் உதிக்கின்றன. முற்கூறிய கடவுளைத் தியானிப்போன் இம்மூன்று குணங்களையும் வென்று சித்தி பெறுவான். பிரம்ம ஞானம் மோக்ஷத்துக்கு ஏதுவாகிறது 1-2 -பிறவிக்கு மூலகாரணம் 3-4 -குணங்களின் செயல் 5-10 -குணங்களின் முன்னீட்டத்தை அறிவது எப்படி 11-18 -குணாதீதம் முக்தி நிலை 19-20 -குணங்களைக் கடந்தவனது லக்ஷணம் 21-27.
ஸ்ரீபகவாநுவாச
1. பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம்
யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா:
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், யத் ஜ்ஞாத்வா ஸர்வே முநய:-எதை அறிந்து எல்லா முனிவர்களும், இத: பராம் ஸித்திம் கதா:-இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்களோ, ஜ்ஞாநாநாம் உத்தமம்-அந்த ஞானங்களிலேயே உயர்ந்த, பரம் ஜ்ஞாநம்-பரம ஞானத்தை, பூய: ப்ரவக்ஷ்யாமி-மறுபடி உரைக்கிறேன்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஞானங்களனைத்திலும் மேலான பரம ஞானத்தை உனக்கு மீட்டுமுரைக்கிறேன். அதை யறிந்து முனிவரெல்லாரும் இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்கள்.
முன்னமே பகரப்பட்ட இந்த ஞானத்தை இன்னொரு போக்கில் பகவான் பகர்கிறார். பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் மேலும் அடையவேண்டியது ஒன்றுமில்லை. மனது பரிபக்குவம் அடைந்தவர்களுக்கு ஞான சாதனம் மிக எளியது எனினும், பக்குவம் அடையாதவர்களுக்கு அது மிகக் கடினமானது. ஆதலால் வெவ்வேறு பாங்குகளிலே வைத்து அது விளக்கப்படுகிறது. ஞான பராயணர்களாயிருந்தவர்கள் முனிவர் என்ற பெயர் பெற்றனர். ஞான முதிர்ச்சிக்கு ஏற்ப அவர்களிடத்து சித்தி அல்லது பரிபூரண நிலை அமைவதாயிற்று. பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் நிறைநிலை எய்துகின்றனர் எனினும், அவர்களது உடல் வாழ்க்கை குறைபாடுடையது போன்று தென்படுகிறது. உடலில் குற்றத்தைப் புருஷனது குற்றம் என்றெண்ணி மயங்கி விடலாகாது. அவ்வுடலத்தைத் துடைத்தான பிறகு முனிவர்கள் பரிபூரணமாகிய பரவெளியில் கலக்கின்றனர். அதற்கேற்ற ஞானம் வேறு ஒரு முறையில் இங்கு விளக்கப்படுகிறது.
ஈசுவரனை அறியும் வித்தை பரவித்தை எனப்படும். சாஸ்திரங்கள், தத்துவம், தர்க்கம், இலக்கணம் முதலியன வெல்லாம் மனத்தில் பெருங்குழப்பத்தையுண்டாக்கும். கிரந்தங்கள் எல்லாம் கிரந்தி (முடிச்சு)களைப் போன்றுள்ளன. பரவித்தையைக் கற்பிக்குமானால்தான் அவைகள் பயன்படுவனவாகும்.
பிரம்ம வித்தையின் பயன் யாது?
2. இதம் ஜ்ஞாநமுபாஸ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா:
ஸர்கேऽபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச
இதம் ஜ்ஞாநம் உபாஸ்ரித்ய-இந்த ஞானத்தை அடைந்து, மம ஸாதர்ம்யம் ஆகதா:-அதனால் என்னியல்பு பெற்றோர், ஸர்கே அபி ந உபஜாயந்தே-படைப்புக் காலத்தில் பிறவார், ப்ரலயே ந வ்யதந்தி ச-ஊழியிலும் சாகமாட்டார்.
பொருள் : இந்த ஞானத்தை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.
கடலைச் சார்ந்த உப்புப் பொம்மை கடலில் தன் வியக்தியை இழக்கிறது; அதே வேளையில் கடலின் சொரூபத்தைப் பெறுகிறது. ஞானியின் நிலை அத்தகையது. பிரம்ம சொரூபத்தில் அவன் ஒன்றாகிறான். அது பிரகிருதி மயமான தோற்றம் ஒடுக்கம் எல்லாம் கடந்திருப்பதால், அதை அடைகின்றவனுக்குப் பிறப்பு, இறப்பு, பிணி முதலியன கிடையா.
வேகவைத்த நெல்லைப் பூமியில் விதைத்தால் அது மறுபடியும் முளைக்காது. வேகவைக்காத நெல்தான் முளைவிடும். அதுபோல ஸித்தனான பிறகு ஒருவன் இறப்பானானால் அவன் மறுஜன்மம் அடைவதில்லை. அஸித்தனோ தான் ஸித்தனாகும் வரையில் திரும்பத் திரும்பப் பிறவியெடுக்க வேண்டும்.
பிறவி எப்படி உண்டாகிறது? விடை வருகிறது :
3. மம யோநிர்மஹத்ப்ரஹ்ம தஸ்மிந்கர்பம் ததாம்யஹம்
ஸம்பவ: ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத
பாரத-பாரதா, மம மஹத்ப்ரஹ்ம யோநி-பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம், அஹம் தஸ்மிந் கர்பம் ததாமி-அதில் நான் கருத்தரிக்கிறேன், தத: ஸர்வபூதாநாம் ஸம்பவ: பவதி - எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.
பொருள் : பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்; அதில் நான் கருத்தரிக்கிறேன். பாரதா, எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.
பிரகிருதிக்கு பிரம்மா என்பது மற்றொரு பெயர். சதுர்முக பிரம்மா என்பதும் அதுவே. முக்குணமாயுள்ளது அது; சராசரம் அனைத்துக்கும் அது உபாதான காரணம். காரியமாகப் பரிணமித்துள்ள அனைத்துமாய் அவைகளுக்கு அப்பால் இன்னும் தோன்றா நிலையிலும் அது இருக்கிறது. ஆதலால் அது மஹத்பிரம்மா எனப்படுகிறது. எங்கும் வியாபிக்கும் தன்மை அதனிடத்துள்ளது.
பூமியில் விதையை நடுகிறோம். பூமி யோனியாயிருக்கிறது. விதை கர்ப்பமாகப் பரிணமிக்கிறது. சிசு உண்டாவதில் பெண் பால் பிரகிருதி தத்துவமாகவும் ஆண்பால் புருஷ தத்துவமாகவும் காரியப்படுகிறார்கள். அங்ஙனம் மூலப்பிரகிருதி என்ற யோனியில் ஆத்ம சைதன்யம் என்ற கர்ப்பம் வைக்கப்படுகிறபொழுது ÷க்ஷத்திர-÷க்ஷத்திரக்ஞனுடைய சம்யோகம் ஏற்படுகிறது. பிரகிருதியில் பிரகாசிக்கும் புருஷன் ஹிரண்யகர்ப்பன் என்று பெயர் பெறுகிறான். அவனுடைய எண்ணிறந்த கிரணங்களே உயிர்கள் அனைத்துமாய் இருக்கின்றன. ஜீவர்களும் ÷க்ஷத்திரக்ஞன் என்று அழைக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அறியுந்தன்மை அவர்களுக்கும் உண்டு. அவித்தையால் ஏற்பட்ட உபாதிக்கும், காமத்துக்கும், கர்மத்துக்கும் ஏற்ப எண்ணிறந்த ஜீவாத்மாக்கள் உண்டாகின்றன. அவைகளின் பாங்குகளும் எண்ணிறந்தவைகளாம்.
அடுத்த சுலோகத்தில் இக்கருத்து இன்னும் நன்கு தெளிவுபடுத்தப்படுகிறது.
4. ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா:
தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா
கௌந்தேய-குந்தியின் மகனே, ஸர்வயோநிஷு-பல விதமான பிறப்பிடங்களிலும், யா: மூர்தய: ஸம்பவந்தி-எந்த உடல்கள் (வடிவங்கள்) கொண்ட பிராணிகள் உண்டாகின்றனவோ,
தாஸாம் மஹத் ப்ரஹ்ம: யோநி:-அவை எல்லாவற்றிற்கும் பிரக்ருதியே பிறப்பிடம் (கருத்தரிக்கும் தாய்), அஹம் பீஜப்ரத: பிதா-நான் விதை அளிக்கும் தந்தை.
பொருள் : எல்லாக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் பிரம்மமே பெரிய காரணம். நான் விதை தரும் பிதா.
கர்ப்பாசயங்கள் அல்லது யோனிகள் கணக்கற்றவை. தேவர்களாக, நரர்களாக, விலங்குகளாக, பறவைகளாக, பூச்சிகளாக, புழுக்களாக, ஸ்தாவரங்களாக அவ்வவைகளுக்கேற்ற யோனிகளிடத்திருந்தே உயிர்களெல்லாம் உண்டாகின்றன. இவைகளுக்கெல்லாம் தாயாயிருப்பவன் மூலப்பிரகிருதி. அவள் பெரிய நாயகி என்று அழைக்கப்படுகிறாள். தந்தையாயிருப்பவர் பரமாத்மா.
பிரகிருதி எங்ஙனம் உயிர்களை பந்தப்படுத்துகிறது? விடை வருகிறது :
5. ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா:
நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம்
மஹாபாஹோ-பெருந்தோளாய், ஸத்த்வம் ரஜ: தம இதி-சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள், ப்ரக்ருதிஸம்பவா: குணா:-பிரகிருதியில் எழுவன, தேஹே-இவை உடம்பில், அவ்யயம் தேஹிநம்-அழிவற்ற ஆத்மாவைப், நிபத்நந்தி-பிணைக்கின்றன.
பொருள் : சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய், இவை உடம்பில் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன.
பிரகிருதி முக்குணமயமாயிருக்கிறது. உருவம் முதலிய பண்புகள் ஒரு பொருளைச் சார்ந்திருப்பது போன்று குணம் என்ற பண்பு பிரகிருதி சொரூபமாகிய குணியைச் சார்ந்திருக்கிறது என்று எண்ணலாகாது. அக்கினியும் அதன் உஷ்ணமும் வேறானவைகளல்ல, ஒன்றே. அங்ஙனம் பிரகிருதியும் குணமும் ஒன்றேயாம். உலகத்தில் உள்ள நிறங்களை யெல்லாம் மூன்று அச்சில் தொகுத்துப் படங்கள் தீட்டிவிடலாம். அதே பாங்கில் பிரகிருதி முழுதும் முக்குணங்களில் அடங்கியிருக்கிறது. முக்குணங்கள் என்பனவும் பிரகிருதி என்பதும் சொரூபத்தில் ஒன்றேயாம். முக்குணங்களை முப்பாழ் என்று சொல்லுவதும் உண்டு.
பிரகிருதி அல்லது ÷க்ஷத்திரம் ÷க்ஷத்திரக்ஞனைச் சார்ந்திருக்கிறது. குணசொரூபம் அல்லாத அவனை குணம் எப்படிப் பிணிக்க முடியும்? பிணிக்கப்படாத ஆத்மா அக்ஞானத்தால் பிணிக்கப்பட்டது போன்று தென்படுகிறது. நீர் அசைவதால் நீரிலுள்ள சூரிய பிம்பம் அசைகிறது. சூரியனே அசைவது போன்று பிம்பத்தினின்று தென்படுகிறது. உண்மையில் சூரியன் அசைவதில்லை. அங்ஙனம் கட்டுப்படாத ஆத்மா கட்டுப்பட்டது போன்று தென்படுகிறது.
இனி, முக்குணங்களின் தன்மை விளக்கப்படுகிறது :
6. தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸகமநாமயம்
ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக
அநக-பாவமற்றவனே, தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகம்-அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது, அநாமயம்-நோவற்றது, ஸுகஸங்கேந-அது இன்பச் சேர்க்கையாலும், ஜ்ஞாநஸங்கேந ச-ஞானச் சேர்க்கையாலும், பத்நாதி-கட்டுப்படுத்துவது.
பொருள் : அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.
கண்ணாடி ஒன்று தூயதாய் இருப்பதோடு சத்துவகுணத்தை ஒப்பிடலாம். அழுக்குப்படியாததும் ஸ்படிகம் போன்று அமைந்ததுமான கண்ணாடியின் வாயிலாக வெளிச்சம் நன்கு வெளியாகும். சத்துவகுணம் அங்ஙனம் ஆத்மப் பிரகாசத்தை விளக்கவல்லது. ஒப்பமான கண்ணாடியின் மூலம் அப்புறம் பார்த்தால் அது காட்சியை இடர்ப்படுத்துவதில்லை. பொருள்கள் உள்ளபடி அதன் வாயிலாக விளங்குகின்றன. அவைகளை உள்ளபடி கண்டறிவது ஞானம். புறப்பொருள்களைப் பார்த்தறியும்போது அவைகள் தரும் இன்பத்தில் நாட்டம் வருகிறது. சுகத்தை அனுபவிப்பதற்கு ஏற்றவாறு அதில் பற்றுதல் உண்டாகிறது. இன்னும் அதிக சுகத்தைப் புறப்பொருள்கள் எப்படித் தரும் என்ற ஆராய்ச்சி மேலும் ஞானப்பற்றை வளர்க்கிறது. புற உலகத்தைப்பற்றிய ஞானமும் அதனிடத்திருந்து பெறும் சுகமும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகளாயிருக்கின்றன. ஆதலால் சத்துவகுணம் ஓங்கப்பெற்றுள்ள ஒருவன் மனதைப் பிரவிருத்தியிலே திருப்புவானாகில் அவனுக்கு சுகப்பற்றும் பிரகிருதி ஞானப்பற்றும் ஏராளமாயுண்டாகின்றன. மற்ற பந்தங்களை யெல்லாம்விட ஸத்துவகுணம் உண்டுபண்ணுகிற பந்தம் மிக வலிவு வாய்ந்தது. அந்த பந்தத்தை உடைத்தெறிவது மிகக் கஷ்டமானது. ஏனென்றால் ஆத்மானந்தத்துக்கு ஒப்பான சுகத்தை அது கொடுக்கிறது; நுண்ணறிவையும் அது வளர்க்கிறது. சுகத்துக்கும் அறிவுக்கும் அப்பால் செல்ல மனிதனுக்கு விருப்பம் வருவதில்லை.
7. ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணாஸங்கஸமுத்பவம்
தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம்
கௌந்தேய-குந்தி மகனே, ராகாத்மகம் ரஜ:-விருப்ப இயல்புடையது ரஜோகுணம், த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம் வித்தி-அவாவின் சேர்க்கையால் பிறப்பது என்று அறிந்து கொள், தத் தேஹிநம் கர்மஸங்கேந-அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால், நிபத்நாதி-கட்டுகிறது.
பொருள் : ரஜோகுணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்திமகனே, அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.
ரஜோகுணம் ஆசை வடிவெடுத்து முடிவில்லாத பிரவிருத்தியை உண்டுபண்ணுகிறது. காவிக்கல் வெள்ளை வஸ்திரத்தைச் சிவப்பாக்குவது போன்று ரஜோகுணம் ஆத்மாவுக்கு வர்ணம் கொடுக்கிறது. திருஷ்ணா அல்லது வேட்கை யென்பது அடையாத பொருளின்மீது அடையவேண்டுமென்று கொண்டுள்ள விருப்பம். ஆஸங்கம் அல்லது பற்றுதல் என்பது பெற்றுள்ள பொருளை விட்டுப் பிரியலாகாது என்ற மனப்பான்மை. தோற்றத்திலுள்ள இவ்வுலகப் பொருள்களில் பற்றும், தோன்றாதுள்ள மறுமையில் பற்றுதலும் ரஜோகுணத்தால் ஆத்மாவுக்கு வருகின்றன. விறகுக் கட்டையானது எரிகின்ற தீயை வளர்ப்பது போன்று ரஜோ குணம் வினைப்பற்றை வளர்க்கிறது. கர்மம் செய்யாத ஆத்மாவைக் கர்த்தாவாகப் பண்ணிவைப்பது இக்குணம். ரஜோகுணம் இருக்கும் வரையில் கர்மத்தில் பற்றும் தன்னைக் கர்த்தாவென்று எண்ணுகிற எண்ணமும் ஆத்மாவுக்குண்டு.
8. தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம்
ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்நிபத்நாதி பாரத
பாரத-பாரதா! ஸர்வதேஹிநாம் மோஹநம் தம:-உடற்பற்றுடைய எல்லாரையும் மயக்கக் கூடிய தமோ குணமோ, அஜ்ஞாநஜம் வித்தி-அஞ்ஞானத்திலிருந்து உண்டாவதாக தெரிந்து கொள், தத் ப்ரமாத ஆலஸ்ய நித்ராபி-அது தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும்,
நிபத்நாதி-கட்டுப்படுத்துகிறது.
பொருள் : தமோகுணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச்செய்வது. தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது. பாரதா!
அக்ஞான இருளினின்று வருவது தமோகுணம். இது விவேகத்தை மறைக்கும் தன்மையுடையது. சத்வகுணத்தைக் கெடுப்பது ரஜோகுணம். தமோகுணமோ சத்துவம், ரஜஸ் ஆகிய இரண்டையும் கெடுக்கிறது. அதனால் அறிவற்று, உணர்ச்சியற்று, செயலற்று மனிதன் ஜடம்போன்று ஆய்விடுகிறான்.
மூன்று குணங்களும் தொகுத்து மீண்டும் பகரப்படுகின்றன:
9. ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பாரத
ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே ஸஞ்ஜயத்யுத
பாரத-பாரதா, ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி-சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது,
ரஜ: கர்மணி-ரஜோகுணம் செய்கையில் பற்றுறுத்துகிறது, தம: து ஜ்ஞாநமாவ்ருத்ய-தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை), ப்ரமாதே உத ஸஞ்ஜயதி-மயக்கத்தில் பிணிக்கிறது.
பொருள் : சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது. பாரதா, ரஜோகுணம் செய்கையில் பற்றுறுத்துகிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை) மயக்கத்தில் பிணிக்கிறது.
ஒரு மனிதன் எதில் பற்று வைத்திருக்கிறானோ அதிலிருந்து அவனிடத்து எக்குணம் தலையெடுத்திருக்கிறது என்பது விளங்கும். விதவிதமான இன்பங்களை அனுபவிக்கவேண்டுமென்று விரும்புபவனிடத்து சத்துவகுணம் முன்னணியில் இருக்கிறது. ஒன்றன்பின் ஒன்றாகப் பலவிதமான அலுவல்களில் ஈடுபட ஆசைப்படுபவனிடத்து ரஜோகுணம் ஓங்கியிருக்கிறது. மேகம் சூரியனை மறைப்பது போன்று தமோகுணம் ஞானத்தை மறைக்கிறது. தனக்கு ஏற்பட்டுள்ள கடமைகளைச் செய்யாது விட்டு விடுவதால் தமோகுண விருத்தியுடையவனுக்குக் கவலை யொன்றும் உண்டாவதில்லை. காலத்தை வீணாகக் கழிப்பது, பொருள் விரயமாவது ஆகியவைகளைக் குறித்து அவன் வருந்துவதில்லை. ஜடம்போன்று அவன் செயலற்றுக் கிடப்பான்.
இக்குணங்களின் ஆதிக்கம் எப்படி நடைபெறுகிறது? அதற்கு விடை வருகிறது :
10. ரஜஸ்தமஸ்சாபிபூய ஸத்த்வம் பவதி பாரத
ரஜ: ஸத்த்வம் தமஸ்சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா
பாரத-பாரதா, ரஜ: தம: ச அபிபூய ஸத்த்வம் பவதி-ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது, ஸத்த்வம் தம: ச ரஜ:-சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி, ரஜோ குணம் நிற்கிறது, ததா ஏவ ஸத்த்வம் ரஜ: ச தம:-அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.
பொருள் : பாரதா (சில வேளை) ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது. (சிலவேளை) சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ரஜோ குணம் நிற்கிறது; அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.
தேகம் எடுத்துள்ள ஒருவனிடத்து மூன்று குணங்களும் இருக்கின்றன. அவைகளுள் ஒரு குணம் முன்னணிக்கு வரும்பொழுது மற்ற இரண்டும் பின்னணிக்குப் போய்விடுகின்றன. விழித்திருந்து அமைதியே வடிவெடுத்தவனாக மனிதன் ஆகும்போது சத்துவகுணம் ஓங்கிநிற்கிறது. அப்பொழுது இன்பமும் ஞானமும் விரிவடைகின்றன. ரஜோகுணம் தலையெடுக்கின்றபொழுது விதவிதமான கர்மத்தில் மனிதன் ஈடுபடுகின்றான். பின்பு தமோ குணம் ஓங்குமிடத்து, மனிதன் கற்கவும் முடியாது, கர்மம் செய்யவும் முடியாது; சோம்பலும் தூக்கமும் வருகின்றன. நாள்தோறும் மூன்று குணங்களும் மாறி மாறி முன்னணிக்கு வருகின்றன. இது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது.
அந்தந்த குணத்தின் செயல் மேலும் விளக்கப்படுகிறது :
11. ஸர்வத்வாரேஷு தேஹேऽஸ்மிந்ப்ரகாஸ உபஜாயதே
ஜ்ஞாநம் யதா ததா வித்யாத்விவ்ருத்தம் ஸத்த்வமித்யுத
யதா அஸ்மிந் தேஹே ஸர்வத்வாரேஷு-எப்போது இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும், ப்ரகாஸ ஜ்ஞாநம் உபஜாயதே-ஞான ஒளி பிறக்கிறதோ, ததா ஸத்த்வம் உத-அப்போது சத்வ குணம், விவ்ருத்தம் இதி வித்யாத்-வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்.
பொருள் : இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும் ஞான ஒளி பிறக்குமாயின் அப்போது சத்வ குணம் வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்.
பல வர்ணங்கள் தீட்டிய கண்ணாடிகள் அமைக்கப்பெற்றுள்ள பெட்டி ஒன்றனுள் தீபம் வைத்தால் எல்லாக் கண்ணாடிகள் வாயிலாகவும் அதன் வெளிச்சம் வெளியாகும். தீபத்தின் பிரகாசத்திற்கேற்ப வெளிச்சமும் அதிகரிக்கும். மனிதனுடைய உடல் அத்தகைய பெட்டி போன்றது. கண், காது, வாய், மூக்கு, மெய் ஆகிய இந்திரியங்கள் வாயில்களாகின்றன. குண வேறுபாட்டுக்கு ஏற்ற ஆத்மப் பிரகாசம் இந்திரியங்கள் வாயிலாக ஒளிர்கின்றது. சத்துவகுணம் ஓங்குமிடத்து ஆத்மப் பிரகாசம் நன்கு மிளிர்கிறது. பார்ப்பதில், கேட்பதில், ஒவ்வொரு இந்திரியத்தையும் கையாளுதலில் எழிலும் தெளிவும் திகழ்கின்றன. இந்நிலையில் மெய்யறிவு ஓங்குகிறது.
12. லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமஸம: ஸ்ப்ருஹா
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப
பரதர்ஷப-பாரதக்காளையே! ரஜஸி விவ்ருத்தே-ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து, லோப: ப்ரவ்ருத்தி-அவா, முயற்சி, கர்மணாம் ஆரம்ப:-தொழிலெடுப்பு, அஸம: ஸ்ப்ருஹா - அமைதியின்மை, விருப்பம், ஏதாநி ஜாயந்தே-இவை தோன்றுகின்றன.
பொருள் : அவா, முயற்சி, தொழிலெடுப்பு, அமைதியின்மை, விருப்பம் இவை ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து தோன்றுகின்றன. பாரதா, காளையே!
பிறர் பொருள்களையெல்லாம் தன்னுடையவையாக்கிக் கொள்ள விரும்புதல் பேராசை அல்லது லோபமாகிறது. இந்திரியங்கள் வாயிலாக வெளியுலக வியவகாரங்களில் முனைந்து போதல் பிரவிருத்தியெனப்படுகிறது. அப்படிச் செல்வதால் புதிய புதிய கர்மங்களைத் துவக்குவதில் ஊக்கம் உண்டாகிறது. அங்ஙனம் துவக்கிய கர்மங்களில் வெற்றியடையும்பொழுது மகிழ்வும், தோல்வியடையும்பொழுது மனச்சோர்வும் உண்டாகி, அமைதியின்மையை வருவித்துவிடுகிறது. தொடுத்த கர்மங்களைச் செப்பனிட விருப்பம் ஏற்படுவதால் வினைவேட்கை அல்லது தொழில் தாகம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இவை யாவும் ரஜோகுணத்தின் அறிகுறிகளாம்.
13. அப்ரகாஸோऽப்ரவ்ருத்திஸ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே குருநந்தந
குருநந்தந-குருகுலச்செல்வமே! தமஸி விவ்ருத்தே- தமோ குணம் ஓங்குமிடத்தே, அப்ரகாஸ: அப்ரவ்ருத்தி: ச ப்ரமாத: மோஹ ஏவ ச-ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம்,
ஏதாநி ஜாயந்தே-இவை பிறக்கின்றன.
பொருள் : ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம் இவை தமோ குணம் ஓங்குமிடத்தே பிறப்பன. குருகுலச்செல்வமே!
தமோகுணத்தின் ஆதிக்கத்தால் மனத்தகத்து இருள் சூழ்கிறது; அதனால் விவேகம் மறைந்துபட்டுப்போகிறது. ஒரு செயலையும் செய்யாது சோம்பித் திரியும் தன்மை தலையெடுக்கிறது. அஜாக்கிரதையே வடிவெடுத்தவனாக மனிதன் மாறியமைகிறபடியால் அவன் தவறுதல் செய்தற்கு இடம் ஏற்படுகிறது. மதி மயக்கம் அல்லது திரிவுபட்ட அறிவும் அதன் பயனாக வருகிறது.
குணம் மேலோங்குதற்கும் மறுபிறப்புக்கும் தொடர்வு உண்டா? இதற்கு விடை வருகிறது :
14. யதா ஸத்த்வே ப்ரவ்ருத்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத்
ததோத்தமவிதாம் லோகாநமலாந்ப்ரதிபத்யதே
யதா தேஹப்ருத் ஸத்த்வே ப்ரவ்ருத்தே- எப்போது மனிதன் சத்வம் ஓங்கி நிற்கையிலே, ப்ரலயம் யாதி-இறக்கிறானோ, ததா து உத்தமவிதாம்-அப்போது மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின், அமலாந் லோகாந்-களங்கமற்ற உலகங்களை, ப்ரதிபத்யதே -அடைகிறான்.
பொருள் : சத்வம் ஓங்கி நிற்கையிலே சரீரி இறப்பானாயின், மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின் உலகங்களை அடைகிறான்.
உடலை விடும்பொழுது உள்ளத்தில் என்ன எண்ணம் நிலைத்திருக்கிறதோ அதற்கு ஏற்ப மறுபிறப்பு அமைகிறது. சத்துவ குணம் ஓங்கியிருக்கும்பொழுது தெய்விக சிந்தனையிருப்பது உறுதி. பிரம்மலோகம் முதலிய இடங்களில் சத்துவகுணமே நிறைந்திருப்பதால் அம்மனிதன் அந்த லோகத்தை அடைகிறான். உத்தமத்தை அறிந்தவர்கள் என்று ஈண்டு இயம்பப்படுவது பிரம்மா அல்லது ஹிரண்யகர்ப்பனை அறிந்தவர்களாம். ஆனால் அவர்களுடைய அந்த ஞானம் இன்னும் பரஞானம் ஆகவில்லை.
15. ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கிஷு ஜாயதே
ததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே
ரஜஸி ப்ரலயம் கத்வா-ரஜோ குணத்தில் இறப்போன், கர்மஸங்கிஷு ஜாயதே-கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான், ததா தமஸி ப்ரலீந:-அவ்வாறே, தமஸில் இறப்போன், மூடயோநிஷு ஜாயதே =மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.
பொருள் : ரஜோ குணத்தில் இறப்போன் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே, தமஸில் இறப்போன் மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.
முன்பு சொன்ன சத்துவகுணத்தில் உடலை வகுப்பவன் முழு அறிவோடு அமைதியாகச் சாகிறான். ரஜோகுணத்தில் மரணமடைபவன் பதைபதைப்போடும், பேராவலோடும், துன்பத்தோடும் உயிர் துறக்கிறான். இடையறாது கர்மம் செய்யும் பாங்குடையவனாக அவன் பிறக்கிறான். தமோகுணத்தில் தேகத்தை விடுபவன் பிரக்ஞையின்றி ஜடநிலையில் சாகிறான். அவன் மிருகமாக அல்லது அறிவிலியாகப் பிறக்கிறான்.
தமோகுணத்தில் இருப்பவன் ரஜோகுணத்துக்கு வரமுயல வேண்டும். ரஜோகுணத்தில் இருப்பவன் சத்துவகுணத்திற்கு மேலேறுதல் முறை. ஏனென்றால் :
16. கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் பலம்
ரஜஸஸ்து பலம் து:கமஜ்ஞாநம் தமஸ: பலம்
ஸுக்ருதஸ்ய கர்மண:-நற்செய்கையின், பலம் து ஸாத்த்விகம்-பயனே சத்வ இயல்புடைய, நிர்மலம் ஆஹு:-நிர்மலத் தன்மை என்று கூறுவர், ரஜஸ: பலம் து:கம்-ரஜோ குணத்தின் பயன் துன்பம், தமஸ: பலம் அஜ்ஞாநம்-தமோ குணத்தின் பயன் அறிவின்மை.
பொருள் : சத்வ இயல்புடைய நிர்மலத் தன்மையே நற்செய்கையின் பயனென்பர். ரஜோ குணத்தின் பயன் துன்பம். தமோ குணத்தின் பயன் அறிவின்மை.
தமோகுணத்தினின்று தொழிலின்மையும் தீவினையும் தோன்றுகின்றன. அதனால் மனிதனுக்கு முன்னேற்றம் இல்லை. ஆழ்ந்து செயலில் ஈடுபடும்போது அது துன்பத்தை விளைவிக்கும். ஆனால் அத்துன்பம் வேண்டப்படாததல்ல. துன்பப்படுபவனே தன்னைத் திருத்தியமைக்கிறான். மனிதனுடைய முன்னேற்றத்துக்குத் துன்பம் பயன்படுவதுபோன்று வேறு எதுவும் பயன்படுவதில்லை. துயரத்தால் தன்னைத் தூயவனாக்குகின்றவன் நற்செயலுக்கு வருகிறான். அப்பொழுது தர்மம் அவன் மூலம் திகழ்கிறது. அதனால் அவன் சத்துவகுணம் எய்துகிறான்; தூயவன் ஆகிறான்.
குணங்களின் பயன் இன்னும் எவ்விதமாகப் பரிணமிக்கிறது? விடை வருகிறது :
17. ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோऽஜ்ஞாநமேவ ச
ஸத்த்வாத் ஜ்ஞாநம் ஸஞ்ஜாயதே-சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது, ரஜஸ: லோப ஏவ ச-ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமஸ: ப்ரமாத மோஹௌ ச-தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஜ்ஞாநம் ஏவ பவத:-அஞ்ஞானமும் தோன்றுகின்றன.
பொருள் : சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.
இதனால்தான் மனிதன் படிப்படியாகக் கீழான குணங்களினின்று மேலான குணங்களுக்குப்போக ஓயாது முயலவேண்டும். மேலும் :
18. ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா:
ஜகந்யகுணவ்ருத்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா:
ஸத்த்வஸ்தா : ஊர்த்வம் கச்சந்தி-சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள், ராஜஸா: மத்யே திஷ்டந்தி-ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள், ஜகந்ய குண வ்ருத்திஸ்தா:-மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க், தாமஸா: அத: கச்சந்தி-தாமஸர் கீழே செல்வர்.
பொருள் : சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள். ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள். தாமஸர் மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க் கீழே செல்வர்.
ஜீவர்கள் மேலான அல்லது கீழான பிறப்பெடுப்பதற்கும் குணவளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்வுண்டு. சத்துவகுணம் ஓங்கப்பெற்ற ஒருவன் தெய்வப் பிறப்பும், விவேகம் வைராக்கியம் வாய்க்கப்பெற்ற மானுடப் பிறப்பும் எடுக்கிறான். அவைகளின் வாயிலாக அவன் படிப்படியாகப் பரத்தை நோக்கிச் செல்லுகிறான். ரஜோகுணம் நிறைந்துள்ளவன் கர்மங்கள் பல செய்கின்றானெனினும் விவேகமின்மையால் முன்னேற்றமடைவதில்லை. பிற்போக்கில் போவதுமில்லை. தனக்கு விவேகம் வரும் வரையில் அவன் நெடுங்காலம் வினையாற்றுவதிலேயே கருத்துடையவனாயிருக்கிறான். ஆனால் தமோகுணத்தில் ஆழ்ந்தவனோ படிப்படியாகக் கீழ்மையையே அடைகிறான். கீழ்மையகற்றி மேன்மையடைந்தால் மட்டும் போதுமா? விடை வருகிறது :
19. நாந்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டாநுபஸ்யதி
குணேப்யஸ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோऽதிகச்சதி
யதா த்ரஷ்டா குணேப்ய:-எப்போது பார்ப்பவன் குணங்களை, அந்யம் கர்தாரம் ந அநுபஸ், யதி-தவிர வேறான ஒன்றை கர்த்தா (செயலை செய்பவன்) என்று பார்ப்பதில்லையோ, குணேப்ய: ச பரம் வேத்தி-குணங்களுக்கு மேலுள்ள பொருளை (பரமாத்மாவை) அறிகிறானோ,
ஸ: மத்பாவம் அதிகச்சதி-அவன் என் இயல்பை அறிவான்.
பொருள் : குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்களுக்கு மேலுள்ள பொருளையும் ஜீவன் அறிவானாயின் என் இயல்பை அறிவான்.
மூன்று குணங்களும் பிரகிருதி சொரூபமாதலால் இக்குணங்களுக்குப் புறம்பாகக் கர்மத்துக்குக் கர்த்தா யாருமில்லை. முக்குணங்களே கர்த்தாக்களாகின்றன. இந்திரியங்கள், இந்திரியார்த்தங்கள் எல்லாம் குணத்தினின்று உண்டானவைகள். கீழான குணத்தைக் கடந்து மேலான குணத்துக்கு வருவது ஜீவிதத்தின் லட்சியமாகும். பின்பு சுத்த சத்துவகுணத்தை யடைந்தால் போதுமா? அதற்குமேல் ஒன்றுமில்லையா? உண்டு. முக்குணங்களையும் கடந்து அப்பால் செல்லுவதே வாழ்க்கையின் குறிக்கோளாகும். முக்குணங்களுக்கு அப்பால் இருக்கிறது பரமாத்மா. அது ஒரு செயலுக்கும் கர்த்தா அல்ல. அது வெறும் சாக்ஷி மாத்திரம். அப்பரமாத்மாவை அறிகிறவன் பரமாத்மாவுக்கு உரியவன் ஆகிறான். இன்னும் பரமாத்மாவின் சொரூபமும் அவனுக்குரியது ஆகிறது.
மனிதனுடைய ஹிருதயத்தில் ஈசுவரன் தோற்றமடைவதன் அடையாளங்கள் யாவை? அருணோதயத்தின் போது தோன்றும் பிரகாசம் சூரியனுடைய உதயத்தைத் தெரிவிக்கின்றது. அது போல, ஈசுவரன் உள்ளத்தில் உதயமாவதற்கு முன்னால், சுயநலம் கருதாத்தன்மை, பரிசுத்தம், சன்மார்க்கம் ஆகிய குணங்கள் உண்டாகின்றன.
பிரம்ம சாக்ஷõத்காரத்தால் வரும் நன்மை யாது? விடை வருகிறது :
20. குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹஸமுத்பவாந்
ஜந்மம்ருத்யுஜராது:கைர்விமுக்தோऽம்ருதமஸ்நுதே
தேஹீ தேஹஸமுத்பவாந்-உடம்பிலே பிறக்கும், ஏதாந் த்ரீந் குணாந் அதீத்ய-இந்த மூன்று குணங்களையும் கடந்து, ஜந்ம ம்ருத்யு ஜரா து:கை:-பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும், விமுக்த: அம்ருதம் அஸ்நுதே-விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்.
பொருள் : உடம்பிலே பிறக்கும் இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும் விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்.
பிரம்ம சொரூபத்தை அடைதல் என்பதன் பொருள் இங்கு விளக்கப்படுகிறது. குணங்களால் ஆகிய உடலில் ஜீவன் வசிக்கிறான். ஆனால் அவன் உடலோடு சம்பந்தப்பட்டவனல்லன். தேகத்துக்குரிய பிறப்பு, இறப்பு, மூப்பு இவைகளால் வரும் துன்பம் ஜீவன் முக்தனுக்குக் கிடையாது. இவ்வுடலில் இருக்கும் பொழுதே அவன் தங்கு தடையற்ற பிரம்மானந்தத்தில் இருக்கிறான். குணாதீதத்தில் அவன் பேரானந்தம் துய்க்கிறான்.
சரீரம் தோன்றியிருக்கிறது. அது மறுபடியும் நசித்துப் போகும். ஆனால் ஆத்மாவுக்கு மட்டும் நாசமே இல்லை.கொட்டைப் பாக்கைப்போல் ஆத்மாவும் உடலும் இருக்கின்றன. பாக்கு முற்றினால் கொட்டை வேறு, மேல்தோல் வேறாகிவிடும்; முற்றாமல் காயாக இருக்கும்போது அப்படிப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம். ஈசுவர தரிசனம் உண்டான பிறகு ஆத்மா வேறு, சரீரம் வேறு என்ற ஞானம் உதிக்கும்.
இப்பொழுது கேள்வி ஒன்று கேட்பதற்கான சந்தர்ப்பம் உண்டாகிறது. அர்ஜுனன் அதைப் பயன்படுத்துகிறான்.
அர்ஜுந உவாச
21. கைர்லிங்கைஸ்த்ரீந்குணாநேதாநதீதோ பவதி ப்ரபோ
கிமாசார: கதம் சைதாம்ஸ்த்ரீந்குணாநதிவர்ததே
அர்ஜுந உவாச ப்ரபோ!-அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே, ஏதாந் த்ரீந் குணாந் அதீத:-மூன்று குணங்களையும் கடந்தோன், கை: லிங்கை: பவதி-என்ன அடையாள ங்களுடையவன்? ச கிமாசார:-எங்ஙனம் ஒழுகுவான்? கதம் ஏதாந் த்ரீந் குணாந் அதிவர்ததே-இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே, மூன்று குணங்களையும் கடந்தோன், என்ன அடையாளங்களுடையவன்? எங்ஙனம் ஒழுகுவான்? இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?
மூன்று குணங்களையும் கடந்திருப்பதன் அறிகுறிகள் எவை? கடந்தவன் பிறகு உடல் வாழ்க்கையை எப்படி நடாத்துகிறான்? ஒருவன் முக்குணங்களைக் கடக்க ஆரம்பித்துவிட்டான் என்று எப்படித் தெரிந்துகொள்வது ?
இதுதான் அர்ஜுனனுடைய கேள்வி. இதற்கு விடை வருகிறது :
ஸ்ரீபகவாநுவாச
22. ப்ரகாஸம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்டவ
ந த்வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி
ஸ்ரீபகவாந் உவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பாண்டவ-பாண்டவா, ப்ரகாஸம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹம் ஏவ-ஒளி, தொழில், மயக்கம் – இவை, ஸம்ப்ரவ்ருத்தாநி-தோன்றும்போது,
ந த்வேஷ்டி-இவற்றைப் பகைத்திடான், நிவ்ருத்தாநி ந காங்க்ஷதி-நீங்கியபோது இவற்றை விரும்பான்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒளி, தொழில், மயக்கம் – இவை தோன்றும்போது இவற்றைப் பகைத்திடான்; நீங்கியபோது இவற்றை விரும்பான்.
சத்துவ குணத்தில் கட்டுண்டிருப்பவன் அறிவையும் இன்பத்தையும் வேண்டுகிறான். சாஸ்திர ஞானப்பற்று மிக வல்லமை வாய்ந்தது. எளிதில் அது மனதைவிட்டு அகலாது. கேள்வியறிவும் இன்பமும் வாய்க்காதவிடத்து ஒருவன் பேராவலோடு அவைகளை நாடுகிறான். சத்துவ குணத்தைக் கடந்து அப்பாற் சென்றவனுக்கு இந்த விருப்பு வெறுப்பு இரண்டும் இல்லை. ரஜோகுணத்தின் வசப்பட்டவன் சும்மா இருக்கமுடியாது. ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண்டும். சில கர்மங்களில் அவனுக்கும் பெருவிருப்பம் உண்டாகிறது. வேறு சில கர்மங்களில் தாங்கவொண்ணா வெறுப்பு உண்டாகிறது. நல்ல கர்மம் என்று தனக்குத் தோன்றுவதை அவன் ஆவலோடு செய்கிறான். கெட்ட கர்மம் என்று தோன்றுவதை அவன் சினந்து வெறுக்கிறான். குணத்தைக் கடந்தவனோ மறந்தும் கேடுடைய கர்மம் செய்ய முடியாது. தோட்டியின் வேலையிலிருந்து தேவாராதனை ஈறாக எத்தொழிலையும் அவன் பற்றற்றுச் செய்கிறான். அப்படிச் செய்யத் தொழிலொன்றும் இல்லாது போய்விட்டால் அதனால் துன்பம் ஒன்றும் அவனுக்கில்லை. தமோகுணப் பற்றுடையானுக்குச் சோம்பலிலும் தூக்கத்திலும் விருப்பம். அதற்குப் பங்கம் வந்தால் வெறுப்பு. குணாதீதத்தில் இருப்பவனுக்கு விழிப்பும் உறக்கமும் ஒன்றே. தூய கண்ணாடியின் முன்னிலையில் எது தோன்றினாலும் அதை அது அப்படியே விளக்குகிறது. அக்கண்ணாடியில் ஒன்றும் தோன்றாதிருக்கும்பொழுது கண்ணாடி தன்மயமாயிருக்கிறது. அதன் முன்னிலையில் பொருள்களின் தோற்றத்தாலும் மறைவாலும் கண்ணாடிக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. குணாதீதத்தில் சென்றவனது மனத்தகத்து முக்குணங்களின் தோற்றமும் மறைவும் அத்தகைய இடம் பெறுகின்றன. குணங்களின் செயல்களுக்கிடையில் அவன் குணாதீதனாய் இருக்கிறான். அதாவது அவன் யாண்டும் ஸஹஜ நிஷ்டையில் இருக்கிறான்.
ஜீவன் முக்தர்கள் உலகத்தில் வாழ்வது எங்ஙனம்? மீன் கொத்திப் பறவைகளைப்போன்று அவர்கள் உலகில் வாழ்கின்றார்கள். அப்பறவை நீரில் ஆழ முழுகுகிறது என்றாலும் அதன் சிறகுகள் தண்ணீரால் நனைவதில்லை. இரண்டொரு துளி நீர் ஒட்டிக் கொண்டிருக்குமானால், சரீரத்தை அசைத்துச் சுலபமாக அதனை நீக்கிவிடுகிறது.
இது அர்ஜுனனுடைய முதற்கேள்விக்கு விடை :
23. உதாஸீநவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே
குணா வர்தந்த இத்யேவ யோऽவதிஷ்டதி நேங்கதே
ய: உதாஸீநவத் ஆஸீந:-புறக்கணித்தான் போலே இருப்பான், குணை: ந விசால்யதே-குணங்களால் சலிப்படையான், குணா: ஏவ வர்தந்தே இதி-குணங்கள் சுழல்கின்றன என்று, ய: அவதிஷ்டதி-எவன் எண்ணி இருக்கிறானோ, ந இங்கதே-அவன் அதிலிருந்து நிலை குலைவதில்லை.
பொருள் : புறக்கணித்தான் போலே இருப்பான். குணங்களால் சலிப்படையான். குணங்கள் சுழல்கின்றன என்றெண்ணி அசைவற்று நிற்பான்.
மலையில் உள்ள மரம் செடி கொடிகளெல்லாம் அசைந்தாலும் மலை அசைவதில்லை. அங்ஙனம் ஆத்மாவைச் சார்ந்துள்ள குணங்களெல்லாம் அசைந்தாலும் ஆத்மா அசைவதில்லை. உதாசீனன் அல்லது ஒரு பக்ஷமும் சாராதவனாய் குணாதீதத்தில் சென்ற ஞானி நடுவு நிற்கின்றான். மேலும் :
24. ஸமது:கஸுக: ஸ்வஸ்த: ஸமலோஷ்டாஸ்மகாஞ்சந:
துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம்ஸ்துதி:
ஸ்வஸ்த: ஸமது:கஸுக:-தன்னிலை உணர்ந்து நிற்பவன் துன்பத்தையும் இன்பத்தையும் நிகராக கொண்டவன், ஸம லோஷ்ட அஸ்ம காஞ்சந:-ஓட்டையும், கல்லையும், பொன்னையும், சமமாக காண்பவன், ப்ரிய அப்ரிய: துல்ய தீர:-இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன், துல்ய நிந்தா ஆத்ம ஸம்ஸ்துதி:-இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்.
பொருள் : துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன் தன்னிலையில் நிற்பான்; ஓட்டையும், கல்லையும், பொன்னையும், நிகராகக் காண்பான்; இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன்; இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்.
தன் உடலாக வடிவெடுத்திருப்பதும் குணங்கள்; புறவுலகாக வடிவெடுத்திருப்பதும் குணங்கள். இங்ஙனம் குணங்கள் குணங்களோடு விதவிதமாகச் சம்பந்தப்பட்டிருக்கையில் ஆத்ம சொரூபத்தை முற்றும் அறிந்துள்ள ஞானி ஆத்ம திருப்தனாக, குணாதீதனாக இருக்கிறான்.
25. மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ:
ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத: ஸ உச்யதே
மாநாபமாநயோ: துல்ய:-மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான், மித்ரா அரிபக்ஷயோ: துல்ய:-நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான், ஸர்வாரம்பபரித்யாகீ-எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந் துறந்தான், ஸ: குணாதீத: உச்யதே -அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான்.
பொருள் : மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான். நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான்; எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந் துறந்தான், அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான்.
குணங்களில் கட்டுண்டு அக்ஞானத்தில் இருப்பவர்களுக்கு மானம், அவமானம், நட்பு, பகை முதலியன உண்டு. ஜீவபோதம் இருப்பதால் தனக்கெனத் தொழில் புரிதலும் உண்டு. குணங்களைக் கடந்த நிறை ஞானிக்கு இவையொன்றுமில்லை. இந்த மூன்று சுலோகங்களும் அர்ஜுனனுடைய இரண்டாவது கேள்விக்கு விடையாக வந்துள்ளன.
எந்த உபாயத்தைக் கையாண்டு ஞானி மூன்று குணங்களையும் கடக்கிறான் என்ற கேள்விக்கு இனி விடை வருகிறது :
26. மாம் ச யோऽவ்யபிசாரேண பக்தியோகேந ஸேவதே
ஸ குணாந்ஸமதீத்யைதாந்ப்ரஹ்மபூயாய கல்பதே
ச ய: அவ்யபிசாரேண-மேலும் எவன் வேறுபாடில்லாத, பக்தியோகேந மாம் ஸேவதே-பக்தியோகத்தால் என்னை வழிபடுகிறானோ, ஸ: ஏதாந் குணாந் ஸமதீத்ய-அவன் இந்த குணங்களைக் கடந்து, ப்ரஹ்மபூயாய கல்பதே-பிரம்மத்தன்மையை பெறத்தகுவான்.
பொருள் : வேறுபாடில்லாத பக்தியோகத்தால் என்னை வழிபடுவோனும் குணங்களைக் கடந்து பிரம்மத்தன்மையை பெறத்தகுவான்.
பரம பிரேமை சொரூபமாயிருக்கிற பக்தி யோகத்தால் யார் ஒருவன் அனைத்தையும் நாராயண சொரூபமாகக் கருதி அந்தர்முக திருஷ்டியில் ஆத்மானு சந்தானம் செய்துகொண்டே இருக்கிறானோ அவன் பிரம்ம சொரூபம் ஆகிறான். வெளிச்சம் வர இருள் இருக்குமிடம் தெரியாது மறைவதுபோன்று பிரம்ம சாக்ஷõத்காரத்தில் திரிகுணத்தைக் கடத்தல் மிக எளிதாகிறது.
பக்தனுக்கு ஈசுவரன் பல்வேறு உருவங்களில் தோன்றுகிறான், ஆனால் சமாதியில் பிரம்மஞானத்தை அடைந்தவனுக்கு அவன் அகண்ட நிராகார நிர்க்குணப் பிரம்மமாக இருக்கின்றான். இதில் தான் ஞானமும் பக்தியும் ஸமரஸப்படுகின்றன.
முக்குணங்களைக் கடக்க பக்தியைத் தவிர வேறு மார்க்கங்கள் இல்லையா? விடை வருகிறது :
27. ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச
ஸாஸ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச
ஹி அவ்யயஸ்ய ப்ரஹ்மண: ச-ஏனெனில் அழிவற்றதான பிரம்மத்துக்கும், அம்ருதஸ்ய -சாவற நிலைக்கும், ஸாஸ்வதஸ்ய தர்மஸ்ய ச-என்றும் இயலும் அறத்துக்கும், ஐகாந்திகஸ்ய ஸுகஸ்ய-தனிமையின்பத்துக்கும், அஹம் ப்ரதிஷ்டா-நானே உறைவிடம்.
பொருள் : சாவும் கேடுமற்ற பிரம்மத்துக்கு நானே நிலைக்களன்; என்றும் இயலும் அறத்துக்கும் தனிமையின்பத்துக்கும் நானே இடம்.
நான்கு யோகங்களும் இங்கு சமரசம் அடைகின்றன. முன் சுலோகத்தில் பக்தியும் அதன் மூலம் அடையப்படும் சகுண பிரம்மமும் விளக்கப்பட்டன. அழியாத மோக்ஷநிலையாகிய நிர்க்குண பிரம்மம் ஞானத்தின் மூலம் அடையப்படுகிறது. கர்மயோகத்தின் மூலம் பகவத் கைங்கரியம் செய்து சாசுவதமான தர்மம் அடையப்பெறுகிறது. பின்பு ராஜயோகத்தின் மூலம் அமிர்ததாரையினின்று உதிக்கும் ஒப்பற்ற சுகம் அடையப்பெறுகிறது. ஆக, இந்த நான்கு யோகங்களும் குணாதீதத்துக்குச் செல்ல உற்ற உபாயங்களாகின்றன. இந்த நான்கு யோகங்களும் சேர்ந்தே கையாளப்படவேண்டும். அவைகளை அப்படி அனுஷ்டிக்கின்றவன் குணங்களைக் கடந்துகொண்டிருப்பவன் ஆகிறான். இது கடைசிக் கேள்விக்கு விடையாகிறது.
ஒரு மனிதன் ஒரு காட்டு வழியே போய்க்கொண்டிருந்தான். வழியில் மூன்று திருடர்கள் அவனை மடக்கிப் பிடித்துக்கொண்டனர். அவனிடம் இருந்த பொருள்கள் எல்லாவற்றையும் அவர்கள் பிடுங்கிக்கொண்டனர். அப்பால் முதல் திருடன் இவனை உயிருடன் வைத்திருப்பதில் என்ன லாபம்? என்று சொல்லித் தன் கத்தியை உருவி அவனை வெட்டப் போனான். அப்போது இரண்டாவது திருடன் இவனைக் கொல்வதால் லாபம் என்ன? கை கால்களைக் கட்டி ஒரு பக்கத்தில் போட்டுவிட்டுப்போகலாம், என்றான். உடனே அவர்கள் அப்படியே செய்து சாலையின் பக்கத்தில் அவனைப் போட்டுவிட்டுச் சென்றனர். அவர்கள் கொஞ்சதூரம் சென்றதும் மூன்றாவது திருடன் திரும்பி அவனிடம் வந்து, அப்பா, உனக்கு நோகிறதா? நான் உன் கட்டுகளை அவிழ்த்து, உன்னை விடுதலை செய்கிறேன், இரு என்று சொல்லிக் கட்டுகளை அவிழ்த்துவிட்டு என்னுடன் வா; வழியைக் காட்டுகிறேன் என்று வெகுதூரம் அழைத்துக்கொண்டு போனான். அப்பால் அவன், அதோ பார்; உன் வீடு தெரிகிறது, இந்த வழியே போவாயானால் சீக்கிரம் வீடுபோய்ச் சேருவாய் என்றான். இதைக் கேட்டதும் வழிப்போக்கன் நன்றியறிவுடன், அப்பா, நீ எனக்கு ஒரு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய். என்னுடன் கூட என் வீட்டுக்கு வரக்கூடாதா? என்று கேட்டான். அதற்குத் திருடன், நான் வரக்கூடாது. போலீஸார் வந்து என்னைப்பிடித்துக் கொள்வார்கள், என்று சொல்லிப் போய்விட்டான்.
இந்த உலகந்தான் அந்தக் காடு; ஸத்வ, ரஜஸ், தமோகுணங்கள் மேற்கூறிய மூன்று திருடர்கள். ஜீவன்தான் காட்டுவழியே போன பிரயாணி. ஆத்ம ஞானம் அவனிடம் இருந்த பொருள். தமோகுணமும் ரஜோகுணமும் உலக பந்தங்களாகிய சங்கிலியால் அவனைக் கட்டுகின்றன. உலக பந்தங்களிலிருந்து அவனை ஸத்துவ குணம் காப்பாற்றுகின்றது. ஸத்துவகுணத்தைச் சரணமடையும் ஜீவன் தமோ ரஜோகுணங்களின் பயன்களாகிய காமக்குரோதாதி மாயைகளினின்றும் விடுதலையடைகின்றது. உலக பந்தங்களினின்றும் ஜீவனைக் கரையேற்றுவது அந்த ஸத்துவகுணந்தான் என்றாலும் அந்த ஸத்துவகுணமும் ஒரு திருடனே. பரமபதத்துக்குச் செல்லும் வழிவரையில் ஒருவனை அது அழைத்துவந்து, அதோ உன் வீட்டைப்பார், என்று சொல்லிவிட்டு மறைந்துபோகிறது. ஸத்துவகுணமும் பரம பதத்தினருகே செல்லாது.