பதிவு செய்த நாள்
20
அக்
2011
10:10
புதுச்சேரி:இமாச்சல பிரதேசத்தில் நடந்த தசரா குழு திருவிழாவில் புதுச்சேரி மோகன கலாசார மைய மாணவர்கள் பங்கேற்று அசத்தினர்.சஞ்சீவி நகர் மோகன கலாசார மையம் சார்பில் கிராமப்புற மாணவ, மாணவியர்களுக்கு கிராமிய நடனம், இசை, ஓவியம், கலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த மையத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத்துறை மூலம் மோகன கலாசார மைய குழுவினர் தேர்வு செய்யப்பட்டு, இமாச்சல பிரதேசத்தில் உள்ள குளு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அங்கு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தசரா திருவிழாவில் இக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர்.உலக மற்றும் தேசிய கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்டிருந்த இவ்விழாவில் மோகன கலாசார மைய மாணவர்கள் தமிழ் கலாசார கலைகளாகிய தப்பாட்டம், கோலாட்டம், குச்சியாட்டம், சட்டியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் ஆப்ரிக்க இசையோடு தமிழ் கலாசார இசையை ஆடிப்பாடி அசத்தினர். மோகனம் குழுவினரை, குளு மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி பாராட்டி கவுரவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை இமாசலச் பிரதேச தசரா கமிட்டி அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.