பதிவு செய்த நாள்
09
பிப்
2017
02:02
சென்னை : சவுகார்பேட்டையில், ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள, கோவில் இடத்தை, அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். சென்னை, சவுகார்பேட்டை பள்ளியப்பன் தெருவில், அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான, ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள இடம், சவுகார்பேட்டை தங்கசாலை தெருவில் உள்ளது. அந்த இடத்தில், கடை வைத்திருக்கும் நபர், 20 ஆண்டுகளுக்கு மேலாக, வாடகை தராமல் இருந்தார். அதனால், வாடகை பாக்கி, 50 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. எனவே, கோவில் இடத்தை ஆக்கிரமித்து கடை வைத்திருந்த நபரை வெளியேற்ற, அறநிலையத்துறை இணை ஆணையர், கோவிலின் செயல் அலுவலருக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, கோவில் இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைக்கு, அறநிலையத்துறை அதிகாரிகள், நேற்று காலை, சீல் வைத்தனர்.