நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயில் தை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாகரை மூலவராக கொண்ட கோயில் நாகர்கோவில் நாகராஜா கோயில். இந்த கோயில் மூலஸ்தானம் இன்னும் ஓலை கூரையில்தான் உள்ளது. இங்குள்ள புற்று மண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு தை திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி பவனி வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. காலை 8.10 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன், தேவசம்போர்டு இ ணை ஆணையர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.இன்று ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.