பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் பக்தர்களின் அரோகரா, சரண கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் நடந்தது.
உலகப்புகழ்பெற்ற தைப்பூச திருவிழா பழநியில் பிப்.,3ல் துவங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை, விநாயகர், அஸ்திர தேவருடன் சண்முகநதி தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர். கலசங்கள் வைத்து யாகபூஜை நடந்தது.காலை 11:00 மணிக்கு முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானை தேரில் எழுந்தருளினர். பின் மாலை 4:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.பின் மாலை 4.50 மணிக்கு பக்தர்களின் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, பழநி ஆண்டவருக்கு அரோகரா” என சரணகோஷங்களுக்கிடையே மாலைதேரோட்டம் நடந்தது. மாலை 6:10 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இதில் சித்தனாதன் அன் சன்ஸ் சிவநேசன், கந்தவிலாஸ் செல்வக்குமார் உட்படஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் இன்று இரவு 8:00 மணிக்கு முத்துகுமாரசுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். பத்தாம்நாள் (பிப்.,12ல்) தெப்போற்சவத்துடன் விழா நிறைபெறுகிறது. குட்டி விமானம் கண்காணிப்பு : மலைக்கோயில், கிரிவீதிகளில் முதல் 30 நிமிடங்கள் வரை ஆளில்லா குட்டிவிமானத்தை பறக்கவிட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.