பதிவு செய்த நாள்
14
பிப்
2017
03:02
பொதுவாக, சிவபெருமான் அருவத் திருமேனி, உருவத் திருமேனி, அருவுருவத் திருமேனி என்று மூன்று விதமாக வெளிப்படுகிறார் என்று வேத நூல்கள் கூறுகின்றன. அருவத் திருமேனியை ஊனக்கண்ணால் காணமுடியாது. தட்சிணாமூர்த்தி, நடராஜர் போன்றவை உருவத் திருமேனிகள். சிவலிங்கம் அருவுருவத் திருமேனி ஆகும். சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் எனும் ஐந்து முகங்களிலிருந்து இருபத்தெட்டு ஆகமங்கள் தோன்றின. ஈசானம்: உச்சி நோக்கியுள்ள முகம். சோமாஸ்கந்தர், சபாபதி (நடராஜர்), ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர் ஆகியோர் இம்முகத்திலிருந்து உதித்தனர். இத்திருமுகத்தின் தொழில் அருளல்.
தத்புருஷம்: கிழக்கு நோக்கிய முகம். பிட்சாடனர், காமதகனர், காலசம்ஹாரர், ஜலந்தரவரதர், திரிபுராந்தகர் ஆகியோர் இந்த வதனத்தில் உதித்தவர்கள். இதன் தொழில் மறைத்தல்.
அகோரம்: இது மேற்கு நோக்கிய முகம். அழித்தல் தொழிலை ஆற்றுகிறது. கஜசம்ஹாரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி (அஞ்ஞானத்தை அழிக்கிறார்). கிராதமூர்த்தி, நீலகண்டர் ஆகியோர் இத்திருமுகத்திலிருந்து தோன்றினார்கள்.
வாமதேவம்: வடக்கு நோக்கிய முகம். காக்கும் தொழிலை ஆற்றுகிறது. கங்காளர், சக்ரதானர், கஜமுக அனுக்ரஹ மூர்த்தி, சண்டேச அனுக்ரஹர், ஏகபாத மூர்த்தி ஆகியோர் இத்திருமுகத்தினின்று அவதரித்தனர்.
சத்தியோஜாதம்: லிங்கோற்பவர், சுகாஸனர், உமா மகேஸ்வரர், சங்கர நாராயணர், அர்த்த நாரீஸ்வரர் ஆகிய மூர்த்தங்களின் ஆதாரமான இம்முகம் மேற்கை நோக்கியது. இதன் ஆற்றல் படைப்புத் தொழில்.