பதிவு செய்த நாள்
24
பிப்
2017
11:02
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாட நேற்று, மாவட்ட ஆட்சியர் தலைமையில் விரிவாக விவாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் அவதரித்த ஸ்ரீராமானுஜரின், ஆயிரமாவது ஆண்டு விழா, இந்நகரில் உள்ள உள்ள ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், ஏப்ரல், 21ல் துவங்கி, மே 1 வரை விமரிசையாக நடைபெற உள்ளது.இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். விழா ஏற்பாடுகள் மற்றும் பகதர்களுக்கான வசதிகளை, அரசின் பல்வேறு துறை சார்பில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர், கஜலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.இந்த ஆலோசனை கூட்டத்தில், முக்கிய துறையின் அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பணிகள் அட்டவணைப்படுத்தப்பட்டு, அவற்றை தீவிரப்படுத்த, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.