பதிவு செய்த நாள்
25
பிப்
2017
12:02
அரூர்: அரூர், அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவதற்காக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி, மலை அடிவாரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கட்டண கழிப்பறை கட்டப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த கழிப்பறை, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பூட்டியே கிடக்கிறது.
மேலும், குடிநீர் வசதியும் இல்லாததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடை மாற்றுவதற்கு அறைகள் இல்லாததால், குளித்து விட்டு வரும் பெண்கள் அவதிப்படுகின்றனர். எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கழிப்பறை, குடிநீர் மற்றும் உடை மாற்றுவதற்கு அறை என, வசதிகளை செய்து தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.