பதிவு செய்த நாள்
29
அக்
2011
11:10
ஆத்தூர்: ஆத்தூர் அருகே சின்னக் கல்வராயன் மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சின்ன திருப்பதி ஸ்ரீனிவாசமூர்த்தி பெருமாள் கோவிலில் நடந்த தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சேலம், விழுப்புரம் மாவட்ட எல்லையில், ஆத்தூர் அடுத்த தலைவாசல் சின்னக்கல்வராயன் மலையில், "சின்ன திருப்பதி எனும் இடத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அலமேலு மங்கை சமேத ஸ்ரீனிவாசமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் காலை 4 மணியளவில் சிறப்பு பூஜைகளும், காலை 9 மணிக்கு வன்னி மரம் குத்துதல், காலை 11.30 மணியளவில் ஸ்ரீனிவாச பெருமாள் அலமேலு மங்கையுடன் கோவிலை சுற்றி தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து வந்தனர். இதில், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஆத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி கிளை பணிமனையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.