பதிவு செய்த நாள்
06
மார்
2017
12:03
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலில், பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோற்சவம் துவங்கியது. இந்நிகழ்வில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் தொடர்ச்சியாக தினசரி, சந்திரசேகரர், ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதோடு, விழா நடக்கும் அனைத்து நாட்களும், இரவு தியாகராஜ சுவாமி வீதி உலா நடக்க உள்ளது.முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும், 9ம் தேதியும், திருக்கல்யாணம், 11ம் தேதி காலையும், இரவு மகிழடி சேவை மற்றும் 13ம் தேதி, பந்தம்பறி நிகழ்வுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.அய்யா அவதார திருநாள்
மணலி புதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி திருக்கோவிலில், அய்யா வைகுண்ட பரம்பொருளின், 185-வது ஆண்டு அவதார திருநாள் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, வண்ணாரப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் இருந்து, இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கார சாரட் வண்டியில், அய்யா அருளி செய்த அகில திரட்டு ஆகமத்தை வைத்து, ஊர்வலம் புறப்பட்டது. தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, திருவொற்றியூர், லிப்ட் கேட், எம்.எப்.எல்., வழியாக, மணலி புதுநகர் அய்யா கோவிலை சென்றடைந்தது. ஊர்வலத்தில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள், அய்யாவின் திருநாமக்கொடியை ஏந்திச் சென்றனர். ஊர்வலத்தைத் தொடர்ந்து, அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில், மதியம், 12:00 மணிக்கு, பணிவிடை, உச்சிபடிப்பு; மாலையில், ஊஞ்சல் சேவை தாலாட்டு, சரவிளக்கு பணிவிடை, அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல், வைகுண்ட ஜோதி ஏற்றுதல் நிகழ்வுடன், விழா நிறைவுற்றது.