உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் செல்லும் வழியில், சுமார் 2000 மீட்டர் உயரத்தில் திரியுக நாராயணன் என்ற திருத்தலம் அமைந்துள்ளது. புராணங்களில் கூறியுள்ளபடி இந்த இடம் சிவன் - பார்வதி திருமணம் நடந்த புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. இங்கு அவர்களின் திருமணத்திற்காக வளர்க்கப்பட்ட ஹோமகுண்டம் இன்றளவும் தொடர்ந்து எரிந்து கொண்டேயிருக்கிறது. கேதார்நாத் செல்லும் யாத்ரிகர்கள் இங்கு வந்து எரியும் ஹோமகுண்டத்தில் மரத்துண்டுகளைப் போட்டு சமர்ப்பணம் செய்து வழிபடுகிறார்கள் மூன்று யுகங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்தச் செயல் இன்றும் இடைவிடாது நடந்து வருகிறது. இந்தப் புனிதமான ஹோமகுண்டத்திலிருந்து எடுக்கப்படும் சாம்பலை விபூதியாக நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள். குறிப்பாக தம்பதிகளாக வரும் யாத்ரிகர்கள் இச்சாம்பலை நெற்றியில் இட்டுக்கொண்டால் சகல நன்மைகளும் அடைவார்கள் என நம்பப்படுகிறது.